வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | மக்கட்பேறு |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 61 62 63 64 65 66 67 68 69 70 |
நன்மக்களால் பெற்றவர்களும் மற்றவர்களும் அடையும் இன்பமும், பயனும், சிறப்பையும் கூறும் அதிகாரம்.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
பெறுமவற்றுள் - ஒருவன் பெறுகின்ற செல்வங்களுள்
யாமறிவதில்லை (யாம் + அறிவது + இல்லை): யாம் - நான்; அறிவதில்லை - அறியவில்லை
அறிவறிந்த (அறிவு +அறிந்த) - அறிய வேண்டுவனவற்றை அறியக்கூடிய
மக்கட்பேறு - மக்கள் செல்வம் பெறுவது
அல்ல - அல்லாமல்
பிற - பிற செல்வங்களை
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தை விட வேறு பேறு இருப்பதாக நான் அறியவில்லை.
மு.வ உரை:
பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை.
பரிமேலழகர் உரை:
பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.
கலைஞர் உரை:
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு
வேறு எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.
எழுபிறப்பும் - ஏழு பிறவியிலும்
தீயவை - துன்பங்கள், தீமைகள்
தீண்டா - தீண்டாது
பழிபிறங்கா (பழி + பிறங்கா): பழி - பழிகளை; பிறங்கா - உண்டாக்காத
பண்புடை (பண்பு + உடை): பண்புடைய
மக்கட் - மக்களை, பிள்ளைகளை
பெறின் - பெற்றால்
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவர்களை ஏழு பிறவிகளிலும் துன்பங்கள் தீண்டாது.
மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
பரிமேலழகர் உரை:
எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். ('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.)
மணக்குடவர் உரை:
எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.
கலைஞர் உரை:
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின்,
ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும்
தீண்டாது.
சாலமன் பாப்பையா உரை:
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.
தம்பொருள்: தம் - தமது; பொருள் - செல்வம்
என்பதம் (என்ப + தம்): என்ப - என்பார்; தம் - தமது
மக்கள் - பிள்ளைகள்
அவர்பொருள் - அவர்கள் மக்களாகிய செல்வம்
தம்தம் - தாம் செய்த
வினையான் - வினையால் (நல்வினை, தீவினை)
வரும் - உண்டாகும்
தம்மக்களே தம்முடைய செல்வங்கள் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
மு.வ உரை:
தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
பரிமேலழகர் உரை:
தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.
கலைஞர் உரை:
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள்
அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை.
சாலமன் பாப்பையா உரை:
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
அமிழ்தினும் - அமிழ்தத்தினை விடவும்
ஆற்ற - மிகவும்
இனிதே - இனிமையானது
தம்மக்கள் - தமது குழந்தைகள்
சிறுகை - சிறிய கைகளால்
அளாவிய - அளாவப்பட்ட, பிசையப்பட்ட
கூழ் - கூழ் உணவு
அமிழ்தைக் காட்டிலும் மிக இனிமையானது, தம்முடைய குழந்தைகளின் சிறு கைகளால் அளாவப்பட்ட(பிசையப்பட்ட) கூழ்.
மு.வ உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்
பரிமேலழகர் உரை:
அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188)
மணக்குடவர் உரை:
இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.
கலைஞர் உரை:
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய
குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த
அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
மக்கள்மெய்: மக்கள் - தம் பிள்ளைகளின்; மெய் - உடம்பு
தீண்டல் - தொடுதல், தழுவுதல்
உடற்கின்பம் (உடற்கு + இன்பம்): உடற்கு - உடம்புக்கு; இன்பம் - இன்பம் தருவது
மற்றுஅவர்: மற்று - மற்றும்; அவர் - அவர்களது (பிள்ளைகளின்)
சொற்கேட்டல் (சொல் + கேட்டல்) - பேசுவதை கேட்பது
இன்பம் - இன்பத்தை அளிக்கும்
செவிக்கு - காதுகளுக்கு
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது செவிக்கு இன்பத்தையும் தருவதாகும்.
மு.வ உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.
பரிமேலழகர் உரை:
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)
மணக்குடவர் உரை:
தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.
கலைஞர் உரை:
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக்
குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்
குழல்இனிது - குழலின் இசை இனிது
யாழ்இனிது - யாழின் இசை இனிது
என்பதம் (என்ப + தம்): என்ப - என்பர்; தம் - தமது
மக்கள் - குழந்தைகளின், பிள்ளைகளின்
மழலைச்சொல் - இனிய மழலை சொற்களை
கேளாதவர் - கேட்டறியாதவர்கள்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொற்களை கேட்காதவர்கள்தான் குழலின் இசையையும், யாழின் இசையையும் இனிமையானது என்று கூறுவர்.
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.
கலைஞர் உரை:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான்
குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று
கூறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
தந்தை - தந்தை
மகற்காற்று (மகற்கு + ஆற்றும்): மகற்கு - பிள்ளைகளுக்கு; ஆற்றும் - செய்யும்
நன்றி - நன்மை
அவையத்து - சபையில் (கற்றவர் சபையில்); அவை - சபை
முந்தி - முதன்மை நிலை
இருப்ப - இருக்குமாறு
செயல் - செய்தல்
தந்தை, தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, அவர்களை கற்றவர் அவையில் மதிப்பும், முதன்மையும் பெறும்படி கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
மு.வ உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
பரிமேலழகர் உரை:
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.
கலைஞர் உரை:
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை
அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
தம்மின்தம்: தம்மின் - தம்மை விட; தம் - தமது
மக்கள் - பிள்ளைகள்
அறிவுடைமை - அறிவாற்றல் மிகுந்திருத்தல்
மாநிலத்து: மா - பெரிய; நிலத்து - பூமியில்
மன்னுயிர்க் கெல்லாம் (மன் + உயிர்க்கு + எல்லாம்): மன் - நிலைபெற்ற; உயிர்க்கு - உயிர்களுக்கு; எல்லாம் - எல்லாவற்றுக்கும்
இனிது - இனிமையானது
தம் பிள்ளைகள் அறிவாற்றல் மிக்கவராய் இருப்பது, தமக்கு இன்பம் தருவதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த மகிழ்ச்சி தருவதாகும்.
மு.வ உரை:
தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
பரிமேலழகர் உரை:
தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.
கலைஞர் உரை:
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால்,
அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக
மகிழ்ச்சி தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
ஈன்ற - பெற்றெடுத்த
பொழுதின் (பொழுது + இன்): பொழுதை விட
பெரிதுவக்கும் (பெரிது + உவக்கும்): பெரிது - மிகுதியான; உவக்கும் - மகிழ்ச்சி கொடுப்பது
தன்மகனை - தன் மகனை
சான்றோன் - ஒழுக்கம் நிறைந்தவன், நற்பண்புகள் நிறைந்தவன்
எனக்கேட்ட - என்று பிறர் சொல்லக் கேட்ட
தாய் - தாய்
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
மு.வ உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்.
பரிமேலழகர் உரை:
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.
கலைஞர் உரை:
நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது
அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை
அந்தத் தாய் அடைவாள்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
மகன் - பிள்ளை
தந்தைக்கு - தந்தைக்கு
ஆற்றும் - செய்யும்
உதவி - கைம்மாறு
இவன்தந்தை - இவனை பெற்ற தந்தை
என்நோற்றான் கொல் (என் + நோற்றான் + கொல்): என் - என்ன; நோற்றான் - தவம் புரிந்தான் (நோற்றல் - நோன்பு இருத்தல்); (கொல் - அசை நிலை)
எனும் - என்கின்ற
சொல் - சொல்லை பிறர் கூறச்செய்வது
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.
மு.வ உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
பரிமேலழகர் உரை:
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)
மணக்குடவர் உரை:
மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல்.
இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற
பெரும்பேறு", என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடைய
தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.
Chapter (அதிகாரம்) | The Wealth of Children (மக்கட்பேறு) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 61 62 63 64 65 66 67 68 69 70 |
The Wealth of Children
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha