தினம் ஒரு குறள்

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அவையஞ்சாமை (குறள் எண்: 726)

பொருளுரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
உறுப்பினர் பகுதி

திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.

உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.

இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.

வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.

இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

திருக்குறளின் வேறு பெயர்கள்:

1) முப்பால்   2) உத்தரவேதம்   3) தெய்வநூல்   4) பொதுமறை

5) பொய்யாமொழி   6) வாயுறை வாழ்த்து   7) தமிழ் மறை   8) திருவள்ளுவம்

திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறதுஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர்    2) தெய்வப்புலவர்   3) நான்முகனார்   4) தேவர்   5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார்   7) பெருநாவலர்   8) புலவர்   9) பொய்யில் புலவர்

பயனில சொல்லாமை
அதிகாரம் பயனில சொல்லாமை
குறள் - பால் அறத்துப்பால்
குறள் - இயல் இல்லறவியல்
குறள் - வரிசை 191 192 193 194 195 196 197 198 199 200
அதிகார விளக்கம்:

பயனில சொல்லாமை = பயன் + இல + சொல்லாமை

தமக்கும் பிறருக்கும் பயன் தராத சொற்களைச் சொல்லாதிருத்தல். தனக்கும் தன் சுற்றத்திற்கும் பயன் தரும் சொற்களை மட்டுமே பேச வேண்டும் என்பதே பொருள். பயனற்ற சொற்களை பேசுபவர்களுக்கு ஏற்படும் இழிநிலையினையும் கேடுகளையும் கூறுவதோடு பயனற்ற சொற்களை பேசாதவர்களின் நற்குணத்தையும் மேன்மையினையும் விளக்கும் அதிகாரம்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பதவுரை:

பல்லார் - கேட்கும் பலரும்
முனிய - வெறுக்கும்படியான
பயனில (பயன் + இல): பயன் இல்லாத சொற்களை
சொல்லுவான் - பேசுபவன்
எல்லாரும் - எல்லோராலும்
எள்ளப்படும் - ஏளனம் செய்யப்படுவான், இகழப்படுவான்

பொருளுரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.

மு.வ உரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.

பரிமேலழகர் உரை:

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)

மணக்குடவர் உரை:

பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்,

கலைஞர் உரை:

பலரும்   வெறுக்கும்படியான   பயனற்ற    சொற்களைப்  பேசுபவரை
எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.

பதவுரை:

பயனில - பயன் இல்லாத சொற்களை
பல்லார்முன் - பலரது முன்
சொல்லல் - சொல்லுதல், பேசுதல்
நயனில (நயன் + இல): விரும்பத்தகாத செயல்கள் (நயன் - விருப்பம், நன்மை)
நட்டார்கண் - நண்பர்களிடத்தில் (நட்டார் - நண்பர்; கண் - இடம்)
செய்தலின் - செய்வதை விட
தீது - தீமையானது

பொருளுரை:

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

மு.வ உரை:

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

பரிமேலழகர் உரை:

பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)

மணக்குடவர் உரை:

பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில்
பதரென்று சொல்லுக,

இது மக்கட் பண்பிலனென்றது.

கலைஞர் உரை:

பலர்முன்   பயனில்லாத  சொற்களைக்   கூறுவது, நட்புக்கு  மாறாகச்
செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.

பதவுரை:

நயனிலன் (நயன் + இலன்): அறம் இல்லாதவன்
என்பது - என்பதை
சொல்லும் - சொல்லிவிடும், அறிவிக்கும்
பயனில - பயனில்லாதவற்றை
பாரித்து - விரிவாக
உரைக்கும் - சொல்லுகின்ற
உரை - சொற்கள்

பொருளுரை:

ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

மு.வ உரை:

ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

பரிமேலழகர் உரை:

பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)

மணக்குடவர் உரை:

நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்,

இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.

கலைஞர் உரை:

பயனற்றவைகளைப்பற்றி  ஒருவன்  விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே
அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பிற்சொற் பல்லா ரகத்து.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.

பதவுரை:

நயன்சாரா - அறத்தைச் சேராது
நன்மையின் (நன்மை + இன்) - நன்மையிலிருந்து
நீக்கும் - நீக்கிவிடும்
பயன்சாரா - நற்பயனோடு சேராத
பண்பில் (பண்பு + இல்): பண்பு இல்லாத
சொல் - சொற்களை
பல்லார் அகத்து - பலரிடத்தில் (சொல்லுதல்)

பொருளுரை:

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

மு.வ உரை:

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

பரிமேலழகர் உரை:

பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)

மணக்குடவர் உரை:

ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும்.

இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

கலைஞர் உரை:

பயனற்றதும்,   பண்பற்றதுமான   சொற்களைப்   பலர்முன்   பகர்தல்
மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.

பதவுரை:

சீர்மை - உயர்வு, மேன்மை
சிறப்பொடு - நன்மதிப்பும்
நீங்கும் - விலகிவிடும்
பயனில (பயன் + இல்): பயன் இல்லாத
நீர்மை - நற்குணம்
உடையார் - உடையவர்கள்
சொலின் - சொன்னால்

பொருளுரை:

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

மு.வ உரை:

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

பரிமேலழகர் உரை:

பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)

மணக்குடவர் உரை:

பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம்

இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது

கலைஞர் உரை:

நல்ல  பண்புடையவர்  பயனில்லாத  சொற்களைக்     கூறுவாரானால்
அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல்.

பதவுரை:

பயனில் (பயன் + இல்): பயன் இல்லாதவற்றை
சொல் - சொல்வதை
பாராட்டுவானை - பின்பற்றுபவனை
மகன் எனல் - மனிதன் என்று கூறுவதை விட
மக்கள் - மக்களுள்
பதடி - பதர் - பயனற்றவர் (பதர் - அரிசி நீக்கிய உமி)
எனல் - என்று கூறுவது சரி

பொருளுரை:

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும்.

மு.வ உரை:

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும்.

பரிமேலழகர் உரை:

பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை:

பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே,

இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

கலைஞர் உரை:

பயனற்றவைகளைச்   சொல்லிப்  பயன்பெற  நினைப்பவனை, மனிதன்
என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

பதவுரை:

நயனில (நயன் + இல): அறம் இல்லாத
சொல்லினும் - சொற்களை சொன்னாலும்
சொல்லுக - சொல்லாம்
சான்றோர் - சான்றோர்கள், உயர்ந்தவர்கள்
பயனில (பயன் + இல) - பயன் இல்லாதவற்றை
சொல்லாமை - சொல்லாதிருத்தல்
நன்று - நல்லது

பொருளுரை:

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

மு.வ உரை:

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

பரிமேலழகர் உரை:

நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)

மணக்குடவர் உரை:

சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று.

இது சான்றோர்க்கு ஆகாதென்றது.

கலைஞர் உரை:

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி   விடலாம்;
ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

பதவுரை:

அரும்பயன் - அருமையான பயன்களை
ஆயும் - ஆய்ந்து, ஆராய்ந்து அறியும்
அறிவினார் - அறிவாற்றல் உடையவர்கள்
சொல்லார் - சொல்ல மாட்டார்கள்
பெரும்பயன் - பெரிய பயன்
இல்லாத - இல்லாத, தராத
சொல் - சொற்களை

பொருளுரை:

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

மு.வ உரை:

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

பரிமேலழகர் உரை:

அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)

மணக்குடவர் உரை:

அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை,

இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

கலைஞர் உரை:

அரும்பயன்களை   ஆராய்ந்து  அறியக்கூடிய   ஆற்றல் படைத்தவர்,
பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீரந்த்
மாசறு காட்சி யவர்.

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

பதவுரை:

பொருள்தீர்ந்த - பொருள் இல்லாதவற்றை (சொற்களை)
பொச்சாந்தும் - மறந்தும் கூட
சொல்லார் - சொல்ல மாட்டார்கள்
மருள்தீர்ந்த - மயக்க இல்லாத, தெளிந்த
மாசறு (மாசு + அறு): மாசு - குற்றம்; அறு - இல்லாத
காட்சியவர் - அறிவுடையோர்

பொருளுரை:

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

மு.வ உரை:

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

பரிமேலழகர் உரை:

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்ட.து)

மணக்குடவர் உரை:

பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்,

இது தெளிவுடையார் கூறாரென்றது.

கலைஞர் உரை:

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப்  பயனற்ற
சொற்களைச் சொல்ல மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.

பதவுரை:

சொல்லுக - சொல்லுங்கள்
சொல்லில் - சொற்களுள்
பயனுடைய - நற்பயன் தருபவற்றை (சொற்களை)
சொல்லற்க - சொல்லாதிருங்கள்
சொல்லில் - சொற்களுள்
பயனிலா (பயன் + இலா): நற்பயன் இல்லாத
சொல் - சொற்கள்

பொருளுரை:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே கூடாது.

மு.வ உரை:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.

பரிமேலழகர் உரை:

சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)

மணக்குடவர் உரை:

சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக.

இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

கலைஞர் உரை:

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக்
கூடிய சொற்களையே கூற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
Against Vain Speaking
Chapter (அதிகாரம்) Against Vain Speaking (பயனில சொல்லாமை)
Section (குறள் - பால்) Virtue (அறத்துப்பால்)
Chapter Group (குறள் - இயல்) Domestic Virtue (இல்லறவியல்)
Order (குறள் - வரிசை) 191 192 193 194 195 196 197 198 199 200
Chapter Description:

Against Vain Speaking

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.

Yogi Shuddanandha

With silly words who insults all
Is held in contempt as banal.
Meaning:

He who to the disgust of many speaks useless things will be despised by all

பயனில பல்லார்முற் சொல்ல னயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.

Yogi Shuddanandha

Vain talk before many is worse
Than doing to friends deeds adverse.
Meaning:

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கு முரை.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.

Yogi Shuddanandha

The babbler's hasty lips proclaim
That good-for-nothing is his name.
Meaning:

That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
பண்பிற்சொற் பல்லா ரகத்து.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Un meaning , worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.

Yogi Shuddanandha

Vain words before an assembly
Will make all gains and goodness flee.
Meaning:

25 The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.

Yogi Shuddanandha

Glory and grace will go away
When savants silly nonsense say.
Meaning:

If the good speak vain words their eminence and excellence will leave them

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Who makes display of idle words' inanity,
Call him not man,- chaff of humanity!

Yogi Shuddanandha

Call him a human chaff who prides
Himself in weightless idle words.
Meaning:

Call not him a man who parades forth his empty words Call him the chaff of men

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

Translations:

Rev. Dr. G.U.Pope:

Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.

Yogi Shuddanandha

Let not men of worth vainly quack
Even if they would roughly speak.
Meaning:

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things

அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

The wise, who weigh the worth of every utterance,
Speak none but words of deep significance.

Yogi Shuddanandha

The wise who weigh the worth refrain
From words that have no grain and brain.
Meaning:

The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீரந்த்
மாசறு காட்சி யவர்.

பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.

Yogi Shuddanandha

The wise of spotless self-vision
Slip not to silly words-mention.
Meaning:

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.

Translations:

Rev. Dr. G.U.Pope:

If speak you will, speak words that fruit afford;
If speak you will, speak never fruitless word.

Yogi Shuddanandha

To purpose speak the fruitful word
And never indulge in useless load.
Meaning:

Speak what is useful, and speak not useless words

துரிதத் தேடல்
எண் வரிசை
அகர வரிசை