வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | நிறையழிதல் |
குறள் - பால் | காமத்துப்பால் |
குறள் - இயல் | கற்பியல் |
குறள் - வரிசை | 1251 1252 1253 1254 1255 1256 1257 1258 1259 1260 |
நிறையழிதல்
மு.வ உரை:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவைக் காமம் ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது,
பரிமேலழகர் உரை:
(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. (கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.)
மணக்குடவர் உரை:
காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை.
இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம்
எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மனஅடக்கம் என்கிற கதவையே
உடைத்தெறிந்து விடுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!
மு.வ உரை:
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது; அஃது என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஏவல் கொண்டு ஆள்கின்றது.
பரிமேலழகர் உரை:
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. ('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)
மணக்குடவர் உரை:
காமமென்றொன்று கண்ணோட்டமுடைத்தன்று: என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில்கொள்ளா நின்றது.
தொழில் கொள்ளுதலாவது அப்பொழுது அவர்மாட்டுப் போக விடுத்தல். இது நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றாமையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.
கலைஞர் உரை:
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில்
அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.
மு.வ உரை:
யான் காமத்தை என்னுள் மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல்போல் தானே வெளிப்பட்டு விடுகின்றது.
பரிமேலழகர் உரை:
(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது. ('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது.
இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும்
மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்;
என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.
மு.வ உரை:
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன்; ஆனால், என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
யானே நிறையுடையே னென்றிருப்பன்; இப்படி இருக்கவும், என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது.
இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.
கலைஞர் உரை:
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என்
காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு
விடுகிறதே.
சாலமன் பாப்பையா உரை:
இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.
மு.வ உரை:
தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.
பரிமேலழகர் உரை:
(நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று. (இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றால் அறிவதொன்று அன்று.
இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத்
தொடர்ந்து செல்லாத மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு
இருப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.
மு.வ உரை:
வெறுத்து நீங்கிய காதலரின்பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்தக்காமநோய் எத்தன்மையானது? அந்தோ?
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது.
இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.
கலைஞர் உரை:
வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே
செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின்
தன்மைதான் என்னே.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.
மு.வ உரை:
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால், நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமலிருப்போம்.
பரிமேலழகர் உரை:
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)
மணக்குடவர் உரை:
நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்.
அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு
கலைஞர் உரை:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு
விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு
இருப்பதையே நாம் அறிவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
மு.வ உரை:
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது. பலமாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை? (பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.)
மணக்குடவர் உரை:
பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?
இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக
இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான
பாகுமொழியன்றோ?
சாலமன் பாப்பையா உரை:
என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!
மு.வ உரை:
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)
மணக்குடவர் உரை:
புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு.
இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.
கலைஞர் உரை:
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்;
ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக்
கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.
மு.வ உரை:
கொழுப்பைத் தீயில் இட்டாற் போன்ற உருகும் நெஞ்சு உடைய என்னைப்போன்றவர்க்கு, 'இசைந்து ஊடிநிற்போம்' என்று ஊடும் தன்மை உண்டோ?
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?
கலைஞர் உரை:
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம்
உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக
இருக்க முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?
Chapter (அதிகாரம்) | Reserve Overcome (நிறையழிதல்) |
Section (குறள் - பால்) | Love (காமத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | The Post-marital love (கற்பியல்) |
Order (குறள் - வரிசை) | 1251 1252 1253 1254 1255 1256 1257 1258 1259 1260 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha