வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | குற்றங்கடிதல் |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | அரசியல் |
குறள் - வரிசை | 431 432 433 434 435 436 437 438 439 440 |
குற்றங்கடிதல்
மு.வ உரை:
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
பரிமேலழகர் உரை:
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லா
தார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து.பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.
கலைஞர் உரை:
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள்
இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.
மு.வ உரை:
பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.
பரிமேலழகர் உரை:
இவறலும் - வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும் - நன்மையின நீங்கிய மானமும், மாணா உவகையும் - அளவிறந்த உவகையும் , இறைக்கு ஏதம் - அரசனுக்குக் குற்றம். (மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பு இறந்த மானம்' என்றார். அஃதாவது, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தந்தை தாய் என்றிவ' ரை(புறப். வெ. மா. பாடாண் -33) வணங்காமையும் முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது, கழிகண்ணோட்டம், பிறரும் , 'சினனே காமம் கழிகண்ணோட்டம்' என்றிவற்றை 'அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது' (பதிற்.22) என்றார். இவை இரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவை என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உலோபமும் நன்மையைக் கடந்த மானமும் நன்மையைத் தாரா மகிழ்ச்சியுமாகிய இம்மூன்றும் அரசர்க்குக் குற்றமாம்.
இது பொதுப்படக் கூறாது இறைக்கு என்றமையால் பெரும்பான்மையும் அரசர்க்கே வேண்டுமென்பது கூறிற்று.
கலைஞர் உரை:
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில்
மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.
மு.வ உரை:
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர்.
பரிமேலழகர் உரை:
பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர். பழிக்கு நாணுவார்.
கலைஞர் உரை:
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக்
கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
மு.வ உரை:
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.
பரிமேலழகர் உரை:
அற்றம் தருஉம் பகை குற்றமே - தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே, குற்றமே பொருளாகக் காக்க - ஆகலான், அக்குற்றம் தன்கண் வாராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும். (இவைபற்றி அல்லது பகைவர் அற்றம் தாராமையின் 'இவையே பகையாவன' என்னும் வடநூலார் மதம் பற்றி, 'குற்றம் அற்றம் தருஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டு என்பார், 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது 'அரும்பண்பினால் தீமை காக்க,' என்பதுபோல நின்றது.)
மணக்குடவர் உரை:
தமக்குப் பொருளாகக் குற்றம் வாராமற்காக்க: அக்குற்றந்தானே இறுதியைத் தரும் பகையும் ஆதலான்.
இது குற்றங் கடிய வேண்டு மென்றது.
கலைஞர் உரை:
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால்
குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.
பரிமேலழகர் உரை:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குற்றம் வரக்கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை, எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் - அது வந்தால் எரிமுகத்து நின்ற வைக்குவை போல அழிந்து விடும். ('குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர் என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி, 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனால் காக்கலாம் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும், அதனால் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையால் பெற்றாம்.)
மணக்குடவர் உரை:
துன்பம் வருவதன்முன், அதற்குத் தக்கது அறிந்து காவல் செய்யானது செல்வம் எரிமுன்னர்க்கிடந்த வைத்திரள் போலக் கெடும்.
இது முந்துற்றுக் காவல் செய்வன செய்யாமையும் குற்ற மென்றது.
கலைஞர் உரை:
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத்
தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால்
உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.
மு.வ உரை:
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?
பரிமேலழகர் உரை:
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த்தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின், இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது? (அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம், அது கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், என்குற்றம் ஆகும் என்றார். எனவே தன் குற்றம் கடிந்தவனே முறைசெய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும்அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச்சிறப்பு வகையால் கூறுப.)
மணக்குடவர் உரை:
தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம்.
இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர்
குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
சாலமன் பாப்பையா உரை:
முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
மு.வ உரை:
செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் உய்யுந்தன்மை இல்லாமல் அழியும்.
பரிமேலழகர் உரை:
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும். (செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின் 'கெடும்', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது. அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.
கலைஞர் உரை:
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம்
பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
மு.வ உரை:
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
பரிமேலழகர் உரை:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது. (இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று.
இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.
கலைஞர் உரை:
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது
பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல்
வாழ்வதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
மு.வ உரை:
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.
பரிமேலழகர் உரை:
எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக. (தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின் , அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக.
செய்யிற் கெடு மென்றவாறாயிற்று
கலைஞர் உரை:
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும்
தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.
மு.வ உரை:
தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.
பரிமேலழகர் உரை:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.)
மணக்குடவர் உரை:
காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம்.
நூலென்பது அவர்கற்ற கல்வி.
கலைஞர் உரை:
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல்
நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற்
போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.
Chapter (அதிகாரம்) | The Correction of Faults (குற்றங்கடிதல்) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Royalty (அரசியல்) |
Order (குறள் - வரிசை) | 431 432 433 434 435 436 437 438 439 440 |
The Correction of Faults
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha