கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
அவையஞ்சாமை (குறள் எண்: 722)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | அறன்வலியுறுத்தல் |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | பாயிரவியல் |
குறள் - வரிசை | 31 32 33 34 35 36 37 38 39 40 |
அறம் இன்னதென்றும், அறத்தின் படி நிற்பதால் உண்டாகும் பயனையும், உயர்வையும்; அறம் தவறி நடந்தால் வரும் கேடுகளையும் விளக்கும் அதிகாரம்.
சிறப்புஈனும் - சிறப்பை தரும் [ஈனும் - தரும்]
செல்வமும்ஈனும் - செல்வத்தையும் தரும் [ஈனும் - தரும்]
அறத்தினூஉங்கு (அறத்தின் + ஊங்கு): அறத்தின் - அறத்தைவிட; ஊங்கு - மேலான
ஆக்கம் - செல்வம், உயர்வு
எவனோ - வேறேதும் உள்ளதோ? [எவன் - யாது]
உயிர்க்கு - மனித உயிர்க்கு
அறம் சிறப்பையும் அளிக்கும், செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
மு.வ உரை:
அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?
பரிமேலழகர் உரை:
சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.
இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
கூறிற்று.
கலைஞர் உரை:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?
சாலமன் பாப்பையா உரை:
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?
அறத்தினூஉங்கு (அறத்தின் + ஊங்கு): அறத்தின் - அறத்தைவிட; ஊங்கு - மேலான
ஆக்கமும் - செல்வமும் [ஆக்கம் - செல்வம், உயர்வு]
இல்லை - இல்லை
அதனை - அதனை
மறத்தலின் - மறப்பதை விட
ஊங்கில்லை - மேலானதில்லை
கேடு - தீங்கு
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கேடும் இல்லை.
மு.வ உரை:
ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை.
இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.
கலைஞர் உரை:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய
வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை
மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை
ஒல்லும் - தம்மால் முடியக் கூடிய
வகையான் - வழிகளில் எல்லாம்
அறவினை (அறம் + வினை): அறச் செயல்களை [வினை - செயல்]
ஓவாதே - ஒழியாமல், நிறுத்தாமல்
செல்லும்வாய்: செல்லும் - செல்லக்கூடிய; வாய் - வழி
எல்லாஞ் - எல்லாம்
செயல் - செய்க, செய்ய வேண்டும்
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
மு.வ உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை:
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க.
இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.
கலைஞர் உரை:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்
தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
மனத்துக்கண் (மனத்து + கண்): மனத்து - மனம்; கண் – இடம்
மாசிலன் (மாசு + இலன்): மாசு - அழுக்கு, குற்றம்; இலன் - இல்லாதவனாய்
ஆதல் - இருத்தல்
அனைத்தறன் (அனைத்து + அறன்): அவ்வளவே அறம்
ஆகுல - ஆரவாரம்
நீர - தன்மை
பிற - மற்றவை
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
மு.வ உரை:
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
பரிமேலழகர் உரை:
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.
பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.
கலைஞர் உரை:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர
வேறொன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.
அழுக்காறு - பொறாமை
அவா - ஆசை (பேராசை)
வெகுளி - சினம்
இன்னாச்சொல் - கடுஞ்சொற்கள்
நான்கும் - ஆகிய நான்கும்
இழுக்கா - விலக்கி, தவிர்த்து
இயன்றது - நடைபெறுவது
அறம் - அறம் எனப்படுவது
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றை விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
மு.வ உரை:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.
பரிமேலழகர் உரை:
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும்.
பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
அன்றறிவாம் (அன்று + அறிவாம்): அன்று - பின்பு, பிற்காலத்தில்; அறிவாம் - அறிந்து செய்வோம்
என்னாது - என எண்ணாமல், நினைக்காமல்
அறஞ்செய்க - அறம் செய்க, அறத்தை மேற்கொள்க
மற்றது (மற்று + அது): மற்று - மற்ற செயல்கள் போல் நிலைமைக்கெற்ப மாறாமல் என்று பொருள் படுகிறது
பொன்றுங்கால் - இறக்கும் காலத்தில் (பொன்றும் - அழியும்)
பொன்றா - அழியாது
துணை - துணை நிற்கும்
பிற்காலத்தில் (முதுமையில்) செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம், நாம் அழியும் போதும் அழியாமல் நமக்கு துணை நிற்கும்.
மு.வ உரை:
இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
பரிமேலழகர் உரை:
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம்.
இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
கலைஞர் உரை:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை
மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய்
நிலைத்துத் துணை நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.
அறத்தாறு (அறத்து + ஆறு): அறத்து - அறத்தினது; ஆறு - வழி, பயன்
இதுவென (இது + என)- இது என்று
வேண்டா - எடுத்துக் கூற வேண்டியதில்லை
சிவிகை - பல்லக்கு
பொறுத்தானோடு - சுமந்து செல்பவனோடு
ஊர்ந்தான் - உள் அமர்ந்து பயணிப்பவர்
இடை - இடையே (உள்ள காட்சியில் உணரலாம்)
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
மு.வ உரை:
பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
பரிமேலழகர் உரை:
அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.
மணக்குடவர் உரை:
நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்.
இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.
கலைஞர் உரை:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப்
போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக்
கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை
ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப்
போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக்
கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக்
கருதுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
வீழ்நாள் - அறம் செய்யாமல் வீணாகும் நாள்
படாஅமை - உண்டாகாமல்
நன்றாற்றின் (நன்று + ஆற்றின்): அறத்தை ஆற்றினால்
அஃதொருவன் (அஃது + ஒருவன்) - அவ்வாறு செய்யும் ஒருவன்
வாழ்நாள் - மீண்டும் பிறவி ஏடுத்து வாழும் நாள்
வழியடைக்கும் (வழி + அடைக்கும்) - வழியை அடைக்கும் (பிறவியற்ற நிலை சேர்க்கும்)
கல் - கல்லாக அமையும்
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
மு.வ உரை:
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
பரிமேலழகர் உரை:
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.
இது வீடு தருமென்றது.
கலைஞர் உரை:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து
நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி
அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.
அறத்தான் - அறத்தினால், அற வழிகளில்
வருவதே - வருவதே
இன்பம் - இன்பம்
மற்றெல்லாம் (மற்று + எல்லாம்) - மற்ற வழிகளில் வருவன எல்லாம்
புறத்த - இன்பத்துக்கு புறம்பானவை, துன்பங்கள்
புகழும் - புகழும்
இல - இல்லை
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
மு.வ உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
பரிமேலழகர் உரை:
அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம்.
இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
கலைஞர் உரை:
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற
புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது
புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
சாலமன் பாப்பையா உரை:
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா
செயற்பால தோரும் (செயல் + பாலது + ஓரும்): செயல் - செய்ய வேண்டிய; பாலது – தன்மையுடையது; (ஓரும் – அசைநிலை)
அறனே - அறம் தான்
ஒருவற்கு - ஒருவருக்கு
உயற்பால தோரும் (உயல் + பாலது + ஓரும்): உயல் - நீக்க வேண்டிய; பாலது – தன்மையுடையது; (ஓரும் – அசைநிலை)
பழி - பழி சேர்ப்பனவாகும்
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
மு.வ உரை:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.
பரிமேலழகர் உரை:
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே.
மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.
கலைஞர் உரை:
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச்
செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
Chapter (அதிகாரம்) | Assertion of the Strength of Virtue (அறன்வலியுறுத்தல்) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Prologue (பாயிரவியல்) |
Order (குறள் - வரிசை) | 31 32 33 34 35 36 37 38 39 40 |
Assertion of the Strength of Virtue
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha