வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | ஊழ் |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | ஊழியல் |
குறள் - வரிசை | 371 372 373 374 375 376 377 378 379 380 |
ஊழ்
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/sm9Rq-NAF1s" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
மு.வ உரை:
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
பரிமேலழகர் உரை:
கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும்.
இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.
கலைஞர் உரை:
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக்
கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை
ஏற்படுத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
மு.வ உரை:
பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதை யாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும்.
பரிமேலழகர் உரை:
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்.
இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
கலைஞர் உரை:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம்
தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
மு.வ உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.
பரிமேலழகர் உரை:
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும்
தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்.மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
கலைஞர் உரை:
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்
அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)
மு.வ உரை:
உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இருவேறு வகைப்படும்; செல்வம் உடையவராதலும் வேறு, அறிவு உடையவராதலும் வேறு.
பரிமேலழகர் உரை:
உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.)
மணக்குடவர் உரை:
செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு.
கலைஞர் உரை:
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர்
செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த
வேறுபாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
மு.வ உரை:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தீயவை நல்லவை ஆதலும் உண்டு.
பரிமேலழகர் உரை:
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.
மணக்குடவர் உரை:
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.
கலைஞர் உரை:
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய்
முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை
நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.
மு.வ உரை:
ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா.
பரிமேலழகர் உரை:
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா.
இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.
கலைஞர் உரை:
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும்
அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு
போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
மு.வ உரை:
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது.
பரிமேலழகர் உரை:
கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை:
விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து.
இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால்
கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது
அரிதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
மு.வ உரை:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்வர்.
பரிமேலழகர் உரை:
துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)
மணக்குடவர் உரை:
நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின்.
இது துறவறமானது ஊழினால் வருமென்றது.
கலைஞர் உரை:
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை
வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம்
மேற்கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
மு.வ உரை:
நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?
பரிமேலழகர் உரை:
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?
இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.
கலைஞர் உரை:
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு
மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
சாலமன் பாப்பையா உரை:
நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?
மு.வ உரை:
ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
பரிமேலழகர் உரை:
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.
கலைஞர் உரை:
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட
முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால்
அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
சாலமன் பாப்பையா உரை:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?
Chapter (அதிகாரம்) | Fate (ஊழ்) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Fate (ஊழியல்) |
Order (குறள் - வரிசை) | 371 372 373 374 375 376 377 378 379 380 |
Fate
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha