வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | பேதைமை |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | நட்பியல் |
குறள் - வரிசை | 831 832 833 834 835 836 837 838 839 840 |
பேதைமை
மு.வ உரை:
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்.
பரிமேலழகர் உரை:
பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல். (கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல்.
இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று
கலைஞர் உரை:
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று
தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை
என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.
மு.வ உரை:
ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும்.
பரிமேலழகர் உரை:
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல்.
இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.
கலைஞர் உரை:
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது
என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
மு.வ உரை:
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை அகியவை பேதையின் தொழில்கள்.
பரிமேலழகர் உரை:
நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில். (நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.)
மணக்குடவர் உரை:
நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில்.
இது பேதையார்செயல் கூறிற்று.
கலைஞர் உரை:
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத்
தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும்,
பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது
பேதைகளின் இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.
மு.வ உரை:
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை.
பரிமேலழகர் உரை:
ஓதி - மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை. (உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)
மணக்குடவர் உரை:
நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.
கலைஞர் உரை:
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு
உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு
நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.
மு.வ உரை:
எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
பரிமேலழகர் உரை:
பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை.
புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
கலைஞர் உரை:
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும்
சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.
மு.வ உரை:
ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற் கொண்டால் (அந்தச் செயல் முடிவுபெறாமல்) பொய்படும்; அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.
பரிமேலழகர் உரை:
கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும்.
புனைபூணல் - சிறைபடுதல்.
கலைஞர் உரை:
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர
முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக்
கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
மு.வ உரை:
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற. அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.
பரிமேலழகர் உரை:
பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து.
இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.
கலைஞர் உரை:
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக்
கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ள
சுற்றத்தாருக்குப் பயன்படாது.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
மு.வ உரை:
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போலாகும்.
பரிமேலழகர் உரை:
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.
கலைஞர் உரை:
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில்
ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும்
குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.
மு.வ உரை:
பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை. ஆகையால் பேதையருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
பரிமேலழகர் உரை:
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான்.
இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.
கலைஞர் உரை:
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;
ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்
ஏற்படுவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!
மு.வ உரை:
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல்.
இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.
கலைஞர் உரை:
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள், நுழைவது என்பது,
அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப்
போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
Chapter (அதிகாரம்) | Folly (பேதைமை) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Friendship (நட்பியல்) |
Order (குறள் - வரிசை) | 831 832 833 834 835 836 837 838 839 840 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha