கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
அவையஞ்சாமை (குறள் எண்: 722)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | குடிமை |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | குடியியல் |
குறள் - வரிசை | 951 952 953 954 955 956 957 958 959 960 |
குடிமை
மு.வ உரை:
நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
பரிமேலழகர் உரை:
செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. (இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல, செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.)
மணக்குடவர் உரை:
உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா.
இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.
கலைஞர் உரை:
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும்
கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில்
பிறந்தவர்களாகக் கருத முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.
மு.வ உரை:
உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.)
மணக்குடவர் உரை:
ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.
கலைஞர் உரை:
ஒழுக்கமும், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி
நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.
மு.வ உரை:
உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.
பரிமேலழகர் உரை:
வாய்மைக்குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர். (பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர்.
கலைஞர் உரை:
முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு
ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள்
என்று வகைப்படுத்த முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.
மு.வ உரை:
பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.
பரிமேலழகர் உரை:
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)
மணக்குடவர் உரை:
பல கோடிப் பொருளைப் பெறினும் உயர்குடிப்பிறந்தார் தங்குடிக்குத் தாழ்வாயின செய்யார்.
இது சான்றாண்மை விடாரென்றது.
கலைஞர் உரை:
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில்
பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம்
தரமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.
மு.வ உரை:
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம்பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
பரிமேலழகர் உரை:
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப் பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். (தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.)
மணக்குடவர் உரை:
வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர்.
இது பண்புடைமை விடாரென்றது.
கலைஞர் உரை:
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால்
தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.
மு.வ உரை:
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார்.
இது சான்றாண்மை விடார் என்றது.
கலைஞர் உரை:
மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக
நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.
மு.வ உரை:
உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
பரிமேலழகர் உரை:
குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க.
இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு
மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல
வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.
மு.வ உரை:
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
பரிமேலழகர் உரை:
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம். (நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின் அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
கலைஞர் உரை:
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும்
ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே
சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.
மு.வ உரை:
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
பரிமேலழகர் உரை:
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)
மணக்குடவர் உரை:
வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
கலைஞர் உரை:
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது
என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக்
கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து
கொள்ளலாம்.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.
மு.வ உரை:
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.
பரிமேலழகர் உரை:
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக. (நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக.
இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
கலைஞர் உரை:
தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும்
ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும்
அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.
Chapter (அதிகாரம்) | Nobility (குடிமை) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Miscellaneous (குடியியல்) |
Order (குறள் - வரிசை) | 951 952 953 954 955 956 957 958 959 960 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha