வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | நிலையாமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | துறவறவியல் |
குறள் - வரிசை | 331 332 333 334 335 336 337 338 339 340 |
நிலையாமை
மு.வ உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
பரிமேலழகர் உரை:
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு. (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)
மணக்குடவர் உரை:
நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது.
எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று.
கலைஞர் உரை:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக
இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
மு.வ உரை:
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
பரிமேலழகர் உரை:
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)
மணக்குடவர் உரை:
கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்.
கலைஞர் உரை:
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து
முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப்
போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.
மு.வ உரை:
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப் பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
பரிமேலழகர் உரை:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க. ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க.
நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.
கலைஞர் உரை:
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக்
கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
மு.வ உரை:
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோல் காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
பரிமேலழகர் உரை:
நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.)
மணக்குடவர் உரை:
நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின்.
இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.
கலைஞர் உரை:
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின்
ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று
அறிவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.
மு.வ உரை:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்) நல்ல அறச்செயல் விரைந்து செய்யத்தக்கதாகும்.
பரிமேலழகர் உரை:
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும் ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான் இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று' என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும்.
இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
கலைஞர் உரை:
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும்
போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
மு.வ உரை:
நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
பரிமேலழகர் உரை:
ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து.
இது யாக்கை நிலையாமை கூறிற்று.
கலைஞர் உரை:
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல்
செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக் கொண்டதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
மு.வ உரை:
அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள்.
பரிமேலழகர் உரை:
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார், கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார். (இழிவு சிறப்பு உம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று.பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும் அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
ஒரு பொழுதளவும் தம்முயிர் நிலைநிற்கும் என்பதனை யறியாராயிருந்தும், தமது வாழ்நாளை கோடியுமல்ல, பலவாகக் கருதுவர் உலகத்தார்.
மேல் ஒருநாளுளனானவன் பிற்றை ஞான்று செத்தானென்றார் ஈண்டு ஒருபொழுதளவும் உயிர் நிலையாகாது என்றார்.
கலைஞர் உரை:
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து
அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள்
கட்டுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
மு.வ உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, 'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.)
மணக்குடவர் உரை:
கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு.
மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
கலைஞர் உரை:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்
குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
மு.வ உரை:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
பரிமேலழகர் உரை:
சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு.
இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
கலைஞர் உரை:
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது
பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
சாலமன் பாப்பையா உரை:
உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
மு.வ உரை:
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?
பரிமேலழகர் உரை:
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம் முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும் இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்! (அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால், 'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.)
மணக்குடவர் உரை:
தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது.
புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.
கலைஞர் உரை:
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம்
கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
Chapter (அதிகாரம்) | Instability (நிலையாமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Ascetic Virtue (துறவறவியல்) |
Order (குறள் - வரிசை) | 331 332 333 334 335 336 337 338 339 340 |
Instability
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha