வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | அறிவுடைமை |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | அரசியல் |
குறள் - வரிசை | 421 422 423 424 425 426 427 428 429 430 |
அறிவுடைமை
மு.வ உரை:
அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
பரிமேலழகர் உரை:
அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம். (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே.
இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.
கலைஞர் உரை:
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
மு.வ உரை:
மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
பரிமேலழகர் உரை:
சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)
மணக்குடவர் உரை:
உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது.
இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.
கலைஞர் உரை:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத்
தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
மு.வ உரை:
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
பரிமேலழகர் உரை:
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல் , நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)
மணக்குடவர் உரை:
யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது.
இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.
கலைஞர் உரை:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை
அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து
தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
மு.வ உரை:
தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.
பரிமேலழகர் உரை:
தான் எண்பொருள் ஆகச் செலச் சொல்லி - தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி, பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு - பிறர்வாய்க் கேட்கும் சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண வல்லது அறிவு. (உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது. சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
அறிதற்கரிய பொருளவாகிய சொற்களைத் தெளியப் பொருளாம்படி பிறரிசையச் சொல்லிப் பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது அறிவாவது.
இது சொற்பொருள் காண்ட லறிவென்றது.
கலைஞர் உரை:
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின்
இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான
கருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.
மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
பரிமேலழகர் உரை:
உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம். ('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு.
இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
கலைஞர் உரை:
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு
இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே
அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
மு.வ உரை:
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
பரிமேலழகர் உரை:
உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
கலைஞர் உரை:
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ
அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
மு.வ உரை:
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
பரிமேலழகர் உரை:
அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
பிற்பயக்குமது அறிவார் அறிவுடையாராவார், அதனை யறியாதவர் அறிவில்லாதவராவர்.
இது மேற் சொல்லுவன எல்லாம் தொகுத்துக் கூறிற்று.
கலைஞர் உரை:
ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படியிருக்குமென
அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க
மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
மு.வ உரை:
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.
பரிமேலழகர் உரை:
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். (பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாதல்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில்.
மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.
கலைஞர் உரை:
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.
அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.
மு.வ உரை:
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை:
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு - வரக்கடவதாகிய அதனை முன் அறிந்து காக்கவல்ல அறிவினை உடையார்க்கு, அதிர வருவது ஓர் நோய் இல்லை - அவர் நடுங்க வருவதொரு துன்பமும் இல்லை. ('நோய்' என வருகின்றமையின், வாளா 'எதிரதா' என்றார். இதனான் காக்கலாம் காலம் உணர்த்தப்பட்டது. காத்தல் - அதன் காரணத்தை விலக்குதல். அவர்க்குத் துன்பம்இன்மை இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
துன்பம் வருவதற்கு முன்பே வருமென்று நினைத்துக் காக்கும் அறிவையுடையார்க்கு நடுங்க வருவதொரு துன்பம் இல்லை.
இது முன்னை வினையால் வருந் துன்பமும் முற்பட்டுக் காக்கின் கடிதாக வாராதென்றது.
கலைஞர் உரை:
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி
தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
சாலமன் பாப்பையா உரை:
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
மு.வ உரை:
அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.
பரிமேலழகர் உரை:
அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர், அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர். (செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர்.
இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை;
அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
Chapter (அதிகாரம்) | The Possession of Knowledge (அறிவுடைமை) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Royalty (அரசியல்) |
Order (குறள் - வரிசை) | 421 422 423 424 425 426 427 428 429 430 |
The Possession of Knowledge
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha