வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | தீவினையச்சம் |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 201 202 203 204 205 206 207 208 209 210 |
தீவினையச்சம் = தீவினை + அச்சம்
தீய செயல்களைச் செய்ய அச்சம் கொள்ளுதல். உடலால் தனக்கும் பிறருக்கும் தீங்கு தரும் செயல்களின் தன்மையையும் அச்செயல்களால் ஏற்படும் கேடுகளையும், அச்செயல்களைச் செய்ய அச்சம் கொண்டு தவிர்ப்பதன் பயனையும் கூறும் அதிகாரம்.
தீவினைய ரஞ்சா விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
தீவினையார் - தீவினை செய்பவர்கள்
அஞ்சார் - அஞ்சமாட்டார்கள்
விழுமியார் - உயர்ந்தவர்கள்
அஞ்சுவர் - அச்சம் கொள்வர்
தீவினை என்னும் - தீய செயல் எனப்படும்
செருக்கு – மயக்கம்
மு.வ உரை:
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
பரிமேலழகர் உரை:
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை.
இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
கலைஞர் உரை:
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி
ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
தீயவை - தீய செயல்கள்
தீய - தீமை
பயத்தலால் - கொடுப்பதால்
தீயவை - தீய செயல்கள்
தீயினும் - தீயை (நெருப்பை) விட
அஞ்சப்படும் - கருதி (செய்ய) அஞ்ச வேண்டும்
மு.வ உரை:
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
பரிமேலழகர் உரை:
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
மணக்குடவர் உரை:
தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.
கலைஞர் உரை:
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத்
தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
அறிவினுள் - அறிவுகளுக்குள்
எல்லாம் - எல்லாவற்றிலும்
தலையென்ப (தலை + என்ப): தலையானது எனப்படுவது
தீய - தீய செயல்கள்
செறுவார்க்கும் - வருத்துவோர்க்கும், துன்பம் செய்தவர்க்கும்
செய்யா - செய்யாமல்
விடல் – விடுதல்
மு.வ உரை:
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை.
இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.
கலைஞர் உரை:
தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா
அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் - மறந்து கூட
பிறன்கேடு - பிறருக்கு கேடு (தீங்கு)
சூழற்க - நினைக்காதிருக்கவும் (சூழ்தல் - கருதுதல், நினைத்தல்)
சூழின் - நினைத்தால்
அறஞ்சூழும் - அறம் நினைக்கும்
சூழ்ந்தவன் - நினைத்தவனின்
கேடு – தீங்கினை
மு.வ உரை:
பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
பரிமேலழகர் உரை:
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்.
இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
கலைஞர் உரை:
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி
நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு
விடும்.
சாலமன் பாப்பையா உரை:
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
இலமென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து.
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
இலன் என்று - இல்லாதவன் என்று, வறுமையில் இருப்பவன் என்று
தீயவை - தீய செயல்களை
செய்யற்க - செய்யாதிருக்கவும்
செய்யின் - செய்தால்
இலனாகும் - இல்லாதவன் ஆவான்
பெயர்த்து - மீண்டும்
[மற்றும் - அசைநிலை]
மு.வ உரை:
`யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
பரிமேலழகர் உரை:
இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது.
இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
கலைஞர் உரை:
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது;
அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட
வேண்டியிருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
தீப்பால - தீய செயல்களை
தான் - தான் ஒருவன்
பிறர்கண் - பிறரிடத்தில் (கண் - இடம்)
செய்யற்க - செய்யாதிருக்கவும்
நோய்ப்பால - துன்ப தருபவை
தன்னை - தன்னிடம் வந்து
அடல் - துன்புறுத்துவதை
வேண்டாதான் – வேண்டாதவன்
மு.வ உரை:
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறர்க்குச் செய்யாமலிருக்கவேண்டும்.
பரிமேலழகர் உரை:
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக.
இது நோயுண்டாமென்றது.
கலைஞர் உரை:
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என
எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க
வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.
எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
எனைப்பகை - எத்தனை பகை
உற்றாரும் - உடையவர்களும்
உய்வர் - தப்பித்துக் கொள்வர்
வினைப்பகை - தீவினை என்னும் பகை
வீயாது - விலகாது
பின்சென்று - பின்தொடர்ந்து சென்று
அடும் - அழிக்கும், கொல்லும்
மு.வ உரை:
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.
பரிமேலழகர் உரை:
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)
மணக்குடவர் உரை:
எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும்.
அஃதாமாறு பின் கூறப்படும்.
கலைஞர் உரை:
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்
செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து
வருத்திக்கொண்டே இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.
தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுரைந் தற்று.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
தீயவை - தீய செயல்கள்
செய்தார் - செய்தவர்கள்
கெடுதல் - கெட்டுவிடுதல்
நிழல் தன்னை - நிழல் ஒருவனை
வீயாது - விலகாமல்
அடி - காலடியில்
உறைந் தற்று (உறைந்து + அற்று): தங்கியது போன்று (அற்று - போல)
மு.வ உரை:
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
பரிமேலழகர் உரை:
தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)
மணக்குடவர் உரை:
தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும்.
மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.
கலைஞர் உரை:
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய
செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து
ஒட்டிக் கொண்டிருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.
தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
தன்னைத்தான் - தன்னையே தான்
காதலனாயின் - விரும்புபவன் என்றால்
எனைத்தொன்றும் (எனைத்து + ஒன்றும்): எத்தனை சிறிய ஒன்றும் (எனைத்து - எத்தனை)
துன்னற்க - செய்யதிருக்கவும்
தீவினைப் பால் - தீவினையான செயல்களை
மு.வ உரை:
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.
இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.
கலைஞர் உரை:
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட
நெருங்கலாகாது.
சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
அருங்கேடன் (அருமை + கேடன்): கேடு இல்லாதவன் (அருமை - அரிது; கேடன் - கேடு உடையவன்)
என்பது அறிக - என்பதை அறியவும்
மருங்கோடி (மருங்கு + ஓடி): கொடிய வழியில் சென்று
தீவினை - தீய செயல்களை
செய்யான் - செய்யாதவன்
எனின் – என்றால்
மு.வ உரை:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
பரிமேலழகர் உரை:
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவ
தில்லை யென்று தானே யறிக.இது கேடில்லை யென்றது.
கலைஞர் உரை:
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்கு
எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.
சாலமன் பாப்பையா உரை:
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
Chapter (அதிகாரம்) | Dread of Evil Deeds (தீவினையச்சம்) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 201 202 203 204 205 206 207 208 209 210 |
Dread of Evil Deeds
தீவினைய ரஞ்சா விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin
தீயவை தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Because evil produces evil, therefore should evil be feared more than fire
அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Even though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates
இலமென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகு மற்றும் பெயர்த்து.
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Let him not do evil to others who desires not that sorrows should pursue him
எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill
தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுரைந் தற்று.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not
தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
If a man love himself, let him not commit any sin however small
அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path