வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | விருந்தோம்பல் |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 81 82 83 84 85 86 87 88 89 90 |
விருந்தோம்பல் (விருந்து + ஓம்பல்): விருந்து - விருந்தினர்; ஓம்பல் - போற்றுதல்
விருந்தினரை போற்றி, காத்து உபசரிக்கும் பண்பையும், அதன் சிறப்பையும் விளக்கும் அதிகாரம்.
இருந்தோம்பி (இருந்து + ஓம்பி): இருந்து - இருந்து (இல்லத்தில் இருந்து); ஓம்பி - பாதுகாத்து (பொருட்களை பாதுகாத்து)
இல் - இல்வாழ்க்கை
வாழ்வதெல்லாம் (வாழ்வது + எல்லாம்): வாழ்வது எல்லாம்
விருந்தோம்பி (விருந்து + ஓம்பி): விருந்து - விருந்தினர்களை; ஓம்பி - போற்றி
வேளாண்மை - உதவி
செய்தற் - செய்வதற்க்கு
பொருட்டு - காரணமாக
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும், காத்தும், இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு தக்க உதவிகளைச் செய்வதற்குத் தான்.
மு.வ உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும்.
பரிமேலழகர் உரை:
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
கலைஞர் உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு
வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
விருந்து - விருந்தினர்
புறத்ததா - வீட்டின் புறத்தில் (வெளியில்) இருக்க
தானுண்டல் (தான் + உண்டல்): தான் - தான் மட்டும்; உண்டல் - உண்ணுதல்
சாவா - சாவினை தராத
மருந்தெனினும் (மருந்து + எனினும்): மருந்து என்றாலும்
வேண்டல் - விரும்பும்
பாற்றன்று (பாற்று + அன்று): பாற்று - தன்மை, பண்பு; அன்று - இல்லை
விருந்தினராக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், அது விரும்பத் தக்க பண்பு அல்ல.
மு.வ உரை:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
பரிமேலழகர் உரை:
சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
கலைஞர் உரை:
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக
இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க
பண்பாடல்ல.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று
வருவிருந்து - வந்த விருந்தினரை
வைகலும் - நாள்தோறும்
ஓம்புவான் - பேணுபவன்
வாழ்க்கை - வாழ்க்கையானது
பருவந்து - வறுமையால் வருந்தி
பாழ்படுதல் - பாழாகுதல், கெடுதல்
இன்று - இல்லை
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று, பேணி மகிழ்பவரின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
மு.வ உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
பரிமேலழகர் உரை:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
கலைஞர் உரை:
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன்
காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
அகனமர்ந்து (அகன் + அமர்ந்து): அகன் - அகம், மனம்; அமர்ந்து - மகிழ்ந்து
செய்யாள் - செல்வம் எனும் திருமகள்
உறையும் - வசிப்பாள்
முகனமர்ந்து (முகன் + அமர்ந்து): முகன் - முகம்; அமர்ந்து - மகிழ்ந்து
நல்விருந்து - தகுந்த விருந்தினரை (அ) விருந்தினரை நல்ல விதத்தில்
ஓம்புவான் - பேணுபவன்
இல் - இல்லத்தில்
இனிய முகத்தோடு, மனம் மகிழ்ந்து, தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் மனமகிழ்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
மு.வ உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
பரிமேலழகர் உரை:
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்.
இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.
கலைஞர் உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர்
வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
வித்தும் - விதையும்
இடல் - இடுவது
வேண்டும் கொல்லோ - வேண்டுமொ? (கொல் - அசை நிலை)
விருந்தோம்பி (விருந்து + ஓம்பி): விருந்து - விருந்தினர்; ஓம்பி - போற்றி உபசரித்து
மிச்சில் - மீதம் இருப்பதை, மிஞ்சியதை
மிசைவான் - உண்ணுபவன்
புலம் - நிலத்தில்
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?; விதை இடாமலும் விளையும் (‘தானே விளையும்' என்பது குறிப்பெச்சம்).
மு.வ உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
பரிமேலழகர் உரை:
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ?
பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
கலைஞர் உரை:
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும்
பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப்
பயன்படுத்தாமல் இருப்பானா?
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?
செல்விருந்து - வந்து செல்கின்ற விருந்தினர்களை
ஓம்பி - பேணி உபசரித்து
வருவிருந்து - வரவிருக்கும் விருந்தினர்களை
பார்த்திருப்பான் - எதிர் நோக்கி பார்த்திருப்பவன்
நல்விருந்து - நல்ல விருந்தினன் ஆவான்
வானத்தவர்க்கு - தேவர்களுக்கு
வந்த விருந்தினரைப் பேணி உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், மறுமையில் வானத்தவர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான்.
மு.வ உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
பரிமேலழகர் உரை:
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன்.
வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.
கலைஞர் உரை:
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி
வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன்
எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன்
என்று வரவேற்றுப் போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
இனைத்துணை - இவ்வளவு தான்
தென்பதொன்றில்லை (என்பது + ஒன்றில்லை) - என்று ஒன்றுமில்லை
விருந்தின் துணை – விருந்தினரின் அளவு (தகுதியின் அளவு; துணை – அளவு)
துணை - அளவு
வேள்வி - வேள்வியின் (யாகத்தின்)
பயன் - பயன், நன்மை
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
மு.வ உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
பரிமேலழகர் உரை:
வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.
கலைஞர் உரை:
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப்பார்த்து விருந்தோம்பலை
ஒரு வேள்வியாகவே கருதலாம்.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
பரிந்தோம்பி (பரிந்து + ஓம்பி): பரிந்து - வருந்தி; ஓம்பி - பாதுகாத்து
பற்றற்றேம் - இழந்து விட்டோம்
என்பர் - என்று துன்பப்படுவர்
விருந்தோம்பி (விருந்து + ஓம்பி): விருந்து - விருந்தினர்; ஓம்பி - போற்றி உபசரித்து
வேள்வி - யாகம் செய்ய
தலைப்படாதார் - ஈடுபடாதவர்கள்
செல்வத்தை வருந்திக்காத்து, பின் அதனை இழந்து வருந்துவர், விருந்தினரைப் பேணும் வேள்வியில் ஈடுபடாதவர்கள்.
மு.வ உரை:
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.
பரிமேலழகர் உரை:
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.)
மணக்குடவர் உரை:
விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.
கலைஞர் உரை:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல்
எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என
வருந்துவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.
உடைமையுள் (உடைமை + உள்): உடைமை - செல்வம்; உள் - இடத்தில்
இன்மை - இல்லாத நிலை, வறுமை
விருந்தோம்பல் (விருந்து + ஓம்பல்): விருந்து - விருந்தினர்; ஓம்பல் - உபசரித்தல்
ஓம்பா - போற்றாத, உபசரிக்காத
மடமை - அறியாமை
மடவார்கண்: மடவார் - அறிவிலார்; கண் - இடத்தில்
உண்டு - உண்டு
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தோம்புதலைப் போற்றாத மடமை; அது, மூடரிடம் மட்டுமே இருக்கும்.
மு.வ உரை:
செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
பரிமேலழகர் உரை:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.
கலைஞர் உரை:
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள்
எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம்
பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
மோப்ப - முகர்ந்தால்
குழையும் - வாடிவிடும்
அனிச்சம் - அனிச்சமலர்
முகந்திரிந்து (முகம் + திரிந்து): முகம் - முகமானது; திரிந்து - மகிழ்ச்சியிலிருந்து மாறி
நோக்க - பார்த்தால்
குழையும் - வாடிவிடுவர்
விருந்து - விருந்தினர்
அனிச்சப்பூ முகர்ந்தவுடன் தான் வாடிவிடும்; ஆனால், முகம் மலராத வரவேற்பை பார்த்தவுடனேயே விருந்தினர் வாடிவிடுவர்.
மு.வ உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
பரிமேலழகர் உரை:
அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர்.
இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.
கலைஞர் உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது.அதுபோல்
சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.
Chapter (அதிகாரம்) | Hospitality (விருந்தோம்பல்) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 81 82 83 84 85 86 87 88 89 90 |
Hospitality
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha