தினம் ஒரு குறள்

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

அவையஞ்சாமை (குறள் எண்: 726)

பொருளுரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?
உறுப்பினர் பகுதி
 

நல்வழி

 

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஔவையார் எழுதியதாக கிடைத்த பாடல்களை, அவற்றின் காலம், பாடல்களின் சொல்லாடல் மற்றும் கருத்துகளைக் கொண்டு ஔவையார் என்ற பெயரில் 4 புலவர்கள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் சங்க இலக்கியங்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார்; அவை, புறநானூறு (33 பாடல்கள்), குறுந்தொகை (15 பாடல்கல்), நற்றிணை (7 பாடல்கள்), அ்கநானூறு (4 பாடல்கள்). இவர் அதியாமானுடன் மிகுந்த நட்பு கொண்டவர். இவர் அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமானின் மகன் பொகுட்டெழினி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ ஆகிய மன்னர்களைப் பாடியுள்ளார்.

பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது ஔவையார் .

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் மூன்றாவது ஔவையார்.

தனிப்பாடல்களையும், முருகன் மீதான பக்திப் பாடல்களை யும் மிகுதியாகப் பாடியவர், இன்று நாம் பாட்டியாக வரைந்து போற்றி வணங்கும் ஒவ்வையார் இவரே.

பாலுந்  தெளிதேனும்  பாகும்  பருப்புமிவை
நாலுங்  கலந்துனக்கு  நான்தருவேன்  -  கோலஞ்செய்
துங்கக்  கரிமுகத்துத்  தூமணியே  நீயெனக்குச்
சங்கத்  தமிழ்மூன்றுந்  தா.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

பதவுரை:

பாலும் - பசுவின் பாலும்
தெளிதேனும் - தெளிந்த தேனும்
பாகும் - வெல்லப் பாகும்
பருப்பும் - பருப்பும்
இவை நாலும் - இவை நான்கையும்
கலந்து உனக்கு நான் தருவேன் - கலந்து உனக்கு நான் படையலிடுவேன்
கோலம்செய் - அழகினைச் செய்கின்ற
துங்க - உயர்ந்த (துங்கம் - உயர்ச்சி, பெருமை)
கரிமுகத்து - யானை முகத்தையுடைய
தூமணியே - தூய மாணிக்கமான விநாயகக் கடவுளே
நீஎனக்கு - நீ எனக்கு
சங்க தமிழ் மூன்றும் தா - சங்கம் அமைத்து வளர்க்கப்பட்ட இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்ப் புலமையும் தருக

பொருளுரை:

பால், தெளிந்த தேன், பாகு, பருப்பு ஆகிய நான்கையும் கலந்து உனக்கு நான் படையலிடுவேன். அழகு செய்கின்ற உயர்ந்த கரிய யானை முகமுடைய தூய மாணிக்கத்தைப் ஒத்த விநாயகக் கடவுளே! நீ எனக்கு சங்கம் அமைத்து வளர்க்கப்பட்ட இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்ப் புலமையும் தருவாயாக.

 

கருத்து: கரிய யானை முகமுடைய விநாயகக் கடவுளே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தருவாயாக.

குறிப்பு:

                                                          விநாயகர்