வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | பெண்வழிச்சேறல் |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | நட்பியல் |
குறள் - வரிசை | 901 902 903 904 905 906 907 908 909 910 |
பெண்வழிச்சேறல்
மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.
பரிமேலழகர் உரை:
மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம் காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள் தன்மையராய் ஒழுகுவார், தமக்கு இன்துணையாய அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும் அவ்வின்பம். (மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர். அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய இன்பம். அஃது, அவளாற் பயனாய அறத்தினும், அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும் செல்ல விடாமையின், விடற்பாற்று என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மனையாளைக் காதலித்தொழுகுவார் நற்பயனைப் பெறார்: யாதானும் ஒருவினையைச் செய்து முடிக்கவேண்டுவார் விரும்பாத பொருளும் அவரை விழையாமை.
இஃது அறத்தினும் பொருளினும் காதலின்றி அவர்தம்மையே காதலிப்பார்க்கு அறனும் பொருளும் இல்லையாமென்றது.
கலைஞர் உரை:
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப்
பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.
மு.வ உரை:
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை:
பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன் ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண் ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க் கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும் நாணுதலைக் கொடுக்கும். (எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல் இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலும் முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின், அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று ஆண்பாலார் யாவரும் நாண,அதனால் தன் ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும் என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளைக் காதலிப்பானது செல்வம், பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாகத் தனக்கு நாணினைத் தரும்.
கலைஞர் உரை:
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை
நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய
வேண்டியதாக ஆகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.
மு.வ உரை:
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத் தரும்.
பரிமேலழகர் உரை:
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
மனையாள்மாட்டுந் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்.
கலைஞர் உரை:
நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற
கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக
நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.
மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
பரிமேலழகர் உரை:
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை.
இது பொருள் செய்ய மாட்டானென்றது.
கலைஞர் உரை:
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த
அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
பரிமேலழகர் உரை:
இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.)
மணக்குடவர் உரை:
மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும்.
இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.
கலைஞர் உரை:
எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு
ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல்
கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
மு.வ உரை:
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
பரிமேலழகர் உரை:
இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர். (அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தேவரைப்போல இன்புற்று வாழினும், பெருமை யிலராவர்; மனையாளது வேய்போலும் தோளை அஞ்சுபவர்.
இது செல்வமுடையராயினும் பிறரால் மதிக்கப்படாரென்றது.
கலைஞர் உரை:
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள்
என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத்
தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும்,
அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:
தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.
மு.வ உரை:
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
பரிமேலழகர் உரை:
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. ('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)
மணக்குடவர் உரை:
பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம்.
இது பிறரால் மதிக்கப்படாரென்றது.
கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின்
ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே
பெருமைக்குரிய தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
மு.வ உரை:
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார். ('நல்நுதலாள்' என்பதனை 'அமை ஆர் தோள்' (குறள்-906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்து ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார்
குறைதீர்க்கவும் மாட்டார்; அவர்க்கு நல்ல செய்யவும் மாட்டார்.குறைதீர்த்தல்- உற்ற துயரம் தீர்த்தல்.
கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து
நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்;
நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.
மு.வ உரை:
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
பரிமேலழகர் உரை:
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா. (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும் பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம்.
இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி
இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த
அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
மு.வ உரை:
நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
பரிமேலழகர் உரை:
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும உண்டாகாது. ('இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம்.
எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.
கலைஞர் உரை:
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள்
காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்க
மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.
Chapter (அதிகாரம்) | Being led by Women (பெண்வழிச்சேறல்) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Friendship (நட்பியல்) |
Order (குறள் - வரிசை) | 901 902 903 904 905 906 907 908 909 910 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha