வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | அவையஞ்சாமை |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | அமைச்சியல் |
குறள் - வரிசை | 721 722 723 724 725 726 727 728 729 730 |
அவையஞ்சாமை
மு.வ உரை:
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
பரிமேலழகர் உரை:
வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.)
மணக்குடவர் உரை:
தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர்.
இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.
கலைஞர் உரை:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்
வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச
மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.
மு.வ உரை:
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
பரிமேலழகர் உரை:
கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
கற்றாரெல்லாரினும் கற்றாரென்று சொல்லப்படுவார், தாம் கற்றதனைக் கற்றார் முன்பு அவர்க்கு ஏற்கச் சொல்லவல்லார்.
இது கற்றாரென்பார் அவையஞ்சாதார் என்று கூறிற்று.
கலைஞர் உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு
சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச்
சொல்லப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
மு.வ உரை:
பகைவர் உள்ள போரக்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.
பரிமேலழகர் உரை:
பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகையின்கண் அஞ்சாது நின்று சாவார் பெறுதற்கு எளியர்; அவையின்கண் அஞ்சாது சொல்லவல்லவர் அறிதற்கு அரியர்.
இஃது அவையஞ்சாமை அரிதென்றது.
கலைஞர் உரை:
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும்
எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல்
பேசக்கூடியவர் சிலரேயாவர்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.
மு.வ உரை:
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லிச் - பல நூல்களையும் கற்றார் அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்துகொள்க. (எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக, சொல்லவே, அவரும்அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்கப்பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. இதனால் அவனது ஒருசார்பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லித் தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது.
கலைஞர் உரை:
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக்
கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம்
கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.
மு.வ உரை:
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து
கற்க வேண்டும்.நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
கலைஞர் உரை:
அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி
சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத்
திறமும் கற்றிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
மு.வ உரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
பரிமேலழகர் உரை:
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை?
இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.
கலைஞர் உரை:
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில்
பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?
மு.வ உரை:
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.
பரிமேலழகர் உரை:
பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல். (பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.)
மணக்குடவர் உரை:
பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.
மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.
கலைஞர் உரை:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப்
படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு
பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே
பயனற்றவைகளாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
மு.வ உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
பரிமேலழகர் உரை:
நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
பலநூல்களைக் கற்றாலும் ஒருபயனில்லாதவரே: நல்லவையின்கண் நன்றாக அவர்க்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்.
இஃது அவையஞ்சுவார் கற்றகல்வி பிறர்க்குப் பயன்படாதென்றது
கலைஞர் உரை:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்
அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக்
கற்றிருந்தாலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.
மு.வ உரை:
நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர். (அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
கல்லாதவரினும் கடையரென்று சொல்லப்படுவர்; உலகநூல் கற்றறிந்துவைத்தும் நல்லாரிருந்த அவையின்கண் சொல்லுதலஞ்சுவார்.
இது கல்லாதவரினும் இகழப்படுவரென்றது.
கலைஞர் உரை:
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள்,
எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட
இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.
மு.வ உரை:
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
பரிமேலழகர் உரை:
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர். (ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை
அதற்கு இசையச் சொல்லமாட்டாதார்.இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின.
கலைஞர் உரை:
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல்
அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச்
சமமானவராகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
Chapter (அதிகாரம்) | Not to dread the Council (அவையஞ்சாமை) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Ministers of State (அமைச்சியல்) |
Order (குறள் - வரிசை) | 721 722 723 724 725 726 727 728 729 730 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha