வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | வாழ்க்கைத் துணைநலம் |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 51 52 53 54 55 56 57 58 59 60 |
இல்வாழ்க்கைக்கு உற்ற துணையான மனைவியின் பெருமை, பண்புகள், கடமை ஆகியவற்றை விளக்கும் அதிகாரம்.
மனைக்தக்க (மனை + தக்க): மனை - மனையறத்திற்கு; தக்க - தகுந்த
மாண்புடையளாகி (மாண்பு + உடையாள் + ஆகி): மாண்பு - சிறப்பு; உடையாளாகி - உடையவளாகி
தற்கொண்டான் - தன்னை கொண்டவனது
வளத்தக்காள் (வளம் + தக்காள்): வளம் - வளத்திற்கு, வருவாய்க்கு; தக்காள் - தக்கபடி (தகுந்தபடி) வாழ்பவள்
வாழ்க்கைத் துணை - வாழ்க்கைத் துணையான மனைவியாவாள்
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
பரிமேலழகர் உரை:
மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.
கலைஞர் உரை:
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு
குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.
மனைமாட்சி: மனை - இல்வாழ்க்கைக்குரிய; மாட்சி - சிறப்பு (பண்புகள்)
இல்லாள்கண் - துணைவியிடத்து [இல்லாள் - இல்லத்தை ஆள்பவள், மனைவி; கண் - இடத்து]
இல்லாயின் (இல் + ஆயின்): இல் – இல்லாது; ஆயின் - ஆகிவிட்டால்
வாழ்க்கை - இல்லற வாழ்க்கை
எனைமாட்சித்து (எனை + மாட்சித்து): எனை - மற்ற வகைகளில் எவ்வளவு; மாட்சித்து - சிறப்பு பெற்ற
ஆயினும் - ஆனாலும்
இல் - இல்லை
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பயனற்றதாகும்.
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால். ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
பரிமேலழகர் உரை:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.)
மணக்குடவர் உரை:
குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.
கலைஞர் உரை:
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு
சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
இல்லதென் (இல்லது + என்): இல்லது - இல்லாதது; என் - என்ன?
இல்லவள் - துணைவியின்
மாண்பானால் (மாண்பு + ஆனால்): சிறப்புடையவளாக (நற்பண்புகளுடன்) அமைந்துவிட்டால் [மாண்பு - சிறப்பு; ஆனால் - இருந்து விட்டால்]
உள்ளதென் (உள்ளது + என்): உள்ளது - உள்ளது; என் - என்ன?
இல்லவள் - துணைவியின்
மாணா - சிறப்பற்ற
கடை - இடத்து
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?
மு.வ உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
பரிமேலழகர் உரை:
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.
கலைஞர் உரை:
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.
அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?
பெண்ணின் - துணைவியை விட
பெருந்தக்க - மேம்பட்டது
யாவுள (யா + உள): யா - யாது; உள - உள்ளது?
கற்பென்னும் (கற்பு + என்னும்): கற்பு எனப்படும்
திண்மை - வலிமை
உண்டாக - உண்டாகியிருக்க
பெறின் - பெற்றால்
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?
மு.வ உரை:
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
பரிமேலழகர் உரை:
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.
கலைஞர் உரை:
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப்
பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?
சாலமன் பாப்பையா உரை:
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?
தெய்வம் - தெய்வத்தை
தொழாஅள் - தொழாதவளாய்
கொழுநன் - கணவனை
தொழுதெழுவாள் (தொழுது + எழுவாள்): தொழுது - வணங்கி; எழுவாள் - துயில்விட்டு எழும் மனைவியானவள்
பெய்யெனப் (பெய் + என): பெய் – பெய்க, பொழிக; என -என்றால்
பெய்யும் - பெய்யும், பொழியும்
மழை - மழை
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
மு.வ உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!
பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
கலைஞர் உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி
அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி
நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்
கொள்பவளாவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
தற்காத்து - தன்னையும் கற்பினால் காத்து
தற்கொண்டாற் - தன்னை கொண்டவனை (கணவனை)
பேணி - பாதுகாத்து
தகைசான்ற: தகை - பெருமை, தகுதி; சான்ற - நிறைந்த
சொற்காத்து (சொல் + காத்து): புகழை காத்து
சோர்விலாள் (சோர்வு + இலாள்): சோர்வு – மனத்தளர்வு; இலாள் - இல்லாதவள்
பெண் - மனைவி
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
மு.வ உரை:
கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
பரிமேலழகர் உரை:
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.
கலைஞர் உரை:
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு,தமக்குப்
பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல்
இருப்பவள் பெண்.
சாலமன் பாப்பையா உரை:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
சிறைகாக்கும் - சிறை வைத்து காக்கும்
காப்பெவன் செய்யும் (காப்பு + எவன் + செய்யும்): காப்பு – காவல்; எவன் – என்ன? (என்ன பயன்?)
செய்யும் - செய்யும்
மகளிர் - பெண்கள்
நிறைகாக்கும் - நிறை குணத்தால் தன்னை தானே காக்கும்
காப்பே - காவலே
தலை - சிறப்பானது
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறந்தது.
மு.வ உரை:
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.
பரிமேலழகர் உரை:
மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.
கலைஞர் உரை:
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை
அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.
பெற்றான் - நற்பண்புகள் நிறைந்த கணவனை
பெறின் - அடைந்தால்
பெறுவர் - பெறுவார்கள்
பெண்டிர் - மனைவியர்
பெருஞ்சிறப்பு (பெரும் + சிறப்பு) - பெரிய சிறப்பு
புத்தேளிர் - தேவர்கள் [புத்தேள் - தேவர்]
வாழும் - வாழுகின்ற
உலகு - உலகில்
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்கள் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
மு.வ உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.
பரிமேலழகர் உரை:
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
கலைஞர் உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு
இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
புகழ்புரிந்த - புகழினை விரும்பும், நற்பெயர் விரும்பும்
இல்லிலோர்க்கு (இல் + இலோர்க்கு): இல் - இல்லாள், மனைவி; இலோர்க்கு - இல்லாதவர்களுக்கு
இல்லை - இல்லை
இகழ்வார்முன் - தன்னை இகழ்ந்து பேசுபவர் முன்
ஏறுபோல்: ஏறு - ஆண் சிங்கம்; போல் - போன்ற
பீடு - பெருமையான
நடை - நடை
புகழை காக்கவிரும்பும் மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை இகழ்ந்து பேசுபவர் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
மு.வ உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.
பரிமேலழகர் உரை:
புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை.
ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.
கலைஞர் உரை:
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப்
பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய்
விடுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
மங்கலம் - நன்மை, அழகு
என்ப - என்பதாக கூறுவர்
மனைமாட்சி: மனை – மனைவி; மாட்சி - சிறப்புகள், நற்பண்புகள்
மற்று அதன் - அவைகளுக்கு
நன்கலம் (நன் + கலம்): நன் - நல்ல; கலம் - அணிகலன்
நன்மக்கட் பேறு: நன் - நல்ல; மக்கட்பேறு - மக்கள் செல்வம், பிள்ளைகள்
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
மு.வ உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.
பரிமேலழகர் உரை:
மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.
கலைஞர் உரை:
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும்
சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.
Chapter (அதிகாரம்) | The Worth of a Wife (வாழ்க்கைத் துணைநலம்) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 51 52 53 54 55 56 57 58 59 60 |
The Worth of a Wife
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha