வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | கடவுள் வாழ்த்து |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | பாயிரவியல் |
குறள் - வரிசை | 01 02 03 04 05 06 07 08 09 10 |
உலகில் முழுமுதற் பொருளானவன் கடவுள் என்றும் அவனுடைய தன்மைகளையும் கூறும் அதிகாரம்.
அகர - முதல் எழுத்தான 'அ' (அகரம்)
முதல - முதலாக கொண்டன
எழுத்தெல்லாம் - உலகில் வழங்கி வரும் எழுத்துக்களெல்லாம்
['அதுபோல்' - உவம உருபு மறைந்துள்ளது]
ஆதிபகவன் - முதற்கடவுள்
முதற்றே - முதலாக கொண்டது (முதற்று - முதல்)
உலகு - உலகம்
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
இக்குறள், உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவம உருபு இல்லாததால், முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை அணி.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
கலைஞர் உரை:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
கற்றதினால் - கல்வி கற்றதினால், நூல்கள் பல கற்றதினால்
ஆய - உண்டான, ஆன
பயன் - பயனானது
என்கொல் - என்னவென்று கொல்வது?
வாலறிவன் (வால் + அறிவன்): வால் – தூய; அறிவன் - அறிவாற்றலில் சிறந்தவன்
நற்றாள் (நல்ல + தாள்): நல்ல - சிறந்த; தாள் - பாதங்கள்
தொழாஅர் - தொழாதவர்
எனின் - என்றால்
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?
மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
பரிமேலழகர் உரை:
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.
சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி
நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால்
என்ன பயன்? ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?
மலர்மிசை (மலர் + மிசை): மலர் - பூ; மிசை - மேல் (அன்பர்களின் மனம் எனும் மலர் மேல்)
ஏகினான் - சென்றவன்
மாணடி (மாண் + அடி): மாண் - சிறந்த; அடி - பாதங்கள்
சேர்ந்தார் - எப்பொதும் நினைப்பவர்கள்
நிலமிசை (நிலம் + மிசை): நிலம் - பூமி; மிசை - மேல்
நீடு – நிலைத்து (புகழுடன்)
வாழ்வார் – வாழ்வார்கள்
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர், இப்பூமியில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
பரிமேலழகர் உரை:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்)
மணக்குடவர் உரை:
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார்.
'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
கலைஞர் உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
வேண்டுதல் - விருப்பு, விருப்பம்
வேண்டாமை - வெறுப்பு
இலானடி (இலான் + அடி): இலான் - இல்லாதவன்; அடி - பாதம்
சேர்ந்தார்க்கு - எப்பொதும் மனதில் நினைப்பவர்க்கு
யாண்டும் - எக்காலத்திலும்
இடும்பை - துன்பங்கள்
இல – இல்லை
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
மணக்குடவர் உரை:
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.
பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை
இருள்சேர்: இருள் - அறியாமை எனும் இருள்; சேர் - சேர்த்த
இருவினையும் - இரண்டு வினைகளாகிய நல்வினை, தீவினை
சேரா - சேராது
இறைவன் - இறைவனின்
பொருள்சேர் - மெய்ப்பொருள் சேர்ந்த
புகழ்புரிந்தார் – புகழினை புரிந்துகொண்டவர்
மாட்டு - இடத்தில்
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற
விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை
பொறிவாயில்: பொறி - ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி; வாயில் - வாயிலாக, வழியாக
ஐந்தவித்தான் (ஐந்து + அவித்தான்): ஐந்து - ஐந்து ஆசைகளையும்; அவித்தான் - அறுத்தவன், அடக்கியவன்
பொய்தீர் - பொய் தீர்ந்த, உண்மையான
ஒழுக்க - ஒழுக்கமான
நெறிநின்றார்: நெறி - வழியில்; நின்றார் - வழுவாது நிற்பவர்
நீடு - நிலைத்து (புகழுடன்)
வாழ்வார் – வாழ்வார்கள்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நெடுங்காலம் புகழுடன் வாழ்வார்.
மு.வ உரை:
ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)
மணக்குடவர் உரை:
மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?
இது சாவில்லையென்றது.
கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும்
கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப்
பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்
தனக்குவமை (தனக்கு + உவமை): தனக்கு - தனக்கு; உவமை - ஒப்பு
இல்லாதான் - இல்லாதவனின்
தாள்சேர்ந்தார்க் கல்லால் (தாள் + சேர்ந்தார்க்கு + அல்லால்): தாள் - பாதங்கள்; சேர்ந்தார்க்கு - நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு; அல்லால் - அல்லாமல், பிறர்க்கு
மனக்கவலை - மனதின் கவலைகளை
மாற்றல் - மாற்றுவதற்கு, நீக்குவதற்கு
அரிது - ஆகாது, இயலாது
தனக்கு ஒப்புமை இல்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களின் மனக்கவலையை மாற்ற முடியாது.
மு.வ உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
பரிமேலழகர் உரை:
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது.
வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.
கலைஞர் உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
அறவாழி (அறம் + ஆழி): அறம் - நல்லொழுக்கங்கள் நிறைந்த; ஆழி - கடல்
அந்தணன் - சான்றோர்
தாள்சேர்ந்தார்க் கல்லால் (தாள் + சேர்ந்தார்க்கு + அல்லால்): தாள் - பாதங்கள்; சேர்ந்தார்க்கு - நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு; அல்லால் - அல்லாமல், பிறர்க்கு
பிறவாழி (பிற + ஆழி): பிற - மற்ற (பொருள், இன்பம்); ஆழி - கடல்களை
நீந்தல் - நீந்திக் கடத்தல்
அரிது - ஆகாது, முடியாது
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை சேர்ந்தவர் அல்லாமல் மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் நீந்திக் கடப்பது முடியாது.
மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.
பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)
மணக்குடவர் உரை:
அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது.
இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.
கலைஞர் உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே
விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான
காரியமல்ல.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்
கோளில் (கோள் + இல்): பயன் இல்லாது (கோள் - கொள்ளுதல்; இல் – இல்லாத)
பொறியின் - அறிவின், ஐம்பொறியின் (உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள்)
குணமிலவே (குணம் + இலவே): குணம் - தன்மை; இலவே - இல்லாததாகும்
எண்குணத்தான் - எட்டு குணங்களுடைய இறைவன்
(1. தன்வயத்தனாதல் - தனித்து இயங்கும் தன்மை
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. கட்டின்மை - பாசங்களின் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை)
தாளை - பாதங்களை
வணங்கா - வணங்காத
தலை – தலை
எட்டுக் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள் போல் இருந்தும் பயனற்றதாகிவிடும்
மு.வ உரை:
கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
பரிமேலழகர் உரை:
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.
உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்
கலைஞர் உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும்,
அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற
ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும்
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
பிறவி - இந்த பிறவி
பெருங்கடல் - பெரிய கடலினை
நீந்துவர் - நீந்திக் கடப்பார்கள்
நீந்தார் - நீந்தாது தவிப்பார்கள்
இறைவன் - இறைவனின்
அடி - பாதங்களை
சேராதார் – நினைக்காதவர்கள், வணங்காதவர்கள்
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் கடக்க முடியாது.
மு.வ உரை:
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
பரிமேலழகர் உரை:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர்,
தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த
முடியாமல் தவிக்க நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்
Chapter (அதிகாரம்) | The Praise of God (கடவுள் வாழ்த்து) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Prologue (பாயிரவியல்) |
Order (குறள் - வரிசை) | 01 02 03 04 05 06 07 08 09 10 |
The Praise of God
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
இக்குறள், உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவம உருபு இல்லாததால், முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை அணி.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha