வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | வெஃகாமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 171 172 173 174 175 176 177 178 179 180 |
வெஃகுதல் - பிறர் பொருள் மீது விருப்பம் கொள்ளுதல்
வெஃகாமை - பிறர் பொருளை விரும்பி கவர்ந்து கொள்ள நினையாதிருத்தல்
பிறர் பொருளை விரும்பி அதை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ள நினையாத குணத்தின் சிறப்பை, உயர்வைக் கூறும் அதிகாரம்.
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
நடுவின்றி (நடுவு + இன்றி): நடுவு - நடுவு நிலை; இன்றி - இல்லாமல்
நன்பொருள் - (பிறரது) நல்ல பொருளை
வெஃகின் - அடைய நினைக்கும் எண்ணம்
குடிபொன்றி: குடி - அவனது குடியை; பொன்றி - அழித்து (பொன்றுதல் - அழித்தல்)
குற்றமும் - குற்றத்தையும், பழியையும்
ஆங்கே - அப்பொழுதே
தரும் - தரும்
நடுவுநிலைமை என்னும் அறத்திற்கு மாறாக பிறரது அரும்பொருளை விரும்பிக் கவர நினைக்கும் எண்ணம், அவரது குடியும் கெட்டழிந்து, பழியும் அப்பொழுதே வந்து சேரும்.
மு.வ உரை:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டு குற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.
பரிமேலழகர் உரை:
நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)
மணக்குடவர் உரை:
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம்,
இது சந்தான நாச முண்டாமென்றது.
கலைஞர் உரை:
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக்
கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து
சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
படுபயன் வெஃகிப் பழிப்படவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
படுபயன்: படு - பிறர் பொருளால் வரும்; பயன் - பயன், நன்மை
வெஃகி - விரும்பி
பழிப்படுவ - பழி தரும் செயல்களை
செய்யார் - செய்யமாட்டார்கள்
நடுவன்மை (நடுவு + அன்மை): நடுவு - நடு நிலைமை; அன்மை (அல்மை) - அல்லாதவை
நாணுபவர் – வெட்கி அஞ்சுபவர்கள்
நடுவு நிலை அல்லாத செயல்களைச் செய்ய வெட்கி நாணுபவர்கள், பிறர் பொருளை கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழி தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள்.
மு.வ உரை:
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
பரிமேலழகர் உரை:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)
மணக்குடவர் உரை:
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர்.
இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர்
தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில்
ஈடுபடமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
சிற்றின்பம் - நிலையற்ற சிறிய இன்பம் (பிறர் பொருளைக் கவர்ந்து அடையும் சிறிய இன்பத்தை)
வெஃகி - விரும்பி
அறனல்ல (அறன் + அல்ல): அறம் அல்லாதவற்றை
செய்யாரே - செய்யமாட்டார்கள்
மற்றின்பம் (மற்று + இன்பம்) - மாறாக அறத்தால் வரும் நிலையான இன்பம்
வேண்டுபவர் – விரும்புபவர்கள்
அறத்தால் வரும் நிலையான இன்பத்தை விரும்புபவர்கள், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் நிலையற்ற சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றை செய்யமாட்டார்கள்.
மு.வ உரை:
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
பரிமேலழகர் உரை:
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.]
மணக்குடவர் உரை:
சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர்.
இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
கலைஞர் உரை:
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன்
கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
இலமென்று (இலம் + என்று): இலம் - இல்லாமையில் உள்ளோம், வறுமையில் உள்ளோம் என்று
வெஃகுதல் - பிறர் பொருளை வஞ்சித்து கவர்தல்
செய்யார் - செய்ய மாட்டார்கள்
புலம்வென்ற - ஐம்புலன்களையும் அடக்கி வென்ற
புன்மையில் (புன்மை + இல்): குற்றமில்லாத (புன்மை - குற்றம்; இல் - இல்லாத)
காட்சியவர் – தெளிந்த அறிவுடையோர் (காட்சி - தெளிவு)
ஐம்புலன்களையும் அடக்கி வென்ற குற்றமில்லாத தெளிந்த அறிவுடையோர், வறுமையில் உள்ளோம் என்று கூறியும் பிறர் பொருளைக் கவர விரும்ப மாட்டார்கள்.
மு.வ உரை:
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், `யாம் வறுமை அடைந்தோம்’ என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
பரிமேலழகர் உரை:
இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)
மணக்குடவர் உரை:
வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார்.
இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
கலைஞர் உரை:
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப்
பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
அஃகி - நுண்ணிய
அகன்ற - பல கற்றுப் பரந்த
அறிவென்னாம் (அறிவு + என்னாம்): அறிவு - அறிவால்; என்னாம் - என்ன பயனாம்?
யார்மாட்டும் - யாரிடத்திலும்
வெஃகி - பிறர் பொருளை விரும்பிக் கவர எண்ணி
வெறிய - பொருந்தாதவற்றை
செயின் – செய்தால்
யாரிடத்திலும் பொருளை விரும்பிக் கவர எண்ணிப் பொருந்தாதவற்றைச் செய்தால், ஒருவரின் நுண்ணிய பல கற்றுப் பரந்த அறிவால் என்ன பயன்?
மு.வ உரை:
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
பரிமேலழகர் உரை:
அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.)
மணக்குடவர் உரை:
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின்,
இஃது அறிவுடையார் செய்யாரென்றது.
கலைஞர் உரை:
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர
விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்
என்ன பயன்?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?
அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
அருள்வெஃகி - அருள் விரும்பி
ஆற்றின்கண் - நல்வழியில்
நின்றான் - நிற்பவன்
பொருள்வெஃகி - பிறர் பொருளை விரும்பினால்
பொல்லாத - தீய வழிகள்
சூழ - சேர்ந்தால்
கெடும் – கெடுவான்
அருளை விரும்பி அறத்தின் வழியில் நிற்பவன் பிறர் பொருளை அடைய விரும்பி தீய வழிகளை எண்ணினால் கெட்டு அழிவான்.
மு.வ உரை:
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
பரிமேலழகர் உரை:
அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்,
இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
கலைஞர் உரை:
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன்
தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில்
ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.
வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.
வேண்டற்க - விரும்பாதிருப்பாயாக
வெஃகியாம் (வெஃகி + ஆம்): வெஃகி - பிறர் பொருள் மீது ஆசை கொண்டு; ஆம் - அதனால் வரும்
ஆக்கம் - செல்வம்
விளைவயின் - விளைவிக்கும் பொழுது
மாண்டற்கு - நன்மை தருவது (மாண்டல் - மாட்சிமைப்படுதல்)
அரிதாம் - அரிது, இருக்காது
பயன் - அதன் பயன்
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் செல்வத்தை விரும்பாதிரு; அது விளைவிக்கும் பயன் நன்மை தருவதாக இருக்காது.
மு.வ உரை:
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
பரிமேலழகர் உரை:
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)
மணக்குடவர் உரை:
பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.
கலைஞர் உரை:
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த
வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.
அஃகாமை - குறையாத தன்மை (அஃகுதல் - குறைதல், சுருங்குதல்)
செல்வத்திற்கு - செல்வத்திற்கு
யாதெனின் (யாது + எனின்) - என்ன வழி என்றால் (யாது - என்ன; எனின் - என்றால்)
வெஃகாமை - பிறர் பொருளைக் கவராத குணம்
வேண்டும் - வேண்டும்
பிறன் - பிறருடைய
கைபொருள் - கைவசம் உள்ள பொருள்
ஒருவருடைய செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், அவர் பிறரது கைப்பொருளை விரும்பாது இருத்தல்தான்.
மு.வ உரை:
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
பரிமேலழகர் உரை:
செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை:
செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை,
இது செல்வ மழியாதென்றது.
கலைஞர் உரை:
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால்
பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று
ஆசைப்படாமலிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு.
அறனறிந்து (அறன் + அறிந்து): அறத்தை அறிந்து
வெஃகா - பிறர் பொருளை விரும்பிக் கவராத
அறிவுடையார் - அறிவுடையவர்கள்
சேரும் - சென்று சேரும்
திறன் - வழி
அறிந்தாங்கே (அறிந்து + அங்கே): அறிந்து - அறிந்து; ஆங்கே - அவ்விடம்
திரு - செல்வம், திருமகள்
அறத்தை அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையோர்களிடம் சேரும் வழியறிந்து செல்வமானது (திருமகள்) சென்று சேரும்.
மு.வ உரை:
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
பரிமேலழகர் உரை:
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும்,
அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.
கலைஞர் உரை:
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர்
பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
இறலீனும் (இறல் + ஈனும்): இறல் - அழிவு; ஈனும் - கொடுக்கும், தரும்
எண்ணாது - நினைத்துப் பார்க்காமல் (விளைவை எண்ணாமல்)
வெஃகின் - பிறர் பொருளைக் கவர விரும்பினால்
விறலீனும் (விறல் + ஈனும்): விறல் - வெற்றி; ஈனும் - கொடுக்கும், வழங்கும்
வேண்டாமை - அவ்வாறு விரும்பாமை (பிறர் பொருளை விரும்பாமை)
என்னுஞ் - என்னும் (எனப்படும்)
செருக்கு - பெருமிதம், பெருமை
பின் விளைவை எண்ணாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால் அது அழிவைத் தரும்; அவ்வாறு விரும்பாது வாழும் பெருமிதம் வெற்றியைத் தரும்.
மு.வ உரை:
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
பரிமேலழகர் உரை:
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]
மணக்குடவர் உரை:
விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்.
இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.
கலைஞர் உரை:
விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள
விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால்
வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்.
Chapter (அதிகாரம்) | Not Coveting (வெஃகாமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 171 172 173 174 175 176 177 178 179 180 |
Not Coveting
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred
படுபயன் வெஃகிப் பழிப்படவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
அருள்வெஃகி யாற்றின்க ணின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish
வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness
அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others
இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory