வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | பகைமாட்சி |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | நட்பியல் |
குறள் - வரிசை | 861 862 863 864 865 866 867 868 869 870 |
பகைமாட்சி
மு.வ உரை:
தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை:
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. ('வலியார'் என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக.
இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
கலைஞர் உரை:
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே
பகைமாட்சி எனப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
மு.வ உரை:
ஒருவன் அன்புஇல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?
பரிமேலழகர் உரை:
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)
மணக்குடவர் உரை:
சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?
கலைஞர் உரை:
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல்,
தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
சாலமன் பாப்பையா உரை:
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலிமையை எப்படி அழிக்க முடியும்?
மு.வ உரை:
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
பரிமேலழகர் உரை:
அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)
மணக்குடவர் உரை:
அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன்.
.இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.
கலைஞர் உரை:
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,
இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன்
பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
மு.வ உரை:
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
பரிமேலழகர் உரை:
வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது.
இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.
கலைஞர் உரை:
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர்
வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும்
எளிதில் தோற்கடித்து விடலாம்.
சாலமன் பாப்பையா உரை:
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
மு.வ உரை:
ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனாவான்.
பரிமேலழகர் உரை:
வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது.
இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.
கலைஞர் உரை:
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல்,
பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில்
வெல்லப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
மு.வ உரை:
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
பரிமேலழகர் உரை:
காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன் பகை விரும்பப்படும்.
இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.
கலைஞர் உரை:
சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்
இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.
மு.வ உரை:
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை:
அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொளல் மன்ற வேண்டும் - சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும். (ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின, அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகையை உற்றிருந்தும் மாட்சியையில்லாதன செய்யுமவன் பகையினைத் துணிந்து ஒன்றனைக் கொடுத்தும் கொள்ளல் வேண்டும்.
மாணாதசெய்தலாவது பகைக்காவன செய்யாது பிறிது செயல். இஃது இவன் பகைசெய்யமாட்டானாதலால் அப்பகை கோடலாமென்றது.
கலைஞர் உரை:
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச்
செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக்
கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.
மு.வ உரை:
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
பரிமேலழகர் உரை:
குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. (குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)
மணக்குடவர் உரை:
குணங்களுள் யாதும் இலனாய்க் குற்றங்கள் பல உடையனாயின் அவன் துணையிலனாம்; அது மாற்றார்க்கு ஏமமாதலை உடைத்தாம்.
கலைஞர் உரை:
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,
அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.
மு.வ உரை:
அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கன் தொலைவில் நீங்காமல் நிற்கும்.
பரிமேலழகர் உரை:
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும்.
அறிவு- காரியவறிவு.
கலைஞர் உரை:
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும்
பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும்
இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.
மு.வ உரை:
கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.
பரிமேலழகர் உரை:
கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
கலைஞர் உரை:
போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம்
காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள்
எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.
Chapter (அதிகாரம்) | The Might of Hatred (பகைமாட்சி) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Friendship (நட்பியல்) |
Order (குறள் - வரிசை) | 861 862 863 864 865 866 867 868 869 870 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha