வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | வினைத்திட்பம் |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | அமைச்சியல் |
குறள் - வரிசை | 661 662 663 664 665 666 667 668 669 670 |
வினைத்திட்பம்
மு.வ உரை:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.
பரிமேலழகர் உரை:
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினைசெய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள். அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா.
மற்றவையென்றது கருவியும் உபாயமும்.
கலைஞர் உரை:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும்
இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
மு.வ உரை:
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
பரிமேலழகர் உரை:
ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர். (தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.)
மணக்குடவர் உரை:
வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.
கலைஞர் உரை:
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து
விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே
அறிவுடையோர் கொள்கையாம்.
சாலமன் பாப்பையா உரை:
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.
மு.வ உரை:
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை:
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும். (மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும், தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை'எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல், செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும்.
சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.
கலைஞர் உரை:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி
வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில்
வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு
இடையூறு ஏற்படக்கூடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.
மு.வ உரை:
'இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்' என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம் ; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.
பரிமேலழகர் உரை:
சொல்லுதல் யார்க்கும் எளிய - யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம். (சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின். 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.
கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து
முடிப்பதுதான் கடினம்.
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
மு.வ உரை:
செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.
பரிமேலழகர் உரை:
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன்கண் ஊறு எய்தி உள்ளப்படும் - வேந்தன்கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும். (வேந்தன்கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறைவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும்.
இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.
கலைஞர் உரை:
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது,
ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.
மு.வ உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
பரிமேலழகர் உரை:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். ('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின்.
இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.
கலைஞர் உரை:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால்
அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.
மு.வ உரை:
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.
பரிமேலழகர் உரை:
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.
கலைஞர் உரை:
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து
அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான
அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
மு.வ உரை:
மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க. (கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.)
மணக்குடவர் உரை:
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க.
இது விரைந்து செய்யவேண்டு மென்றது.
கலைஞர் உரை:
மனக்குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத்
தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
மு.வ உரை:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்தபோதிலும் துணிவு மேற் கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின்கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க. (துணிவு - கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாமஇன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச்செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினைசெய்யுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.
கலைஞர் உரை:
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப்
பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
மு.வ உரை:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
பரிமேலழகர் உரை:
வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்.
பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும்
செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
Chapter (அதிகாரம்) | Power in Action (வினைத்திட்பம்) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Ministers of State (அமைச்சியல்) |
Order (குறள் - வரிசை) | 661 662 663 664 665 666 667 668 669 670 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha