வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | அடக்கமுடைமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 121 122 123 124 125 126 127 128 129 130 |
மெய், மொழி, மனம் ஆகியவை தீய வழியில் செல்லாமல் அடக்கத்தை கொண்டிருப்பதன் பயனையும், சிறப்பையும் கூறும் அதிகாரம்.
அடக்கம் - அடக்கம் எனும் நற்பண்பு
அமரருள் (அமரர் + உள்): அமரர் - தேவர்; உள் - உலகத்தில்
உய்க்கும் - கொண்டு சேர்க்கும்
அடங்காமை - அடக்கம் இல்லாமை எனும் தீய குணம்
ஆரிருள் (ஆர் + இருள்): ஆர் - தாங்க முடியாத; இருள் - துன்பமெனும் இருளில்
உய்த்து விடும் - கொண்டு சேர்த்து விடும்
அடக்கம் எனும் நற்பண்பு ஒருவனை உயர்த்தித் தேவருலகில் சேர்க்கும்; அடக்கம் இல்லாமை எனும் தீய குணம் அவனை தாங்க முடியாத துன்ப இருளில் கொண்டு சேர்த்து விடும்.
மு.வ உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்திவிடும்.
பரிமேலழகர் உரை:
அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)
மணக்குடவர் உரை:
மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும்.
மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.
கலைஞர் உரை:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே
இருளாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
காக்க - காக்கப்பட வேண்டிய
பொருளா - பொருளானது, உயர்ந்த செல்வமானது
அடக்கத்தை - அடக்கம் எனும் பண்பு
ஆக்கம் - செல்வம்
அதனினூஉங் கில்லை (அதனின் + ஊங்கு + இல்லை): அதனின் - அதனை விட; ஊங்கு - சிறந்த, உயர்ந்த; இல்லை - வேறு ஒன்றும் இல்லை
உயிர்க்கு - உயிர் கொண்டு வாழ்பவர்க்கு
அடக்கத்தை உயர்ந்த செல்வமாக போற்றிக் காக்க வேண்டும்; அதைவிட உயர்ந்த செல்வம் வேறு ஒன்றும் இல்லை.
மு.வ உரை:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
பரிமேலழகர் உரை:
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)
மணக்குடவர் உரை:
ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.
கலைஞர் உரை:
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும்.அடக்கத்தைவிட
ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
செறிவறிந்து (செறிவு + அறிந்து): செறிவு - அடக்கம்; அறிந்து - அறியப்பட்டு
சீர்மை - சிறப்பு
பயக்கும் - கொடுக்கும்
அறிவறிந்து (அறிவு + அறிந்து): அறிவு - அறிய வேண்டுவன; அறிந்து - அறிந்து கொண்டு
ஆற்றின் - நல்வழியில் (ஆறு - வழி)
அடங்க - அடக்கப் பண்பை
பெறின் - பெற்றால்
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் அனைவராலும் அறியப்பட்டு அது அவனுக்கு மேலும் பெருமையைக் கொடுக்கும்.
மு.வ உரை:
அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
பரிமேலழகர் உரை:
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)
மணக்குடவர் உரை:
அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும்.
அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண்
மூக்கு செவி.
கலைஞர் உரை:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்
நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
நிலையின் - தன் நிலையை விட்டு
திரியாது - மாறாது
அடங்கியான் - அடக்கத்துடன் வாழ்பவன்
தோற்றம் - தோற்றமானது
மலையினும் - மலையைவிட
மாண - மிக
பெரிது - பெரியது
தன் நன்நெறி நிலையை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
மு.வ உரை:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகவும் பெரிதாகும்.
பரிமேலழகர் உரை:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)
மணக்குடவர் உரை:
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது.
நிலை- வன்னாச்சிரம தன்மம்.
கலைஞர் உரை:
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும்
கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
எல்லார்க்கும் - எல்லோருக்கும்
நன்றாம் - நல்லதாகும்
பணிதல் - பணிவுடன் வாழ்தல்
அவருள்ளும் - அவர்களுள்
செல்வர்க்கே - செல்வம் படைத்தவர்களுக்கே
செல்வம் - இன்னுமொரு செல்வம் சேர்ந்த
தகைத்து - தன்மையாகும்
எல்லோருக்கும் பணிவு எனும் பண்பு நன்மை பயப்பதாகும்; அவர்களுக்குள் செல்வம் படைத்தவர்களுக்கு அது இன்னுமொரு செல்வமாக விளங்கும்.
மு.வ உரை:
பணிவுடையராக ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
பரிமேலழகர் உரை:
பணிதல் எல்லாாக்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடை
யார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம்.செல்வம் - மிகுதி.
கலைஞர் உரை:
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே
செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு
செல்வமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.
ஒருமையுள் - ஒரு பிறப்பில்
ஆமைபோல் - ஆமையை போல்
ஐந்தடக்கல் (ஐந்து + அடக்கல்): ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி அகிய ஐந்து பொறிகளையும்; அடக்கல் - அடக்கும்
ஆற்றின் - ஆற்றல் பெற்றிருந்தால்
எழுமையும் - ஏழு பிறப்பும்
ஏமாப் புடைத்து (ஏமாப்பு + உடைத்து): ஏமாப்பு - பாதுகாப்பு; உடைத்து - உடையதாகும்
ஒரு பிறப்பில், ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் தீய வழிகளில் செலுத்தாமல் அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுடைய ஏழு பிறப்பிலும் அரணாக இருந்து காக்கும்.
மு.வ உரை:
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
பரிமேலழகர் உரை:
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.
கலைஞர் உரை:
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல்
ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக்
காவல் அரணாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.
யாகாவா ராயினும் (யா + காவார் + ஆயினும்): யா - எதையும்; காவார் - காக்க மாட்டாதவர்; ஆயினும் - ஆனாலும்
நாகாக்க: நா- நாவை, நாக்கை; காக்க - அடக்க வேண்டும்
காவாக்கால் - காக்காவிட்டால்
சோகாப்பர் - துன்பப்படுவர், வருந்துவர்
சொல்லிழுக்கு (சொல் + இழுக்கு): சொல் - சொல்லில்; இழுக்கு - குற்றம்
பட்டு - ஏற்பட்டு
ஒருவர் எதைக் காக்க முடியாதவரானாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். அப்படி காக்கத் தவறினால், அவர் சொல்லும் சொல்லால் குற்றம் ஏற்பட்டு துன்பப்படுவர்.
மு.வ உரை:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
பரிமேலழகர் உரை:
யாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். ('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.)
மணக்குடவர் உரை:
எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான்.
இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.
கலைஞர் உரை:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக்
காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்
துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
ஒன்றானுந் (ஒன்றானும்) - ஒன்றே என்றாலும்
தீச்சொல் (தீ + சொல்): தீ - தீய, கொடிய; சொல் - சொற்களின்
பொருட்பயன் - பயனாக வரும் துன்பம்
உண்டாயின் - உண்டாகி விட்டால்
நன்றாகாதாகி விடும் (நன்று + ஆகாது + ஆகிவிடும்): நன்று - மற்ற நன்மைகளால் எற்படும் பயனும்; ஆகாது – ஆகாமல்; ஆகிவிடும் - போய் விடும்
ஒரு சொல் தீய சொல்லாக இருந்தாலும், அதனால் விளையும் துன்பமானது, அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் கிடைக்காமல் போய்விடும். ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல் ஆகிவிடும்.
மு.வ உரை:
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
பரிமேலழகர் உரை:
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை:
ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும்.
இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.
கலைஞர் உரை:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல்
தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில்
உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
தீயினாற் - தீயினால்
சுட்டபுண்: சுட்ட - சுட்டு எற்பட்ட; புண் - புண்ணானது
உள்ளாறும் (உள் + ஆறும்): உள் - மனதில்; ஆறும் - ஆறிவிடும்
ஆறாதே - ஆறாமல் எப்போதும் இருக்கும்
நாவினாற் - நாவினால், நாவில் பிறக்கும் சொற்களால்
சுட்ட - சுட்டு எற்பட்ட
வடு – காயம்
ஒருவனை தீயினால் சுட்ட புண் உடம்பில் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலப்போக்கில் ஆறிப்போய்விடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
மு.வ உரை:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
பரிமேலழகர் உரை:
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.
கலைஞர் உரை:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு
திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
கதங்காத்து (கதம் + காத்து): கதம் - சினம், கோபம்; காத்து - அடக்கிக் காத்து
கற்றடங்கல் (கற்று + அடங்கல்): கற்று - கல்வி பெற்று; அடங்கல் - அடக்கம் கொண்டு
ஆற்றுவான் - ஆற்றல் மிக்கவனாக இருப்பவன்
செவ்வி - காலத்தினை
அறம்பார்க்கும் (அறம் + பார்க்கும்): அறமானது எதிர்பார்த்து
ஆற்றின் - வழியை
நுழைந்து - நுழைந்து சென்றடையும்
மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, கல்வி கற்று, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழிபார்த்துக் காத்திருக்கும்.
மு.வ உரை:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
பரிமேலழகர் உரை:
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும்.
இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.
கலைஞர் உரை:
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை
அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
Chapter (அதிகாரம்) | The Possession of Self-restraint (அடக்கமுடைமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 121 122 123 124 125 126 127 128 129 130 |
The Possession of Self-restraint
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha