வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | கொல்லாமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | துறவறவியல் |
குறள் - வரிசை | 321 322 323 324 325 326 327 328 329 330 |
கொல்லாமை
மு.வ உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
பரிமேலழகர் உரை:
(அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை:
நல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால்.
இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை
செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
மு.வ உரை:
கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
பரிமேலழகர் உரை:
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம்.
இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.
கலைஞர் உரை:
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப்
பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற
சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
மு.வ உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது; அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
பரிமேலழகர் உரை:
ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. '('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
இணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும்
நன்று.இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை
யென்றது.
கலைஞர் உரை:
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப்
பொய்யாமையும் இடம் பெறுகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
மு.வ உரை:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
பரிமேலழகர் உரை:
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி.
இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற
வழி எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
மு.வ உரை:
வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
பரிமேலழகர் உரை:
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும்.
இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.
கலைஞர் உரை:
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக்
கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே
சிறந்தவராவார்.
சாலமன் பாப்பையா உரை:
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.
மு.வ உரை:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
பரிமேலழகர் உரை:
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது.
பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.
கலைஞர் உரை:
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின்
பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.
மு.வ உரை:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
பரிமேலழகர் உரை:
தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.)
மணக்குடவர் உரை:
தன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை.
உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப்
போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.
மு.வ உரை:
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
பரிமேலழகர் உரை:
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது
கலைஞர் உரை:
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக்
கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை
இழிவானதாகவே கருதுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.
மு.வ உரை:
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
பரிமேலழகர் உரை:
கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர். (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
கலைஞர் உரை:
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர்
உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.
சாலமன் பாப்பையா உரை:
கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.
மு.வ உரை:
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
பரிமேலழகர் உரை:
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.)
மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை.
இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.
கலைஞர் உரை:
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே
கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
Chapter (அதிகாரம்) | Not killing (கொல்லாமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Ascetic Virtue (துறவறவியல்) |
Order (குறள் - வரிசை) | 321 322 323 324 325 326 327 328 329 330 |
Not killing
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha