வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | நடுவு நிலைமை |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 111 112 113 114 115 116 117 118 119 120 |
யாரிடத்திலும் நடுவு நிலை தவறாது, அறத்திலிருந்து வழுவாது, சமமாக நடந்து கொள்ளும் பண்பையும் அதன் சிறப்பையும் விளக்கும் அதிகாரம்.
தகுதி - நடுவு நிலைமை என்னும் தகுதி
எனவொன்று (என + ஒன்று): என்னும் ஒன்றே
நன்றே - நல்லதாகும்
பகுதியால் - பல தரப்பட்டவர்களிடத்தும் (பகைவர், அயலார், நண்பர்)
பாற்பட்டு - முறை தவறாமல்
ஒழுக - நடக்க
பெறின் – பெற்றால்
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது நடந்து கொண்டால், நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்கு நன்மை செய்யக்கூடியது.
மு.வ உரை:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
பரிமேலழகர் உரை:
தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.
கலைஞர் உரை:
பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச்
சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும்
தகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.
செப்பம் - நடுவு நிலைமை
உடையவன் - உடையவன்
ஆக்கம் - செல்வம்
சிதைவின்றி (சிதைவு + இன்றி): சிதைவு - அழிவு; இன்றி - இல்லாமல்
எச்சத்திற்கு - சந்ததியினனருக்கு
ஏமாப்பு - பாதுகாப்பு
உடைத்து - உடையதாகும்
நடுவுநிலைமை உடையவனின் செல்வம் அழியாமல் அவனுடைய தலைமுறையினர்க்கும் பாதுகாப்பாக இருக்கும்.
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
பரிமேலழகர் உரை:
செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.)
மணக்குடவர் உரை:
நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து.
நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.
கலைஞர் உரை:
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித்
தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்
நன்றே - நன்மையையே
தரினும் - தருவதாக இருந்தாலும்
நடுவிகந்தாம் (நடுவு + இகந்து + ஆம்): நடுவு - நடுவு நிலைமை; இகந்து - தவறி, விலகி, கைவிட்டு
ஆக்கத்தை - செல்வத்தை, நன்மையை
அன்றே - அப்பொழுதே
ஒழிய - ஒழித்து
விடல் - விடுதல் வேண்டும்
நன்மையே தருவதாக இருந்தாலும் நடுவுநிலை தவறி உண்டாகும் பயனை அப்போதே கைவிட வேண்டும்.
மு.வ உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.
பரிமேலழகர் உரை:
நன்றே தரினும் - தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. (நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.
கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக்
கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான்
கடைப்பிடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.
தக்கார் - நடுவு நிலையாளர், நீதியாளர்
தகவிலர் - நடுவு நிலையற்றவர்
என்பது - என்பதை
அவரவர் - அவரவர்க்கு
எச்சத்தால் - எஞ்சி நிற்ப்பவற்றால் (புகழ், செல்வம் ஆகியன)
காணப்பபடும் - அறியப்படும்
ஒருவர் நடுவுநிலைமை உடைய நேர்மையானவரா அல்லது நடுவுநிலைமை தவறிய நேர்மையற்றவரா என்பதை அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்.
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
பரிமேலழகர் உரை:
தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும்.
இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. (இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.)
கலைஞர் உரை:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா
என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக்
கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
கேடும் - கெட்ட நிலையும், தீமையும்
பெருக்கமும் - நல்ல நிலையும், நன்மையும்
இல்லல்ல (இல் + அல்ல): இல்லாதவை அல்ல (யாருடைய வாழ்விலும்)
நெஞ்சத்து - நெஞ்சத்தில்
கோடாமை - நடுவு நிலைமை தவறாமை
சான்றோர்க்கு - சான்றோர்களாகிய நெறியாளர்களுக்கு
அணி - அழகு
தீமையும் நன்மையும் ஒருவர் வாழ்வில் இல்லாதவை அல்ல; எந்த நிலையிலும் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
மு.வ உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
பரிமேலழகர் உரை:
கேடும் பெருக்கமும் இல் அல்ல - தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்.)
மணக்குடவர் உரை:
கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.
கலைஞர் உரை:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு
நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு
அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
கெடுவல்யான்: கெடுவல் - கெட்டு விடுவேன்; யான் - நான்
என்பது - என்பதை
அறிகதன் (அறிக + தன்): அறிக - அறிந்து கொள்க; தன் - தன்னுடைய
நெஞ்சம் - மனது
நடுவொரீஇ (நடு + ஒரீஇ): நடு - நடுவு நிலைமை; ஒரீஇ - விலகி
அல்ல - அல்லாதவற்றை, தீமையை
செயின் - செய்தால்
தன் நெஞ்சம் நடுவுநிலை விலகி தவறு செய்ய எண்ணினால், அதுவே தான் கெட்டு அழியப் போவதற்கான அறிகுறி என்று ஒருவன் அறிய வேண்டும்.
மு.வ உரை:
தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.
பரிமேலழகர் உரை:
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)
மணக்குடவர் உரை:
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு
வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே
தெரிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
கெடுவாக - கேடு என்று
வையாது - வைக்காது, கருதாது
உலகம் - உலகத்தினர்
நடுவாக - நடுவு நிலைமையில் வாழ்ந்து
நன்றிக்கண் - அறத்தினிடத்து
தங்கியான் - தங்கி இருப்பவனது
தாழ்வு - வறுமை நிலை
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடையும் வறுமை நிலையைக் கேடு என்று இந்த உலகம் கருதாது.
மு.வ உரை:
நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.
பரிமேலழகர் உரை:
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் - வறுமை என்று கருதார் உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.
கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன்
காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை
உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
சாலமன் பாப்பையா உரை:
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.
சமன்செய்து - சமமாக இருந்து, தான் சமமாக இருந்து
சீர்தூக்குங் கோல் (சீர்தூக்கும் + கோல்): சீர்தூக்கும் - அளந்து கூறும்; கோல் - துலாக்கோல், தராசு
போல் - போல
அமைந்தொருபால் (அமைந்து + ஒருபால்): அமைந்து - அமைந்து, இருந்து; ஒருபால் - ஒரு பக்கமாக
கோடாமை - கோணாமல் இருத்தல்
சான்றோர்க்கு – சான்றோர்களுக்கு
அணி - அழகு
முதலில் தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் தராசு போல அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
மு.வ உரை:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
பரிமேலழகர் உரை:
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் - முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம். (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.)
மணக்குடவர் உரை:
சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது.
இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து
நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.
சொற்கோட்டம் (சொல் + கோட்டம்): சொல் - சொல்லில்; கோட்டம் - கோணுதல்
இல்லது - இல்லாதது
செப்பம் - நடுவு நிலைமை
ஒருதலையா - உறுதியாக
உட்கோட்டம் (உள் + கோட்டம்): உள் - மனதில்; கோட்டம் - கோணுதல்
இன்மை - இல்லாத தன்மை
பெறின் - பெற்றிருப்பின்
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை (நேர்மையை) உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இருக்காது (நீதி தவறாது); அதுவே நடுவுநிலைமையாகும்.
மு.வ உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்.
பரிமேலழகர் உரை:
செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.)
மணக்குடவர் உரை:
நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின்.
இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இது பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று.
கலைஞர் உரை:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில்
நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
சாலமன் பாப்பையா உரை:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
வாணிகம் - வாணிகம், வியாபாரம்
செய்வார்க்கு - செய்பவர்களுக்கு
வாணிகம் - நல்ல வியாபார முறை என்பது
பேணி - பாதுகாத்து
பிறவும் - மற்றவர்களது பொருளையும்
தமபோல் (தமது + போல்) - தமது பொருள் போன்று
செயின் - செய்தால்
பிறர் பொருளையும் தம் பொருள் போல் கருதி, காத்து நேர்மையுடன் வாணிகம் செய்வதே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல முறையாகும்.
மு.வ உரை:
பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
பரிமேலழகர் உரை:
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)
மணக்குடவர் உரை:
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின்.
வாணிகம் - இலாபம்.
கலைஞர் உரை:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே
கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
Chapter (அதிகாரம்) | Impartiality (நடுவு நிலைமை) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 111 112 113 114 115 116 117 118 119 120 |
Impartiality
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற் கேமாப்பு உடைத்து.
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha