வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | நல்குரவு |
குறள் - பால் | பொருட்பால் |
குறள் - இயல் | குடியியல் |
குறள் - வரிசை | 1041 1042 1043 1044 1045 1046 1047 1048 1049 1050 |
நல்குரவு
மு.வ உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்,
பரிமேலழகர் உரை:
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று)
மணக்குடவர் உரை:
நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே)
இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.
கலைஞர் உரை:
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்
துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
பரிமேலழகர் உரை:
இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.
மணக்குடவர் உரை:
நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும்.
தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.
கலைஞர் உரை:
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு
ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்
நிம்மதி என்பது கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.
பரிமேலழகர் உரை:
நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.)
மணக்குடவர் உரை:
தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு.
நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது
குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.
கலைஞர் உரை:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது
அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக்
கெடுத்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.
மு.வ உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்.
பரிமேலழகர் உரை:
இற்பிறந்தார்கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும். (சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளிவருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.)
மணக்குடவர் உரை:
நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்.
கலைஞர் உரை:
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த
சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.
மு.வ உரை:
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
பரிமேலழகர் உரை:
நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும். (குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும்.
இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.
கலைஞர் உரை:
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள்
கிளர்ந்தெழும்.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.
மு.வ உரை:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
பரிமேலழகர் உரை:
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும்.
ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.
கலைஞர் உரை:
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும்,
அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற்
போகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
மு.வ உரை:
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
பரிமேலழகர் உரை:
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
அறத்தோடு இயைபில்லாத நல்குரவுடையான், தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
கலைஞர் உரை:
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை,
அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள்.
சாலமன் பாப்பையா உரை:
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.
மு.வ உரை:
நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்,)
பரிமேலழகர் உரை:
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)
மணக்குடவர் உரை:
இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை.
இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.
கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,
தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன்
ஏங்குவான்.
சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?
மு.வ உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
பரிமேலழகர் உரை:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது.
இஃது உறங்கவொட்டா தென்றது.
கலைஞர் உரை:
நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்;
ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத
ஒன்றாகும்.
சாலமன் பாப்பையா உரை:
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
மு.வ உரை:
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
பரிமேலழகர் உரை:
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம்.
துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.
கலைஞர் உரை:
ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்
துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.
சாலமன் பாப்பையா உரை:
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.
Chapter (அதிகாரம்) | Poverty (நல்குரவு) |
Section (குறள் - பால்) | Wealth (பொருட்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Miscellaneous (குடியியல்) |
Order (குறள் - வரிசை) | 1041 1042 1043 1044 1045 1046 1047 1048 1049 1050 |
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha