வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | மன்னரைச் சேர்ந்தொழுதல் |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | அமைச்சியல் |
குறள் - வரிசை | 691 692 693 694 695 696 697 698 699 700 |
மன்னரைச் சேர்ந்தொழுதல்
மு.வ உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க. (கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க.
இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.
கலைஞர் உரை:
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல
அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.
மு.வ உரை:
அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
பரிமேலழகர் உரை:
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும். (ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேன்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து,அவர்தாமே எல்லாச் செல்வமும் நல்குவார் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்பைாம அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான்.
அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது.
கலைஞர் உரை:
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும்
விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான
ஆக்கத்தை அளிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.
மு.வ உரை:
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
பரிமேலழகர் உரை:
போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான். (அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வௌவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது.
இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது.
கலைஞர் உரை:
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள
விரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல்
இருக்கவேண்டும். அப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு தம் மீது
ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.
மு.வ உரை:
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.
பரிமேலழகர் உரை:
ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும்.
இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.
கலைஞர் உரை:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள்
பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து,
அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.
மு.வ உரை:
(அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
பரிமேலழகர் உரை:
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.)
மணக்குடவர் உரை:
யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க.
இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.
கலைஞர் உரை:
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக்
கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே
அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.
மு.வ உரை:
அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.
பரிமேலழகர் உரை:
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கி்ன்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க.
இது சொல்லுந் திறம் கூறிற்று.
கலைஞர் உரை:
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க
காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குரியவைகளை விலக்கி, விரும்பத்
தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.
மு.வ உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.
பரிமேலழகர் உரை:
வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக. ('வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும் வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக.
சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.
கலைஞர் உரை:
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்
பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.
மு.வ உரை:
(அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.
கலைஞர் உரை:
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று
ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள்
அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.
மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.)
மணக்குடவர் உரை:
யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார்.
இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில்,
ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள்
செய்ய மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
மு.வ உரை:
`யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.
பரிமேலழகர் உரை:
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும். (அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வௌவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும்
இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.
கலைஞர் உரை:
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத
செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.
Chapter (அதிகாரம்) | Conduct in the Presence of the King (மன்னரைச் சேர்ந்தொழுதல்) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Ministers of State (அமைச்சியல்) |
Order (குறள் - வரிசை) | 691 692 693 694 695 696 697 698 699 700 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha