நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.
இன்னாசெய்யாமை (குறள் எண்: 320)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | பொறையுடைமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 151 152 153 154 155 156 157 158 159 160 |
பொறை - பொறுத்தல்.
பிறர் தனக்குத் தீமை செய்யும் பொழுதும், அதைச் சகித்துப் பொறுத்து பொறுமையக் கடைபிடிக்கும் உயர்ந்த அறத்தின் சிறப்பை, பலனை மற்றும் அதன் உயர்வைக் கூறும் அதிகாரம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
அகழ்வாரை - தன்னை தோண்டுவோரை (அகழ்தல் - தோண்டுதல்)
தாங்கும் - விழாமல் தாங்கும், சுமக்கும்
நிலம்போல - நிலத்தைப் போல
தம்மை – தம்மை
இகழ்வார் - இகழ்ந்து பேசுவோரை
பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
தலை - தலையான பண்பு, முதன்மையான குணம்
தன்னை தோண்டுபவர்களையும் விழாமல் தாங்கிச் சுமக்கும் நிலத்தை போல் தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் மதித்துப் பொறுப்பதே தலையான பண்பாகும்.
மு.வ உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
பரிமேலழகர் உரை:
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)
மணக்குடவர் உரை:
தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம்.
இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
கலைஞர் உரை:
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை
இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே
தலைசிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
பொறுத்த லிறப்பினை யென்றும் மதனை
மறத்த லதனின்று நன்று.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
இறப்பினை - மிகுந்த தீமையினை (இறந்த - அளவு கடந்த)
என்றும் - எப்போதும்
அதனை - அந்த தீமையினை
மறத்தல் - மறந்துவிடுதல்
அதனினும் - அதனை விட
நன்று - நல்லதாகும்
அளவுகடந்து பிறர் செய்யும் தீங்கையும், தண்டிக்க முடியும் என்றபோதும் எப்போதும் பொறுக்க வேண்டும்; அந்தத் தீங்கை முற்றிலும் மறந்து விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
மு.வ உரை:
வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.
பரிமேலழகர் உரை:
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்)
மணக்குடவர் உரை:
பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
கலைஞர் உரை:
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்
காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
இன்மையுள் (இன்மை + உள்) - வறுமையுள், வறுமைகளில் எல்லாம் (இன்மை - இல்லாமை, வறுமை)
இன்மை - இல்லாமை, வறுமை
விருந்தொரால் (விருந்து + ஓரால்): விருந்து - விருந்தினரை; ஓரால் - நீங்குதல்
வன்மையுள் (வன்மை + உள்) - வல்லமையுள், வல்லமைகளில் எல்லாம்
வன்மை - வல்லமை
மடவார் - அறிவின்மையால் தீங்கு செய்பவர்களை
பொறை - பொறுத்துக் கொள்ளுதல்
வறுமையுள் வறுமை விருந்தினரைப் போற்றாமல் நீக்குவது; வலிமையுள் வலிமை என்பது அறிவிலார் செய்யும் தீங்கு செயல்களைப் பொறுத்துக் கொள்வது.
மு.வ உரை:
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
பரிமேலழகர் உரை:
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.]
மணக்குடவர் உரை:
வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.
புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
கலைஞர் உரை:
வறுமையிலும் கொடிய வறுமை; வந்த விருந்தினரை வரவேற்க
முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின்
செயலைப் பொறுத்துக் கொள்வது.
சாலமன் பாப்பையா உரை:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது
நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொநற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
நிறையுடைமை - சான்றாண்மை, நற்குணங்கள் நிறைந்து இருத்தல்
நீங்காமை - நீங்காது இருக்க
வேண்டின் - வேண்டும் என்றால்
பொறையுடைமை - பிழை பொறுக்கும் குணம்
போற்றி - பாதுகாத்து, உயர்த்தி
ஒழுகப் படும் - பின்பற்றப் பட வேண்டும் (ஒழுகு - பின்பற்று)
நிறையுடைமையான சான்றாண்மை நம்மைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமென்றால், பொறுமையைப் போற்றிப் பின்பற்றி வாழ வேண்டும்.
மு.வ உரை:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
பரிமேலழகர் உரை:
நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும்.
நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.
கலைஞர் உரை:
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர்
என்று உலகம் புகழும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
ஒறுத்தாரை - தண்டிப்பவரை (ஒறுத்தல் - தண்டித்தல்)
ஒன்றாக - ஒரு பொருட்டாக
வையாரே - வைக்க மாட்டார்கள்
வைப்பர் - வைத்து மதிப்பர்
பொறுத்தாரை - பொறுத்துக் கொள்பவரை (தீங்கை பொறுப்பவரை)
பொன்போல் - பொன்னைப் போல
பொதிந்து - எப்பொதும் நினைத்து
மற்றவர் செய்யும் தீங்கை பொறுக்காமல் தண்டிப்பவரை இந்த உலகத்தார் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்; பொறுமை காப்பவரைப் பொன்போல் எப்பொதும் மனதில் நினைத்து மதிப்பர்.
மு.வ உரை:
(தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
பரிமேலழகர் உரை:
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)
மணக்குடவர் உரை:
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
கலைஞர் உரை:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை
உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்
கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
ஒறுத்தார்க்கு - தண்டிப்பவர்க்கு (ஒறுத்தல் - தண்டித்தல்)
ஒருநாளை - ஒரு நாள் மட்டும்
இன்பம் - இன்பம்
பொறுத்தார்க்கு - பொறுத்துக் கொள்பவர்க்கு (பிறர் தனக்கு செய்யும் தீங்கை பொறுப்பவர்க்கு)
பொன்றுந் துணையும்: அழியும் வரை, உலகம் அழியும் வரை (பொன்றும் - அழியும்; துணை - அளவு)
புகழ் - புகழ், சிறப்பு
தமக்குத் தீங்கு செய்தவரை பொறுக்காமல் தண்டித்தவர்க்குத் தண்டித்த ஒருநாள் மட்டுமே இன்பம் ; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
மு.வ உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
பரிமேலழகர் உரை:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]
மணக்குடவர் உரை:
ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்.
இது புகழுண்டா மென்றது.
கலைஞர் உரை:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த
ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்
பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக
அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
திறனல்ல (திறன் + அல்ல): திறன் - செய்யத் தகுந்தது; அல்ல - அல்லாதவற்றை
தற்பிறர் - தனக்கு பிறர்
செய்யினும் - செய்தாலும்
நோநொந்து: துன்பத்தால் வருந்தி (நோ - துன்பம்; நொந்து - வருந்தி)
அறனல்ல (அறன் + அல்ல): அறன் - அறம்; அல்ல - அல்லாதவற்றை
செய்யாமை - செய்யாமல் இருப்பது
நன்று - நன்று, நல்லது
இக்குறள் இரண்டு வகையாகப் பொருள்கொள்ளப்படுகிறது.
1) செய்யத் தகாத தீங்கை தனக்கு பிறர் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் துன்பப்படுவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.
2) செய்யத் தகாத தீங்கை தனக்கு பிறர் செய்தாலும், அந்த துன்பத்திற்கு வருந்தி, அதற்கு தண்டிப்பதாக எண்ணி அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.
மு.வ உரை:
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]
மணக்குடவர் உரை:
தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.
கலைஞர் உரை:
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி;
பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த
பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
மிகுதியான் - மனச் செருக்கால்
மிக்கவை - தீயவற்றை
செய்தாரை - செய்தவரை
தாந்தம் (தான் + தம்): தான் தம்முடைய
தகுதியான் - பொறுமையால்
வென்று - வெற்றி கொண்டு
விடல் – விடுதல் வேண்டும்
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் நாம் நமது பொறுமைப் பண்பால் வென்று விடலாம்.
மு.வ உரை:
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.
பரிமேலழகர் உரை:
மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக.
இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக்
குணத்தால் வென்று விடலாம்.
சாலமன் பாப்பையா உரை:
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
துறந்தாரிற் தூய்மை யுடையா ரிறந்தார்வா
யின்னாச்சொ னோக்கிற் பவர்.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
துறந்தாரின் - துறவறம் மேற்கொண்ட துறவிகளின்
தூய்மை - தூய்மை, மனத்தூய்மை
உடையர் - உடையவர்
இறந்தார் - நெறி கடந்து நடந்துகொள்பவர்
வாய் - வாயிலிருந்து பிறக்கும்
இன்னாச்சொல் - துன்பம் தரும் சொற்கள் (இன்னா - துன்பம்)
நோற்கிற்பவர் - பொறுத்துக் கொள்பவர்
நெறி கடந்து நடந்து கொள்பவரின் வாயிலிருந்து பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறவியைப் போலத் தூய்மையானவர் ஆவார்.
மு.வ உரை:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
பரிமேலழகர் உரை:
துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)
மணக்குடவர் உரை:
மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்.
இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.
கலைஞர் உரை:
எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப்
பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
சாலமன் பாப்பையா உரை:
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
உண்ணாது - உணவு உண்ணாமல்
நோற்பார் - நோன்பு இருப்பார்
பெரியர் - உறுதி மிக்க பெரியவர்கள்
பிறர்சொல்லும் - மற்றவர்கள் சொல்லும்
இன்னாச்சொல் - துன்பம் தரும் சொற்கள் (இன்னா - துன்பம்)
நோற்பாரின் - பொறுப்பவர்க்கு (நோன்பு போல் உறுதியுடன் பொறுப்பவர்க்கு)
பின் – பின்னே
உணவு உண்ணாமல் நோன்பு இருக்கும் உறுதி மிக்க பெரியவர்களைக் கூடப் பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
நோன்பு இருப்பவர்களுக்கு கடும் மன உறுதியும், வலி தாங்கும் உடல் வலிமையும் வேண்டும்; பிறர் கூறும் கடுஞ்சொற்களை கேட்க அதைவிடப் பொறுமையும், கோபத்தைக் காக்கும் மன உறுதியும், பக்குவமும் வேண்டும்.
மு.வ உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
பரிமேலழகர் உரை:
உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்,
இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.
கலைஞர் உரை:
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப்
பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த
நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
Chapter (அதிகாரம்) | The Possession of Patience Forbearance (பொறையுடைமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 151 152 153 154 155 156 157 158 159 160 |
The Possession of Patience, Forbearance
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
பொறுத்த லிறப்பினை யென்றும் மதனை
மறத்த லதனின்று நன்று.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொநற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
துறந்தாரிற் தூய்மை யுடையா ரிறந்தார்வா
யின்னாச்சொ னோக்கிற் பவர்.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
நோன்பு இருப்பவர்களுக்கு கடும் மன உறுதியும், வலி தாங்கும் உடல் வலிமையும் வேண்டும்; பிறர் கூறும் கடுஞ்சொற்களை கேட்க அதைவிடப் பொறுமையும், கோபத்தைக் காக்கும் மன உறுதியும், பக்குவமும் வேண்டும்.