வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | ஒழுக்கமுடைமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 131 132 133 134 135 136 137 138 139 140 |
ஒழுக்க நெறி நின்று வாழ்தலின் பயனையும், சிறப்பையும் கூறும் அதிகாரம்.
ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம் - ஒழுக்கமானது
விழுப்பந்தரலான் (விழுப்பம் + தரலான்): விழுப்பம் - சிறப்பு; தரலான் - தருவதால்
ஒழுக்கம் - அவ்வொழுக்கம்
உயிரினும் - உயிரைவிட மேலாக
ஓம்பப்படும் - போற்றப்படும்
ஒழுக்கம், ஒருவர்க்கு சிறப்பைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கத்தை, உயிரை விட மேலானதாக போற்றிக் காக்க வேண்டும்.
மு.வ உரை:
ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும்.
இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.
கலைஞர் உரை:
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே
உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.
பிரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் மஃதே துணை.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
பரிந்தோம்பி (பரிந்து + ஓம்பி): பரிந்து - வருந்தி, துன்பத்திலும்; ஓம்பி - போற்றி
காக்க - காக்க வேண்டும்
ஒழுக்கம் - ஒழுக்கத்தை
தெரிந்தோம்பி (தெரிந்து + ஓம்பி): தெரிந்து - ஆராய்ந்து தெரிந்து; ஓம்பி - போற்றி
தேரினும் - தேர்ந்து தெரிந்து கொண்டாலும்
அஃதே - அதுவே
துணை - துணையாகும்
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து தெளிந்தாலும், ஒழுக்கமே வாழ்க்கையில் துணை என்பது விளங்கும்.
மு.வ உரை:
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்.
இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.
கலைஞர் உரை:
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த
துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.
ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
மிழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் - ஒழுக்கத்தினை
உடைமை - உடையவராக இருத்தல்
குடிமை - உயர்ந்த குடிபிறப்பின் தன்மை
இழுக்கம் - ஒழுக்கம் தவறுதல்
இழிந்த - இழிவான
பிறப்பாய் விடும் - குடிப்பிறப்பாகி விடும்
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுகிறவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
மு.வ உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.
பரிமேலழகர் உரை:
ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும்.
இது குலங்கெடுமென்றது.
கலைஞர் உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்
காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த
குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
சாலமன் பாப்பையா உரை:
தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
மறப்பினும் - மறந்து போனாலும்
ஓத்து - ஓதுதல்
கொளலாகும் (கொளல் + ஆகும்): கொளல் - கொள்ளுதல்; ஆகும் - முடியும்
பார்ப்பான் – பார்ப்பனன், கல்வி கற்றவன்
பிறப்பொழுக்கங்குன்றக் (பிறப்பு + ஒழுக்கம் + குன்ற): பிறப்பு - பிறப்பிற்கு ஏற்ற; ஒழுக்கம் - ஒழுக்கத்தினை; குன்ற - குறைய
கெடும் - கெட்டு விடும் (குலம், வாழ்வு)
பார்ப்பனன் தான் கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால், அவன் பிறப்புக்கு ஏற்ற ஒழுக்கத்திலிருந்து தவறினால் அவனது குலமும், வாழ்வும் கெடும்.
மு.வ உரை:
கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
பரிமேலழகர் உரை:
ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)
மணக்குடவர் உரை:
பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்
கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும்
ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
அழுக்காறுடையான் கண் (அழுக்காறு + உடையான்கண்): அழுக்காறு - பொறாமை; உடையான்கண் - உடையவன் இடத்தில் (கண் - இடத்தில்)
ஆக்கம் - செல்வம்
போன்று - போல
இல்லை - இல்லாமல் போகும்
ஒழுக்கமிலான்கண் (ஒழுக்கம் + இலான்கண்): ஒழுக்கம் - ஒழுக்கப் பண்பு; இலான்கண் - இல்லாதவன் இடத்தில் (கண் - இடத்தில்)
உயர்வு - உயர்வு, சிறப்பு
பொறாமை குணம் உடையவனிடம் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு என்பதும் இல்லை.
மு.வ உரை:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
பரிமேலழகர் உரை:
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. (உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? கொடுப்பது அழுக்கறுப்பான் 'சுற்ற'மும் (குறள்.166)நல்கூர்தலின். 'உயர்வு' - உயர் குலமாதல்.)
மணக்குடவர் உரை:
மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற் போல ஒழுக்கமில்லாதான் மாட்டு மிகுதியில்லையாம்.
இஃது உயர்ச்சியில்லையா மென்றது.
கலைஞர் உரை:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும்
வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
ஒழுக்கத்தின் - ஒழுக்கத்திலிருந்து
ஒல்கார் - விலக மாட்டார்கள்
உரவோர் - மன பலம் உடையோர்
இழுக்கத்தின் - ஒழுக்கம் தவறும் இழுக்கினால்
ஏதம் - குற்றம், பழி
படுபாக்கறிந்து (படு + பாக்கு + அறிந்து): படுபாக்கு - எதிர்வரும், உண்டாகின்ற (பாக்கு - எதிர்காலங்காட்டும்வினையெச்சவிகுதி); அறிந்து - அறிந்து கொண்டு
ஒழுக்கம் தவறுதலால் குலத்தாழ்வு உண்டாகும் என அறிந்த மனவலிமை உடைய சான்றோர்கள், ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.
மு.வ உரை:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
பரிமேலழகர் உரை:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் - செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து - அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார்: அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை
யறிந்து.இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.
கலைஞர் உரை:
மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை
உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
ஒழுக்கத்தின் - ஒழுக்கத்தினால்
எய்துவர் - அடைவர்
மேன்மை - உயர்வு
இழுக்கத்தின் - ஒழுக்கம் தவறும் இழுக்கினால்
எய்துவர் - அடைவர்
எய்தா - அடையக் கூடாத
பழி – பழி, தாழ்வு
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் தவறினால் வேண்டாத பழியை அடைவர்.
மு.வ உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
பரிமேலழகர் உரை:
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.
கலைஞர் உரை:
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி
வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.
நன்றிக்கு - நன்மைக்கு
வித்தாகும் (வித்து + ஆகும்): விதையாகும், காரணமாகும் (வித்து - விதை)
நல்லொழுக்கம் (நல்ல + ஒழுக்கம்): நல்ல ஒழுக்கப் பண்பு
தீயொழுக்கம் (தீய + ஒழுக்கம்): தீய ஒழுக்கம்
என்றும் - எப்போதும்
இடும்பை - துன்பம்
தரும் - தரும், கொடுக்கும்
நல்லொழுக்கம், வாழ்வின் நன்மைக்கு விதையாக அமையும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
மு.வ உரை:
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை:
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.
கலைஞர் உரை:
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும்.
தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
ஒழுக்க முடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்கமுடையவர்க்கு (ஒழுக்கம் + உடையவர்க்கு): ஒழுக்கம் - ஒழுக்கப் பண்பு; உடையவர்க்கு - உடையவர்களுக்கு
ஒல்லாவே - இயலாது, முடியாது
தீய - தீய சொற்களை
வழுக்கியும் - தவறுதலாக கூட, மறந்தும் கூட
வாயாற் - வாயால்
சொலல் - சொல்லுதல்
தீய சொற்களை தவறியும்கூடத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
மு.வ உரை:
தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
பரிமேலழகர் உரை:
வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.)
மணக்குடவர் உரை:
தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.
கலைஞர் உரை:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம்
உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
உலகத்தோடு டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
உலகத்தோடு - உலக நன்னெறியோடு, உலக ஒழுக்கத்தோடு
ஒட்ட - ஒன்றுபட்டு
ஒழுகல் - நடந்து கொள்ளுதல்
பலகற்றும் - பல நூல்கள் கற்றிருந்தாலும்
கல்லார் – கற்காதவர்கள் (உலகோடு ஒன்றுபட கற்காதவர்கள்)
அறிவிலாதார் (அறிவு + இலாதார்): அறிவு - அறிவு; இலாதார் - இல்லாதவர்கள்
உலகத்தார் ஏற்றுக் கொண்ட ஒழுக்கப் பண்போடு பொருந்தி வாழக் கற்காதவர்கள், பல நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே ஆவர்.
மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
பரிமேலழகர் உரை:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்.
இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
கலைஞர் உரை:
உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்
கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே
ஆவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.
Chapter (அதிகாரம்) | The Possession of Decorum (ஒழுக்கமுடைமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 131 132 133 134 135 136 137 138 139 140 |
The Possession of Decorum
ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life
பிரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் மஃதே துணை.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid
ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
மிழிந்த பிறப்பாய் விடும்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth
மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed
அழுக்கா றுடையான்க ணாக்கம்போன் றில்லை
யொழுக்க மிலான்க ணுயர்வு.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்றில்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness
ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து.
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace
நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow
ஒழுக்க முடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully
உலகத்தோடு டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant