வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | ஆள்வினையுடைமை |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | அரசியல் |
குறள் - வரிசை | 611 612 613 614 615 616 617 618 619 620 |
ஆள்வினையுடைமை
மு.வ உரை:
இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
பரிமேலழகர் உரை:
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்.
இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.
கலைஞர் உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற
நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.
மு.வ உரை:
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.
மணக்குடவர் உரை:
வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று.
இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
கலைஞர் உரை:
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க
வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.
மு.வ உரை:
பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்.
இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
கலைஞர் உரை:
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி
மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.
மு.வ உரை:
முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.
பரிமேலழகர் உரை:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் - படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம். ('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாதுஎன்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும்ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும்.
இஃது அறம் செய்யமாட்டானென்றது.
கலைஞர் உரை:
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே
வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.
மு.வ உரை:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
பரிமேலழகர் உரை:
இன்பம் விழைவான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம். (இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன்
கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம்.ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.
கலைஞர் உரை:
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற
விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு
மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற
தூணாவான்.
சாலமன் பாப்பையா உரை:
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.
மு.வ உரை:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.
பரிமேலழகர் உரை:
முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும்.
இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.
கலைஞர் உரை:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான
செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
மு.வ உரை:
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
பரிமேலழகர் உரை:
மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.
இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.
கலைஞர் உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில்
ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக்
காட்டப் பயன்படுவனவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.
மு.வ உரை:
நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
பரிமேலழகர் உரை:
பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது.
அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை
அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
மு.வ உரை:
ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
பரிமேலழகர் உரை:
தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்.
இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.
கலைஞர் உரை:
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர்
முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
மு.வ உரை:
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
பரிமேலழகர் உரை:
ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார். (தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர்.
இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.
கலைஞர் உரை:
"ஊழ்" என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல்
முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச்
செய்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
Chapter (அதிகாரம்) | Manly Effort (ஆள்வினையுடைமை) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Royalty (அரசியல்) |
Order (குறள் - வரிசை) | 611 612 613 614 615 616 617 618 619 620 |
Manly Effort
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha