வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
தமிழர் வரலாற்றில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலம் சங்க காலம் எனப்படும். சங்க காலம் என்பது கி.மு. 1000 முதல் கி.பி. 200 வரை என்று சிலராலும், கி.மு 300 முதல் கி.பி 300 வரையாக சில வரலாற்று அறிஞர்களாலும் குறிக்கப்படுகிறது. அக்கால அளவில் தென்மதுரை, கபாடபுரம், மதுரை அகிய பாண்டிய நகர்களில் முறையே முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் அகியன இயங்கியதாக குறிப்புகள் உள்ளன. தமிழ் ஆய்வு மன்றங்களாக விளங்கிய அவற்றில் அரிய இலக்கியங்கள் பல இயற்றப் பெற்றன; அவை சங்க இலக்கியங்கள் எனப்படும். அச்சங்கங்கள் காலப்போக்கில் மறைந்து அங்கு படைக்கப்பட்ட இலக்கியங்கள் பலவும் இயற்கைச் சீற்றங்களாலும் வேறு பல காரணங்களாலும் மறைந்தன. ஆனாலும், எஞ்சிய பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதன்படி, சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத் தொகுக்கப்பெற்றன. அவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல். தொல்காப்பியத்திற்கு முன்னரே தனிப்பாடல்களாக இயற்றப்பெற்ற சங்கப் பாடல்கள் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திற்கு பொருத்தமாகத் திகழ்கின்றன.
பதினெண் மேற்கணக்கு நூல்கள்:
1) எட்டுத்தொகை
2) பத்துப் பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் |
பத்துப்பாட்டு நூல்கள் |
1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. கலித்தொகை 5. அகநானூறு 6. பதிற்றுப்பத்து 7. புறநானூறு 8. பரிபாடல்
|
1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. சிறுபாணாற்றுப்படை 4. பொரும்பாணாற்றுப்படை 5. மலைபடுகடாம் 6. மதுரைக்காஞ்சி 7. குறிஞ்சிப்பாட்டு 8. பட்டினப்பாலை 9. முல்லைப்பாட்டு 10. நெடுநல்வாடை
|
எட்டுத்தொகைநூல்கள்
கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை.
பாவகையாலும், பொருள் வகையாலும், எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன; அவையே எட்டுதொகை நூல்கள். இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எட்டுத்தொகை நூல்களாவன; நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாம்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என
இத்திறத்த எட்டுத் தொகை.
என்னும் பழம்பாடல் எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்துகிறது.
பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் என்று இருவகையாகப் பிரிக்கிறது தொல்காப்பியம்.
1) புறப்பொருள் (புறம்) - பாடப்படுவோரின் வீரம், கொடை, புகழ், வெற்றி, நிலையாமை போன்ற
புறப்பொருட்களைப் பாடுவது புறத்திணையாகும்.
2) அகப்பொருள் (அகம்) - தலைவன் தலைவியின் காதல், ஊடல், பிரிவு முதலான அகப் பொருட்களைப்
பாடுவது அகத்திணையாகும்.
|
எட்டுத்தொகை |
திணை
|
பாடல்கள் |
1 |
நற்றிணை |
அகத்திணை |
400 |
2 |
குறுந்தொகை |
அகத்திணை |
402 |
3 |
ஐங்குறுநூறு |
அகத்திணை |
500 |
4 |
பதிற்றுப்பத்து |
புறத்திணை |
100 |
5 |
பரிபாடல் |
அகத்திணை |
70 (கிடைத்தது 22) |
6 |
கலித்தொகை |
அகத்திணை |
150 |
7 |
அகநானூறு |
அகத்திணை |
400 |
8 |
புறநானூறு |
புறத்திணை |
400 |
பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
என்னும் பழம்பாடல் பத்துப்பாட்டு நூல்களை வரிசைப்படுத்துகிறது
|
பத்துப்பாட்டு |
திணை
|
1 |
திருமுருகாற்றுப்படை |
புறத்திணை |
2 |
பொருநராற்றுப்படை |
புறத்திணை |
3 |
சிறுபாணாற்றுப்படை |
புறத்திணை |
4 |
பெரும்பாணாற்றுப்படை |
புறத்திணை |
5 |
முல்லைப்பட்டு |
அகத்திணை |
6 |
மதுரைக் காஞ்சி |
புறத்திணை |
7 |
நெடுநெல்வாடை |
அகத்திணை |
8 |
குறிஞ்சிப் பாட்டு |
அகத்திணை |
9 |
பட்டினப்பாலை |
அகத்திணை |
10 |
மலைபடுகடாம் |
புறத்திணை |
அழிவின் விளிம்பில் இருந்த அத்தகைய இலக்கியங்களைத் தேடி மீட்டெடுத்த பெருமை ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், ஆறுமுக நாவலர், தாமோதம் பிள்ளை ஆகியோரைச் சாரும்.
உள்ளுறை உவமை, இறைச்சி:
சங்ககாலப் புலவர்கள் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உக்திகளை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இவ்விரண்டையும் குறிப்புப் பொருள் உக்தி என்று அழைப்பர்.
குறிப்புப்பொருள் உக்தி:
1) உள்ளுறை உவமை
2) இறைச்சி
உள்ளுறை உவமை:
வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது உள்ளுறை உவமை. இதில், உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இராது; உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் புலப்படும். உவமிக்கப்படும் பொருள் தெய்வம் அல்லாத கருப்பொருளாக இருத்தல் வேண்டும். உள்ளே மறைவாகப் படிந்து கிடக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.
இறைச்சி:
உள்ளுறை உவமைகளைத் தாண்டி பாடலில் வெளிப்பட்ட பொருளை மீறி உள்ளுக்குள் மறைந்திருக்கும் இன்னொரு பொருள் இறைச்சியாகும்.
புறநானூறு:
புறம் + நான்கு + நூறு => புறநானூறு
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய புறத்திணைகளுக்குரிய துறைப்பொருட்கள் அமைந்த 400 பாடல்கள் கொண்டுள்ளதால் புறநானூறு என்று பெயர் பெற்றது.
இந்நூலை 'புறப்பாட்டு' எனவும், 'புறம்' எனவும் வழங்குவர். இந்நூலின் பாடல்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகும். இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் கிடைக்கவில்லை.
சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்கள், சிற்றரசர்கள், கடையெழு வள்ளல்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், படைவீரர்கள், கடைச்சங்கப் புலவர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் முதலியவற்றுக்கும் மேலாக தமிழர்களின் உயர்ந்த வாழ்வியல் சிந்தனைகளை இந்நூலால் நன்கு அறியலாம்.
இப்பாடல்கள் திணை என்ற பிரிவும், துறை என்ற உட்பிரிவும் கொண்டவை. புறநானூற்றில் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
நூல் |
புறநானூறு |
வேறு பெயர்கள் |
புறப்பாட்டு, புறம் |
எல்லை |
4 அடி முதல் 31 அடி வரை |
தொகுத்தவர் |
(பெயர் தெரியவில்லை) |
தொகுப்பித்தவர் |
(பெயர் தெரியவில்லை) |
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஔவையார் எழுதியதாக கிடைத்த பாடல்களை, அவற்றின் காலம், பாடல்களின் சொல்லாடல் மற்றும் கருத்துகளைக் கொண்டு ஔவையார் என்ற பெயரில் 4 புலவர்கள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் சங்க இலக்கியங்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார்; அவை, புறநானூறு (33 பாடல்கள்), குறுந்தொகை (15 பாடல்கல்), நற்றிணை (7 பாடல்கள்), அ்கநானூறு (4 பாடல்கள்). இவர் அதியாமானுடன் மிகுந்த நட்பு கொண்டவர். இவர் அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமானின் மகன் பொகுட்டெழினி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ ஆகிய மன்னர்களைப் பாடியுள்ளார்.
பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது ஔவையார் .
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் மூன்றாவது ஔவையார்.
தனிப்பாடல்களையும், முருகன் மீதான பக்திப் பாடல்களை யும் மிகுதியாகப் பாடியவர், இன்று நாம் பாட்டியாக வரைந்து போற்றி வணங்கும் ஒவ்வையார் இவரே.
பாடியவர் | பாரதம் பாடிய பெருந்தேவனார் |
பாடப்பட்டோன் | சிவபெருமான் |
திணை | பாடாண் |
துறை | கடவுள் வாழ்த்து |
பாவகை | நேரிசை ஆசிரியப்பா |
கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியு மவ்வே றென்ப
கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனு மேத்தவும் படுமே
எல்லா வுயிர்க்கு மேம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே.
கண்ணி கார் நறுங்கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே.
பாடாண்திணை: (பாடு + ஆண் + திணை)
பாடப்படும் ஆண்மகனது வெற்றி, புகழ், வீரம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணையாகும்.
"பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே" - தொல்காப்பியம் (பாடல் 78)
[பொருள்: பாடாண் திணை கைக்கிளை என்னும் அகத்திணைக்கு ஈடான புறத்திணை; ஆராய்ந்தால் எட்டு வகையினை உடையது. எட்டு வகையாவன: கடவுள் வாழ்த்து, வாழ்த்தியல், மங்கலம், செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை, பரிசிற்றுறை, கைக்கிளை, வசைவகை]
கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்படுவது கடவுள் வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
சிவபெருமான்
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று ஈற்று அயலடி (இறுதி அடிக்கு முந்தைய அடி) 3 சீர்களாகவும் (சிந்தடி), ஏனைய அடிகள் 4 சீர்களாகவும் (அளவடி) வருவது நேரிசை ஆசிரியப்பாவாகும்.