தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.
குறிப்பறிவுறுத்தல் (குறள் எண்: 1277)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | சூது |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | நட்பியல் |
குறள் - வரிசை | 931 932 933 934 935 936 937 938 939 940 |
சூது
மு.வ உரை:
வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.)
மணக்குடவர் உரை:
வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும்.
இது பின் கேடுபயக்குமென்றது.
கலைஞர் உரை:
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த
வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும்
விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக்
கொண்டது போலாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.
மு.வ உரை:
ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?
பரிமேலழகர் உரை:
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?
கலைஞர் உரை:
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு
தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம்
ஏற்பட வழி ஏது?
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?
மு.வ உரை:
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்
பரிமேலழகர் உரை:
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
கலைஞர் உரை:
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே
கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும்
வழிமுறையும்அவனைவிட்டு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
மு.வ உரை:
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
பரிமேலழகர் உரை:
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை. (அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.
கலைஞர் உரை:
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும்
ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.
மு.வ உரை:
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவார்.
பரிமேலழகர் உரை:
இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர். (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார்.
கவறு - நெத்தம், கழகம் - உருண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.
கலைஞர் உரை:
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக்
கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே
ஆகிவிடுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.
மு.வ உரை:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.
பரிமேலழகர் உரை:
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.)
மணக்குடவர் உரை:
தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார்.
மறைத்தல்- நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.
கலைஞர் உரை:
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார
உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
மு.வ உரை:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
பரிமேலழகர் உரை:
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
சூதுகழகத்தின்கண்ணே காலைப்பொழுது புகுவானாயின், அது தொன்றுதொட்டு வருகின்ற செல்வத்தினையும் தமக்கியல்பாகிய குணத்தினையும் கெடுக்கும்.
கலைஞர் உரை:
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால்,
அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும்
நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.
மு.வ உரை:
சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.
பரிமேலழகர் உரை:
சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.)
மணக்குடவர் உரை:
சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்.
கலைஞர் உரை:
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும்
மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.
மு.வ உரை:
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
பரிமேலழகர் உரை:
ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின் சாராவாம்.
செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.
கலைஞர் உரை:
சூதாட்டத்திற்கு அடிமை யாக்கிவிட்டவர்களை விட்டுப் புகழும்,
கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.
மு.வ உரை:
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
பரிமேலழகர் உரை:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் - சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர். இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.
கலைஞர் உரை:
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும்,
உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும்
ஒன்றேதான்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
Chapter (அதிகாரம்) | Gambling (சூது) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Friendship (நட்பியல்) |
Order (குறள் - வரிசை) | 931 932 933 934 935 936 937 938 939 940 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha