வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | தனிப்படர்மிகுதி |
குறள் - பால் | காமத்துப்பால் |
குறள் - இயல் | கற்பியல் |
குறள் - வரிசை | 1191 1192 1193 1194 1195 1196 1197 1198 1199 1200 |
தனிப்படர்மிகுதி
மு.வ உரை:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவர்.
பரிமேலழகர் உரை:
('காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி', என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை. (காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனி யாம் பெற்றிலேம்' என்பதா
மணக்குடவர் உரை:
தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர்.
இது தடையின்றி நுகரலாமென்றது.
கலைஞர் உரை:
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர்
விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப்
பெற்றவராவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.
மு.வ உரை:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர்வாழ்கின்றவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது.
இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு
பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது
போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.
மு.வ உரை:
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்குப் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்) 'மீண்டும் வந்தபின் வாழ்வோம்' என்று இருக்கும் செருக்குத் தகும்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு உலகின்கண் இருந்து உயிர்வாழ்வேமென்னுங் களிப்பு அமையும்.
இது, தலைமகள், இருந்தாலும் பயனில்லை: அதிற்சாதல் அமையுமென்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது.
கலைஞர் உரை:
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான்
இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.
மு.வ உரை:
தாம்விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
பரிமேலழகர் உரை:
('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நற்குணங்கள் பலவுடையரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் தம்மால் காதலிக்கப்பட்டவரால் தாம் காதலிக்கப்படாராயின், விருப்பமில்லாராவர்.
இது வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளுக்கு நீ இவ்வாறு கூறுவையாயின் நின்னைப் புகழ்கின்ற உலகத்தாருள் மிக வாழ்வார் யாரென்ற தோழிக்கு அவள் கூறியது. கொண்டான் காயிற் கண்டான் காயுமென்பது பழமொழி.
கலைஞர் உரை:
விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு
இல்லாதவராகவே கருதப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.
மு.வ உரை:
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
பரிமேலழகர் உரை:
('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நாம் காதலித்தார் நமக்கு யாதினைச் செய்வர்: தாம் காதலியாதவிடத்து.
கலைஞர் உரை:
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக்
காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப்
போகிறது?
சாலமன் பாப்பையா உரை:
நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
மு.வ உரை:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம்போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது.
இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக
இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர
வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை;
துயரமும் உருவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
மு.வ உரை:
(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
கலைஞர் உரை:
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய்
வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு
கொள்ளமாட்டாள் போலும்!
சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?
மு.வ உரை:
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் (பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப்போல் வன்கண்மை உடையவர் இல்லை,
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தம் காதலரிடத்துநின்று வரும் இனியசொற்களைக் கேளாது உயிர்வாழ்வாரைப்போல வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை.
கலைஞர் உரை:
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத
நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர்
யாரும் இருக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.
மு.வ உரை:
யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம். (இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.)
மணக்குடவர் உரை:
எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.
கலைஞர் உரை:
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து
இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
மு.வ உரை:
நெஞ்சமே! நீ வாழிய ! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. (உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.)
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று.
இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது
துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத்
தூர்ப்பது எளிதான வேலையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.
Chapter (அதிகாரம்) | The Solitary Anguish (தனிப்படர்மிகுதி) |
Section (குறள் - பால்) | Love (காமத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | The Post-marital love (கற்பியல்) |
Order (குறள் - வரிசை) | 1191 1192 1193 1194 1195 1196 1197 1198 1199 1200 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha