தினம் ஒரு குறள்

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அவையஞ்சாமை (குறள் எண்: 726)

பொருளுரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
உறுப்பினர் பகுதி
 

திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.  

உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.

இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.

வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.

இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

திருக்குறளின் வேறு பெயர்கள்:

1) முப்பால்   2) உத்தரவேதம்   3) தெய்வநூல்   4) பொதுமறை

5) பொய்யாமொழி   6) வாயுறை வாழ்த்து   7) தமிழ் மறை   8) திருவள்ளுவம்

 

திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.

 

 

 

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறதுஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர்    2) தெய்வப்புலவர்   3) நான்முகனார்   4) தேவர்   5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார்   7) பெருநாவலர்   8) புலவர்   9) பொய்யில் புலவர்

புறங்கூறாமை
அதிகாரம் புறங்கூறாமை
குறள் - பால் அறத்துப்பால்
குறள் - இயல் இல்லறவியல்
குறள் - வரிசை 181 182 183 184 185 186 187 188 189 190
அதிகார விளக்கம்:

புறங்கூறாமை = புறம் + கூறாமை


அருகில் இல்லாத ஒருவரைப் பற்றி இகழ்ந்து பேசுவது புறங்கூறுதல் ஆகும்; அவ்வாறு இகழ்ந்து பேசாதிருத்தல் புறங்கூறாமை என்னும் அறம் ஆகும். புறங்கூறாமை என்னும் அறத்தின் நன்மையினையும், புறங்கூறுவோர்க்கு நேரும் தீமைகளையும், புறங்கூறுதலை விலக்கும் வழிகளையும் கூறும் அதிகாரம்.

 


அறம்கூறா னல்ல செயினு மொருவன்
புறம்கூறா னென்ற லினிது.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

பதவுரை:

அறங்கூறான் (அறம் + கூறான்): அறத்தை செய்யாதவனாய் (கூறான் - செய்யாதவன்)

அல்ல செயினும் - அறம் அல்லாதவற்றை செய்தாலும்

ஒருவன் - ஒரு மனிதன்

புறங்கூறான் (புறம் + கூறான்): புறம் கூறாதவனாய்

என்றல் - என்று இருத்தல்

இனிது - நல்லது

பொருளுரை:

ஒருவன்அறத்தைப்போற்றிக்கூறாதவனாய்அறமல்லாதவற்றைச்செய்தாலும்மற்றவனைப்பற்றிப்புறங்கூறாமல்இருக்கிறான்என்றுசொல்லப்படுதல்நல்லது.

 

மு.வ உரை:

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும் மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

பரிமேலழகர் உரை:

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை:

ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்,

இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

கலைஞர் உரை:

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற
சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு
நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

பதவுரை:

அறனழீஇ (அறன்+ அழீஇ): அறன் - அறத்தை, அழீஇ - அழித்துப் பேசி

அல்லவை - அறம் அல்லாதவற்றை

செய்தலின் - செய்வதை விட

தீதே - தீமையானது

புறனழீஇ (புறன் + அழீஇ): புறத்தில் இருப்பவரை (காணாத போது) இழிவாகப் பேசி

பொய்த்து - கண்டபோது அவரிடம் பொய்யாக

நகை - சிரித்துப் பேசுதல்

பொருளுரை:

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

 

மு.வ உரை:

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

பரிமேலழகர் உரை:

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)

மணக்குடவர் உரை:

அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத
விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்.

இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

கலைஞர் உரை:

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப்  பேசிவிட்டு
அவர்   இல்லாத   இடத்தில்   அவரைப்  பற்றிப் பொல்லாங்கு பேசுவது
அறவழியைப்   புறக்கணித்து  விட்டு,  அதற்கு  மாறான   காரியங்களைச்
செய்வதைவிடக் கொடுமையானது.

சாலமன் பாப்பையா உரை:

அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறம்கூறு மாக்கந் தரும்.

புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும்.

பதவுரை:

புறங்கூறி - புறம்பேசி

பொய்த்து - காணும் போது பொய்யாகப் புகழ்ந்து பேசி

உயிர் வாழ்தலின் - உயிர் வாழ்வதை விட

சாதல் - சாவது, இறந்து விடுவது

அறங்கூறும் - அற நூல்கள் கூறும்

ஆக்கந் தரும் - நற்பயனைத் தருவதாகும்

பொருளுரை:

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

 

மு.வ உரை:

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை:

புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.)

மணக்குடவர் உரை:

காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

கலைஞர் உரை:

கண்ட   இடத்தில்   ஒன்றும்,  காணாத   இடத்தில் வேறொன்றுமாகப்
புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று.

சாலமன் பாப்பையா உரை:

காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

பதவுரை:

கண்ணின்று (கண் + நின்று): கண் - கண் முன்; நின்று -  நின்று கொண்டு

கண்ணற (கண் + அற): கண் - கண்ணோட்டம், இரக்கம்; அற - இல்லாத

சொல்லினும் - சொற்களைச் சொன்னாலும்

சொல்லற்க - சொல்லாதிருக்கவும்

முன்னின்று (முன் + இன்று): முன் இல்லாதபோது (இன்று - இல்லாத)

பின்நோக்கா - பின் விளைவுகளை நோக்காமல்

சொல் - சொல்லுதல்

பொருளுரை:

எதிரே நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

 

மு.வ உரை:

எதிரே நின்று கணணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

பரிமேலழகர் உரை:

கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை:

ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக,

இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

கலைஞர் உரை:

நேருக்கு    நேராக  ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்   நேரில்
இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புண்மையாற் காணப் படும்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.

பதவுரை:

அறம்சொல்லும் - அறத்தை உயர்வெனச் சொல்லும்

நெஞ்சத்தான் - நெஞ்சமுடையவன்

அன்மை - இல்லாமை, அறம் இல்லாததை

புறம்சொல்லும் - புறம் பேசுகின்ற

புன்மையால் - சிறுமையான குணத்தால்

காணப்படும் - அறிந்து கொள்ளமுடியும்

பொருளுரை:

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

 

மு.வ உரை:

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

பரிமேலழகர் உரை:

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)

மணக்குடவர் உரை:

ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும்.

இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.

கலைஞர் உரை:

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே
அவன்    அறவழி   நிற்பவன்  அல்லன்  என்பதை  எளிதில்  தெரிந்து
கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

பதவுரை:

பிறன்பழி - பிறருடைய குறையை

கூறுவான் - கூறுகின்றவன்

தன் - தன்னுடைய

பழியுள்ளும் - பழிகளின் உள்ளும்

திறன் - அதன் தன்மையை (குற்றத்தன்மையை)

தெரிந்து - ஆராய்ந்து தெரிந்து

கூறப்படும் - பிறரால் கூறப்படும்

பொருளுரை:

மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

 

மு.வ உரை:

மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

பரிமேலழகர் உரை:

பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)

மணக்குடவர் உரை:

பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.

கலைஞர் உரை:

பிறர்மீது  ஒருவன்    புறங்கூறித்  திரிகிறான் என்றால் அவனது பழிச்
செயல்களை   ஆராய்ந்து  அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது
கூற நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

பதவுரை:

பகச்சொல்லி - பிரிவு ஏற்படும்படி புறம் சொல்லி (பக - பிளவு..."நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல்")

கேளிர் - சுற்றத்தார், உறவினர்

பிரிப்பர் - பிரியும்படி செய்வர்

நகச்சொல்லி - மகிழுமாறு சொல்லி

நட்பாடல் (நட்பு + ஆடல்): நட்பு கொள்ளுதல்

தேற்றாதவர் - அறியாதவர், உணராதவர்

பொருளுரை:

மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.

 

மு.வ உரை:

மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.

பரிமேலழகர் உரை:

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)

மணக்குடவர் உரை:

நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார்.

இது நட்டவரை யிழப்பர் என்றது.

கலைஞர் உரை:

இனிமையாகப் பழகி  நட்புறவைத்  தொடரத்  தெரியாதவர்கள், நட்புக்
கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லெதிலார் மாட்டு.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

பதவுரை:

துன்னியார் - நெருங்கிப் பழகுபவர்

குற்றமும் - குற்றங்குறைகளை

தூற்றும் - பலர் அறியப் பழித்துப் பேசும்

மரபினார் - தன்மையுடையவர்கள்

என்னைகொல் - எப்படிப் பட்டதாய் இருக்குமோ?

ஏதிலார் மாட்டு - பழக்கமில்லாத அயலாரிடத்தில்

பொருளுரை:

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

 

மு.வ உரை:

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

பரிமேலழகர் உரை:

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)

மணக்குடவர் உரை:

தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ?

இது யாவரோடும் பற்றிலரென்றது.

கலைஞர் உரை:

நெருங்கிப்   பழகியவரின்  குறையைக்கூடப்   புறம்  பேசித் தூற்றுகிற
குணமுடையவர்கள்  அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச
மாட்டார்கள்?

சாலமன் பாப்பையா உரை:

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

அறன்நோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

பதவுரை:

அறன்நோக்கி - அறம் எனக் கருதி
ஆற்றுங்கொல் - தாங்கிக் கொண்டிருக்கிறதோ?
வையம் - நிலம், பூமி
புறன்நோக்கி - இல்லாத நேரம் பார்த்து
புன்சொல் - பழிச்சொற்களை
உரைப்பான் - பேசுபவனுடைய
பொறை - சுமை, உடல் சுமை

பொருளுரை:

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

 

மு.வ உரை:

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

பரிமேலழகர் உரை:

புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை:

பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.

இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

கலைஞர் உரை:

ஒருவர்  நேரில்  இல்லாதபோது  பழிச்சொல் கூறுவோனுடைய உடலை
‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

ஏதிலார் குற்றம்போற் றம்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பதவுரை:

ஏதிலார் - அயலார்
குற்றம்போல் - குற்றங்குறைகளை கண்டு பேசுவதுபோல்
தங்குற்றம் - தனது குற்றங்களை
காண்கிற்பின் - காண்பவராக இருந்தால்
தீதுண்டோ (தீது + உண்டோ) - தீமை உண்டாகுமோ?
மன்னும் - நிலைபெற்ற
உயிர்க்கு - உயிர்க்கு, உயிர் வாழ்வுக்கு

பொருளுரை:

அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

 

மு.வ உரை:

அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

பரிமேலழகர் உரை:

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.]

மணக்குடவர் உரை:

பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.

இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

கலைஞர் உரை:

பிறர்  குற்றத்தைக்  காண்பவர்கள்  தமது  குற்றத்தையும்    எண்ணிப்
பார்ப்பார்களேயானால்  புறங்கூறும்   பழக்கமும்  போகும்;  வாழ்க்கையும்
நிம்மதியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:

புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
Not Backbiting
Chapter (அதிகாரம்) Not Backbiting (புறங்கூறாமை)
Section (குறள் - பால்) Virtue (அறத்துப்பால்)
Chapter Group (குறள் - இயல்) Domestic Virtue (இல்லறவியல்)
Order (குறள் - வரிசை) 181 182 183 184 185 186 187 188 189 190
Chapter Description:

Not Backbiting


அறம்கூறா னல்ல செயினு மொருவன்
புறம்கூறா னென்ற லினிது.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

Translations:

Rev. Dr. G.U.Pope:

Though virtuous words his lips speak not, and all his deeds are ill,<br>If neighbour he defame not, there's good within him still.

Yogi Shuddanandha

Though a man from virtue strays, <br>To keep from slander brings him praise.
Meaning:

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Than he who virtue scorns, and evil deeds perfoms , more vile,<br>Is he that slanders friend, then meets him with false smile.

Yogi Shuddanandha

Who bite behind, and before smile<br>Are worse than open traitors vile.
Meaning:

To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறம்கூறு மாக்கந் தரும்.

புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

'Tis greater gain of virtuous good for man to die,<br>Than live to slander absent friend, and falsely praise when nigh.

Yogi Shuddanandha

Virtue thinks it better to die,<br>Than live to backbite and to lie.
Meaning:

Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

In presence though unkindly words you speak, say not,<br>In absence words whose ill result exceeds your thought.

Yogi Shuddanandha

Though harsh you speak in one's presence <br>Abuse is worse in his absence.
Meaning:

Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it

அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புண்மையாற் காணப் படும்.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

The slanderous meanness that an absent friend defames,<br>'This man is words owns virtue, not in heart,' proclaims.

Yogi Shuddanandha

Who turns to slander makes it plain <br>His praise of virtue is in vain.
Meaning:

The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Who on his neighbours' sins delights to dwell,<br>The story of his sins, culled out with care,the world will tell.

Yogi Shuddanandha

His failings will be found and shown, <br>Who makes another's failings known.
Meaning:

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாட றேற்றா தவர்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

With friendly art who know not pleasant words to say,<br>Speak words that sever hearts, and drive choice friends away.

Yogi Shuddanandha

By pleasing words who make not friends <br>Sever their hearts by hostile trends.
Meaning:

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives

துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா
ரென்னைகொ லெதிலார் மாட்டு.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Whose nature bids them faults of closest friends proclaim,<br>What mercy will they show to other men's good name?

Yogi Shuddanandha

What will they not to strangers do<br>Who bring their friends' defects to view?
Meaning:

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

அறன்நோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

Translations:

Rev. Dr. G.U.Pope:

'Tis charity, I ween, that makes the earth sustain their load,<br>Who, neighbours' absence watching, tales or slander tell abroad.

Yogi Shuddanandha

The world in mercy bears his load <br>Who rants behind words untoward
Meaning:

The world through charity supports the weight of those who reproach others observing their absence

ஏதிலார் குற்றம்போற் றம்குற்றங் காண்கிற்பிற்
றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

Translations:

Rev. Dr. G.U.Pope:

If each his own, as neighbours' faults would scan,<br>Could any evil hap to living man?

Yogi Shuddanandha

No harm would fall to any man <br>If each his own defect could scan.
Meaning:

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?

 
துரிதத் தேடல்
 எண் வரிசை
 அகர வரிசை