வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | குறிப்பறிவுறுத்தல் |
குறள் - பால் | காமத்துப்பால் |
குறள் - இயல் | கற்பியல் |
குறள் - வரிசை | 1271 1272 1273 1274 1275 1276 1277 1278 1279 1280 |
குறிப்பறிவுறுத்தல்
மு.வ உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)
மணக்குடவர் உரை:
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.
கலைஞர் உரை:
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து
விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை
விரும்பாத காதல்.
சாலமன் பாப்பையா உரை:
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.
மு.வ உரை:
கண்நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.
பரிமேலழகர் உரை:
(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)
மணக்குடவர் உரை:
காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளினையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது.
கலைஞர் உரை:
கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என்
காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.
மு.வ உரை:
(கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப்போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. (அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு.
அழகு - புணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.
கலைஞர் உரை:
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின்
அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.
சாலமன் பாப்பையா உரை:
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.
மு.வ உரை:
அரும்பு தோன்றும்போதும் அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)
மணக்குடவர் உரை:
மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு.
இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
கலைஞர் உரை:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு
பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய
நினைவும் நிரம்பியிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
மு.வ உரை:
காதலி என்னை நோக்கிச் செய்துவிட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு. என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து.
தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.
கலைஞர் உரை:
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின்
குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத்
தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.
மு.வ உரை:
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல் கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து.
இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கலைஞர் உரை:
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது
மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை
உணர்த்துவது போல் இருக்கிறதே.
சாலமன் பாப்பையா உரை:
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
மு.வ உரை:
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மைவிட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)
மணக்குடவர் உரை:
குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.
கலைஞர் உரை:
குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது,
உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு
முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.
மு.வ உரை:
எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)
மணக்குடவர் உரை:
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.
இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள்
கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
மு.வ உரை:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.
பரிமேலழகர் உரை:
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)
மணக்குடவர் உரை:
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது.
அது - உடன்போக்கு.
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக்
கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள் காதலனைத் தொடர்ந்து
செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால்
உணர்த்தினான்.
சாலமன் பாப்பையா உரை:
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.
மு.வ உரை:
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாம லிருக்குமாறு இரத்தல், பெண்தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர்.
இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.
கலைஞர் உரை:
காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு
இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
Chapter (அதிகாரம்) | The Reading of the Signs (குறிப்பறிவுறுத்தல்) |
Section (குறள் - பால்) | Love (காமத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | The Post-marital love (கற்பியல்) |
Order (குறள் - வரிசை) | 1271 1272 1273 1274 1275 1276 1277 1278 1279 1280 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha