வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | பொழுதுகண்டிரங்கல் |
குறள் - பால் | காமத்துப்பால் |
குறள் - இயல் | கற்பியல் |
குறள் - வரிசை | 1221 1222 1223 1224 1225 1226 1227 1228 1229 1230 |
பொழுதுகண்டிரங்கல்
மு.வ உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்லை: (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கின்றாய்!
பரிமேலழகர் உரை:
(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய்.
இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
கலைஞர் உரை:
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர்
உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!
சாலமன் பாப்பையா உரை:
பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.
மு.வ உரை:
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
பரிமேலழகர் உரை:
(தன்னுட் கையாற்றை அதன்மேலிட்டுச் சொல்லியது.) மருள்மாலை - மயங்கிய மாலாய்; புன்கண்ணை -நீயும் எம்போலப் புன்கணுடையையாயிருந்தாய்; நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ - நின் துணையும் எம் துணை போல வன்கண்மையுடையதோ? கூறுவாயாக. (மயங்குதல் - பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண் - ஒளியிழத்தல்; அதுபற்றித் துணையும் உண்டாக்கிக் கூறினாள். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எமக்குத் துன்பஞ் செய்தாய்; நீயும் இன்பமுற்றிலை என்னும் குறிப்பால் 'வாழி' என்றாள்.)
மணக்குடவர் உரை:
மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும்.
இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
கலைஞர் உரை:
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல்
துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம்
அற்றதோ?
சாலமன் பாப்பையா உரை:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?
மு.வ உரை:
பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
பரிமேலழகர் உரை:
(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. (குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது.
இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
கலைஞர் உரை:
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன்
வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத்
துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.
மு.வ உரை:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவதுபோல் மாலைப்பொழுது(என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும்.
இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக்
கனத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.
மு.வ உரை:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன.?
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது? (கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்'? என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது.
அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் "காலை நேரத்துக்கு நான் செய்த
நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?" என்று
புலம்புகிறது.
சாலமன் பாப்பையா உரை:
காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?
மு.வ உரை:
மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர் என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
பரிமேலழகர் உரை:
('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன்.
இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.
கலைஞர் உரை:
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது
என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான்
அறிந்திருக்கவில்லை.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.
மு.வ உரை:
இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது
பரிமேலழகர் உரை:
('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)
மணக்குடவர் உரை:
இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.
கலைஞர் உரை:
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து,
மாலையில் மலரும் ஒரு நோயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
மு.வ உரை:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருந்தும் மாலைப் பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?
இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.
கலைஞர் உரை:
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை
அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை
என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில்
ஒலிக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.
மு.வ உரை:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னப்போல் துன்பத்தால் வருந்தும்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். ('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும்.
மதி - மானம்
கலைஞர் உரை:
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித்
துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.
மு.வ உரை:
(பிரிவுத்துன்பத்தால்) மாயாமல் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது.
இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.
கலைஞர் உரை:
பொருள் ஈட்டுவதற்குச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து
போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து
போகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
Chapter (அதிகாரம்) | Lamentations at Eventide (பொழுதுகண்டிரங்கல்) |
Section (குறள் - பால்) | Love (காமத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | The Post-marital love (கற்பியல்) |
Order (குறள் - வரிசை) | 1221 1222 1223 1224 1225 1226 1227 1228 1229 1230 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha