வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | பிறனில் விழையாமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 141 142 143 144 145 146 147 148 149 150 |
பிறனில் விழையாமை (பிறன் + இல் + விழையாமை): பிறன் - பிறரின்; இல் - இல்லாள், மனைவி; விழையாமை - விரும்பாதிருத்தல் (விழை - விருப்பம்)
மற்றவர் மனைவியை விரும்பாதிருத்தல் என்னும் அறத்தின் உயர்வையும், அதன் சிறப்பை கூறுவதோடு அத்தகைய அறம் தவறுபவரின் இழிநிலையை குறிப்பிடும் அதிகாரம்.
பிறன்பொருளாட் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
பிறன்பொருளாள்: பிறன் - பிறரின்; பொருளாள் - உரிமையானவளை
பெட்டொழுகும் (பெட்டு + ஒழுகும்): பெட்டு - விரும்பி; ஒழுகும் - நடந்து கொள்ளுதல்
பேதைமை - அறியாமை
ஞாலத்து - உலகத்தில்
அறம்பொருள் - அறம், பொருள் நூல்களை
கண்டார்கண் - ஆராய்ந்து கண்டவர்கள் இடத்தில் (கண் - இடம்)
இல் - இல்லை
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறத்தையும், பொருளையும் கற்று ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
பரிமேலழகர் உரை:
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில்
அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம்
இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
அறன்கடை (அறம் + கடை): அறத்தை விட்டு விலகி
நின்றாருள் (நின்றார் + உள்): நின்றவர்களுள்
எல்லாம் - எல்லாம்
பிறன்கடை - பிறன் மனைவியிடத்து
நின்றாரின் (நின்றார் + இன்): நின்றார் – நின்றவரை; இன் - விட
பேதையார் - மூடர், அறிவற்றவர்
இல் - இல்லை
அறவழியை விடுத்துத் தீயவழியில் சென்றவர்களுள், பிறன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நின்றவரைப் போல் மூடர் இல்லை.
மு.வ உரை:
அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
பரிமேலழகர் உரை:
'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. (அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
காமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.
கலைஞர் உரை:
பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை
விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும்
கீழானவர்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
விளிந்தாரின் (விளிந்தார் + இன்): விளிந்தார் - இறந்தவர்; இன் - விட
வேறல்லர் (வேறு + அல்லர்): வேறு - வேறுபாடு; அல்லர் - இல்லாதவர்
மன்ற - உறுதியாக
தெளிந்தாரில் (தெளிந்தார் + இன்): தெளிந்தார் - நம்புபவர், சந்தேகம் கொள்ளாதவர்; இன் - இடத்தில்
தீமை - தீய செயல்களை
புரிந்தொழுகுவார் (புரிந்து + ஒழுகுவார்): புரிந்து - செய்து; ஒழுகுவார் - நடந்து கொள்பவர்
சந்தேகப்படாமல் நம்பி பழகுபவரின் மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தகாத செயலில் ஈடுபடுபவர், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவர்.
மு.வ உரை:
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்.
பரிமேலழகர் உரை:
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர்.
இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
கலைஞர் உரை:
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்
ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்
எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
எனைத்துணையர் (எனை + துணையர்): எனை - எவ்வளவு; துணையர் - அளவுடையவர் (பெருமை, செல்வம்) (துணை - அளவு)
ஆயினும் - ஆனாலும்
என்னாம் – என்ன?
தினைத்துணையும் - சிறிய தினை அளவும்
தேரான் - எண்ணிப் பார்க்காமல்
பிறனில் (பிறன் + இல்): பிறன் - பிறர்; இல் - இல்லாளிடம்
புகல் - புகுதல்
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் விருப்பம் கொள்பவன், எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?; (மதிப்பற்றவன் தான்)
மு.வ உரை:
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?
பரிமேலழகர் உரை:
எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
எல்லாவமைதியினையும் உடையவராயினும், தினையளவுந் தேராது பிறனுடைய இல்லிலே புகுதல் யாதாய்ப் பயக்குமோ?
பிறனில் விழைவால் வருங் குற்றங் கூறுவார் முற்பட வெல்லாக் குணமுமிழியுமென்று கூறினார்.
கலைஞர் உரை:
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல்,
பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்
பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?
எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
எளிதென (எளிது + என): எளிது - எளிதானது; என - என்று
இல்லிறப்பான் (இல் + இறப்பான்): இல் - பிறன் இல்லாளிடம்; இறப்பான் - நெறி கடந்து செல்பவன் (இறப்பு - அளவு கடந்து, எல்லை கடந்து)
எய்துமெஞ்ஞான்றும் (எய்தும் + எஞ்ஞான்றும்): எய்தும் - அடையும்; எஞ்ஞான்றும் - எக்காலத்திலும்
விளியாது - நீங்காது
நிற்கும் - நிற்கும்
பழி - பழி
அடைவது எளிது என எண்ணி பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
மு.வ உரை:
இச் செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறிதவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
பரிமேலழகர் உரை:
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)
மணக்குடவர் உரை:
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான்.
இது பழியுண்டா மென்றது.
கலைஞர் உரை:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்
முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பகை - பகை
பாவம் - பாவம்
அச்சம் - பயம்
பழியென (பழி + என): பழி – பழி, அவப்பெயர்; என - என்பதான
நான்கும் - நான்கும்
இகவாவாம் (இகவா + ஆம்): இகவா - நீங்காது; ஆம் - ஆகும்
இல்லிறப்பான் (இல் + இறப்பான்): இல் - பிறன் இல்லாளிடம்; இறப்பான் - நெறி கடந்து செல்பவன் (இறப்பு - அளவு கடந்து, எல்லை கடந்து)
கண் - இடத்தில்
பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி செல்பவனை நீங்குவதில்லை.
மு.வ உரை:
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
பரிமேலழகர் உரை:
இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம். (எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்: பிறனில்லின்கண்ணே மிகுவான் மாட்டு.
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை,
தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
அறனியலான் (அறன் + இயலான்): அறன் - அறம்; இயலான் - இயல்புடன்
இல்வாழ்வான் - இல்லறத்தில் வாழ்பவன்
என்பான் - என்பவன்
பிறனியலாள் (பிறன் + இயலாள்): பிறன் - பிறனுடைய; இயலாள் - மனைவி
பெண்மை - பெண் தன்மை
நயவாதவன் - ஆசை கொள்ளாதவன்
அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவன், பிறன் மனைவியிடம் பெண்மையை விரும்பாதவனே.
மு.வ உரை:
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.
பரிமேலழகர் உரை:
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன்.
இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.
கலைஞர் உரை:
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே
அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறன்மனை: பிறன் - பிறனுடைய; மனை - மனைவியை
நோக்காத - விரும்பி நோக்காத
பேராண்மை (பெரிய + ஆண்மை): பெரிய - உயர்ந்த; ஆண்மை - ஆண் குணம்
சான்றோர்க்கு - நெறியாளர்களுக்கு
அறனொன்றோ (அறன் + ஒன்றோ): அறன் - அறம்; ஒன்றோ - ஒன்று மட்டுமா? (அது மட்டுமல்ல)
ஆன்ற வொழுக்கு (ஆன்ற + ஒழுக்கு): ஆன்ற - நிறைந்த; ஒழுக்கு - ஒழுக்கம்
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத உயர்ந்த ஆண்மை, சான்றோர்க்கு அறம் ஒன்று மட்டுமா? (அது மட்டுமல்ல); நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.
மு.வ உரை:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
பரிமேலழகர் உரை:
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம். (புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பிறனது மனையாளைப் பாராத பெரியவாண்மைதானே சான்றோர்க்கு அறனும்
அமைந்த வொழுக்கமுமாம்.இஃது இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமுமென்றது.
கலைஞர் உரை:
வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத
பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்
நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறற்குரியா டோடோயா தார்.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
நலக்குரியார் (நலக்கு + உரியார்): நலக்கு - நலத்திற்கு; உரியார் - உரியவர்கள்
யாரெனின் (யார் + எனின்): யாரென்றால் (எனின் – என்றால்)
நாமநீர் (நாமம் + நீர்): அச்சம் தரும் கடல் நீர் சூழ்ந்த (நாமம் - அச்சம்; நீர் - நீர் சூழ்ந்த)
வைப்பின் - இவ்வுலகில்
பிறர்க்குரியாள் (பிறர்க்கு + உரியாள்): பிறர்க்கு - பிறர்க்கு; உரியாள் - உரியவளை
தோள்தோயாதார்: தோள் - தோள்களை; தோயாதார் – அணைக்காதவர்
அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் யாரென்றால், பிறனுக்கு உரிமையானவளின் தோளை அணைக்காதவர்.
மு.வ உரை:
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
பரிமேலழகர் உரை:
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார்.
நலக்குரியார்- விரும்புதற்குரியார்.
கலைஞர் உரை:
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்
பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.
சாலமன் பாப்பையா உரை:
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
அறன்வரையான்: அறன் - அறநெறியினை; வரையான் - மேற்கொள்ளாமல்
அல்ல செயினும்: அல்ல - தீமை; செயினும் - செய்தாலும் கூட
பிறன்வரையாள்: பிறன் - பிறனது; வரையாள் - உரிமையானவள்
பெண்மை - பெண் தன்மை
நயவாமை - ஆசை கொள்ளாதிருத்தல்
நன்று - நல்லது
அறத்தை மேற்கொள்ளாமல் தீமை செய்தாலும் கூட பிறனுக்கு உரியவளின் பெண் தன்மையை விரும்பாதிருத்தல் நல்லது.
மு.வ உரை:
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று.
இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
கலைஞர் உரை:
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர்
செயலைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
Chapter (அதிகாரம்) | Not coveting another Wife (பிறனில் விழையாமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 141 142 143 144 145 146 147 148 149 150 |
Not coveting another's Wife
பிறன்பொருளாட் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
19 Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who
எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறற்குரியா டோடோயா தார்.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha