வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
திருக்குறள், மனித இனத்திற்கு ஒரு மனிதன் தந்த வரம்.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் மிக முக்கியமானது திருக்குறள்.
இது பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்று. இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இது, மனித வாழ்விற்கு அடிப்படையான, இன்றியமையாத உயர்ந்த அறங்களை போதிக்கும் நூல்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகள் கொண்டது. இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இவ்வாறாக, 133 அதிகாரங்களும், ஒவ்வொன்றும் 10 பாடல்களுடன் மொத்தம் 1330 குறள்கள் உள்ளடக்கிய இலக்கியம் இது.
வாழ்வியலின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதால் திருக்குறள் அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டு பல பெயர்களால் அழைப்படுகிறது.
இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் அமைந்துள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும், மூன்று பெரும் பால் பிரிவுகளைக் கொண்டதால் இதனை முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆன இலக்கியமாக நமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரே நூல் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
1) முப்பால் 2) உத்தரவேதம் 3) தெய்வநூல் 4) பொதுமறை
5) பொய்யாமொழி 6) வாயுறை வாழ்த்து 7) தமிழ் மறை 8) திருவள்ளுவம்
திருக்குறளின் காலம் குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உண்டு. திருக்குறளின் காலமாக பலராலும் கணிக்கப்படுவது கி.பி 2 ஆம் நூற்றாண்டு.
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில்,மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று அறியப்படுகிறது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாக அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும் மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.
திருவள்ளுவரின் காலம் உறுதியாகத் தெரியவில்லை; எனினும் அவரது பிறந்த ஆண்டு கி.மு 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
திருவள்ளுவரின் வெறு பெயர்கள்,
1) நாயனர் 2) தெய்வப்புலவர் 3) நான்முகனார் 4) தேவர் 5) மாதானுபங்கி
6) செந்நாப்போதார் 7) பெருநாவலர் 8) புலவர் 9) பொய்யில் புலவர்
அதிகாரம் | இனியவைகூறல் |
குறள் - பால் | அறத்துப்பால் |
குறள் - இயல் | இல்லறவியல் |
குறள் - வரிசை | 91 92 93 94 95 96 97 98 99 100 |
இனிய சொற்களைப் பேசுவதும், அதன் பயனும், புகழையும் கூறும் அதிகாரம்.
இன்சொலால்: இன் - இனிய; சொல்லால் - சொற்களால்
ஈரம் - அன்புடன்
அளைஇ – கலந்து, பொருந்தி
படிறிலவாம் (படிறு + இலவாம்): படிறு - வஞ்சம்; இலவாம் - இல்லாது
செம்பொருள் - அறத்தினை
கண்டார் - கண்டுணர்ந்த மேலோர்
வாய்ச்சொல் - வாயிலிருந்து பிறக்கும் சொல்
இன்சொல் என்பது, அன்பு நிறைந்து, வஞ்சமின்றி, அறத்தினை உணர்ந்து மேற்கொள்பவர்கள் வாயிலிருந்து பிறக்கும் சொற்களாகும்.
மு.வ உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
பரிமேலழகர் உரை:
இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
கலைஞர் உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,
வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே
இன்சொல் எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
அகன் - அகம், நெஞ்சம், உள்ளம்
அமர்ந்து - மலர்ந்து
ஈதலின் (ஈதல் + இன்): கொடுப்பதைவிட (ஈதல் - கொடுத்தல்; இன் – விட)
நன்றே - நல்லதாகும், உயர்ந்ததாகும்
முகனமர்ந்து (முகன் + அமர்ந்து): முகன் - முகம்; அமர்ந்து - மலர்ந்து
இன்சொலன்: இன் - இனிய; சொலன் - சொற்களை பேசுபவன்
ஆகப்பெறின் - ஆக இருந்துவிட்டால்
முகம் மலர்ந்து இனிய சொற்கள் பேசுபவராக இருப்பது, அகம் மலர்ந்து கொடுப்பதைவிட மேலான பண்பாகும்.
மு.வ உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
பரிமேலழகர் உரை:
அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)
மணக்குடவர் உரை:
மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.
கலைஞர் உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக்
கொடுப்பதை விட மேலான பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
முகத்தான் - முகத்தால்
அமர்ந்து - மலர்ந்து, விரும்பி
இனிது - இனிமையாக
நோக்கி - நோக்கி, பார்த்து
அகத்தானாம் (அகத்தான் + ஆம்): அகத்தான் - மனத்துடன் ; ஆம் - ஆகும்
இன்சொலினதே: இன் - இனிய; சொலினதே - சொற்களை சொல்லுவதே
அறம் - அறம்
முகம் மலர்ந்து, இனிமையாக நோக்கி, மனதிலிருந்து இனிய சொற்களை சொல்லுவதே அறம் ஆகும்.
மு.வ உரை:
முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
பரிமேலழகர் உரை:
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.
கலைஞர் உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே
அறவழியில் அமைந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.
துன்புறூஉம் - துன்பத்தினை கொடுக்கும்
துவ்வாமை - வறுமை
இல்லாகும் - இல்லாதது ஆகும்
யார்மாட்டும் - எல்லோரிடத்திலும்
இன்புறூஉம் - இன்பம் தரும்
இன்சொலவர்க்கு: இன் - இனிய; சொலவர்க்கு - சொற்களை சொல்லுபவர்க்கு
எல்லோரிடத்திலும் இன்பம் தரும் இனிய சொற்களை பேசுபவர்களுக்குத் துன்பத்தை கொடுக்கும் வறுமை நெருங்காது.
மு.வ உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
பரிமேலழகர் உரை:
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.
கலைஞர் உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு
'நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
பணிவுடையன் (பணிவு + உடையன்): பணிவு எனும் நற்பண்பு கொண்டவன்
இன்சொலன்: இன் - இனிய; சொலன் - சொற்களை பேசுபவன்
ஆதல் - இருத்தல்
ஒருவற்கு - ஒருவற்கு
அணி - அணிகலன்
அல்ல மற்றுப் பிற - மற்றவை அல்ல (மற்று - அசை நிலை)
அனைவரிடமும் பணிவும், இனிய சொற்களை பேசுபவனாக இருத்தல் ஒருவருக்கு அணிகலன் ஆகும்; மற்றவை அல்ல.
மு.வ உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும், மற்றைய அணிகள் அணிகள் அல்ல.
பரிமேலழகர் உரை:
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா.
இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.
கலைஞர் உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர,
ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
அல்லவை - தீமைகள்
தேய - தேய, குறைய
அறம் - அறமானது
பெருகும் - மிகுந்து வளரும்
நல்லவை - நன்மை தருபவை
நாடி - தேடி ஆராய்ந்து, விரும்பி
இனிய சொலின் - இனிய சொற்களை சொல்வதினால்
பிறர்க்கு நன்மை தரும்படியான நல்ல சொற்களை தேடி ஆராய்ந்து இனிமையாக சொல்வதினால் தீமைகள் குறைந்து, அறம் தழைத்து வளரும்.
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
பரிமேலழகர் உரை:
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.
கலைஞர் உரை:
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,
இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
நயன்ஈன்று: நயன் - நன்மை, ஈன்று - வழங்கி
நன்றி - அறம்
பயக்கும் - கொடுக்கும்
பயன்ஈன்று - நற்பயன் அளிக்கும்
பண்பின் - பண்பிலிருந்து
தலைப்பிரியா - விலகாத
சொல் - இனிய சொற்கள்
பிறர்க்கு நற்பயன் அளிக்கும் பண்பிலிருந்து விலகாத இனிய சொற்கள், பேசுவோர்க்கு நன்மையையும், அறப்பண்பையும் சேர்க்கும்.
மு.வ உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
பரிமேலழகர் உரை:
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)
மணக்குடவர் உரை:
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும்
பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.
கலைஞர் உரை:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத
சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும்
உண்டாக்கக் கூடியவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
சிறுமையுள் - துன்பம்
நீங்கிய - விலக்கிய
இன்சொல் - இனிய சொற்கள்
மறுமையும் - மறுபிறப்பிலும், இறப்புக்கு பின்னும்
இம்மையும் - இப்பிறப்பிலும், வாழும் பொதும்
இன்பம் - இன்பம், மகிழ்ச்சி
தரும் - தரும், கொடுக்கும்
பிறர்க்கு துன்பம் விளைவிக்காத இனிய சொற்கள் ஒருவனுக்கு இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் இன்பத்தை கொடுக்கும்.
மு.வ உரை:
பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
பரிமேலழகர் உரை:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.)
மணக்குடவர் உரை:
புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.
கலைஞர் உரை:
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும்,
வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
இன்சொல் - இனிமையான சொற்கள்
இனிதீன்றல் (இனிது + ஈன்றல்): இனிது – இன்பத்தினை; ஈன்றல் - கொடுப்பதை, அளிப்பதை
காண்பான் - காண்பவன்
எவன்கொலோ - என்ன பயன் கருதி?, எதற்காக?
வன்சொல்: வன் - கடுமையான; சொல் - சொற்களை
வழங்குவது - பேசுவது
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை காண்கின்றவன், அவற்றிற்கு மாறான கடுஞ் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
மு.வ உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
பரிமேலழகர் உரை:
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்.
இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.
கலைஞர் உரை:
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு
மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
இனிய - இனிய சொற்கள்
உளவாக - உள்ள போது, இருக்கும் போது
இன்னாத - துன்பமான, துன்பமளிக்கும்
கூறல் - சொற்களை கூறுவது
கனிஇருப்ப – கனி (பழம்) இருக்கும் போது
காய் - காய்களை
கவர்ந்தற்று (கவர்ந்து + அற்று): கவர்ந்து - பறித்து உண்பது; அற்று - போன்றது (அற்று - உவம உருபு)
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழங்கள் இருக்க காய்களை உண்பது போலாகும்.
மு.வ உரை:
இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
பரிமேலழகர் உரை:
இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
கலைஞர் உரை:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக்
கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத்
தின்பதற்குச் சமமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
Chapter (அதிகாரம்) | The Utterance of Pleasant Words (இனியவைகூறல்) |
Section (குறள் - பால்) | Virtue (அறத்துப்பால்) |
Chapter Group (குறள் - இயல்) | Domestic Virtue (இல்லறவியல்) |
Order (குறள் - வரிசை) | 91 92 93 94 95 96 97 98 99 100 |
The Utterance of Pleasant Words
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha
Rev. Dr. G.U.Pope:
Yogi Shuddanandha