வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | மானம் |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | குடியியல் |
குறள் - வரிசை | 961 962 963 964 965 966 967 968 969 970 |
மானம்
மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விடவேண்டும்.
பரிமேலழகர் உரை:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)
மணக்குடவர் உரை:
இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக.
இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.
கலைஞர் உரை:
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட
அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத்
தவிர்த்திடல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.
மு.வ உரை:
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.
கலைஞர் உரை:
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ்
வரவேண்டு மென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில்
ஈடுபடமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
மு.வ உரை:
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
பரிமேலழகர் உரை:
பெருக்கத்துப் பணிதல் வேண்டும் - குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - குறைந்த நல்குரவுளதாயவழிப் பணியாமை வேண்டும், (பணியாமை - தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்: செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.
கலைஞர் உரை:
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை
மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான
உணர்வும் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
பரிமேலழகர் உரை:
மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர், {அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)
மணக்குடவர் உரை:
தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.
கலைஞர் உரை:
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து
தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக்
கருதப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.
மு.வ உரை:
மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர்.
பரிமேலழகர் உரை:
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)
மணக்குடவர் உரை:
மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின்.
இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.
கலைஞர் உரை:
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி
அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய்
விடுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?
பரிமேலழகர் உரை:
இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது? (புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி?
இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.
கலைஞர் உரை:
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர்
பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத
சொர்க்கமா கிடைக்கும்?
சாலமன் பாப்பையா உரை:
உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?
மு.வ உரை:
மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது
பரிமேலழகர் உரை:
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.
கலைஞர் உரை:
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச்
செத்தொழிவது எவ்வளவோ மேல்.
சாலமன் பாப்பையா உரை:
இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.
மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?
பரிமேலழகர் உரை:
பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? ('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.)
மணக்குடவர் உரை:
தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்துச் சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ.
பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.
கலைஞர் உரை:
சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது
உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை
மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது
இழிவான செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?
மு.வ உரை:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
பரிமேலழகர் உரை:
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.)
மணக்குடவர் உரை:
ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமானைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.
கலைஞர் உரை:
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான்
என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள்
உயிரையே விட்டு விடுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.
மு.வ உரை:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.
பரிமேலழகர் உரை:
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு - எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். ('புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி - எய்துவர்,'(புறநா.27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.
கலைஞர் உரை:
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக்
கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.
Chapter (அதிகாரம்) | Honour (மானம்) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Miscellaneous (குடியியல்) |
Order (குறள் - வரிசை) | 961 962 963 964 965 966 967 968 969 970 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha