தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

இறைமாட்சி (குறள் எண்: 384)

பொருளுரை:
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
உறுப்பினர் பகுதி

மூதுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஔவையார் எழுதியதாக கிடைத்த பாடல்களை, அவற்றின் காலம், பாடல்களின் சொல்லாடல் மற்றும் கருத்துகளைக் கொண்டு ஔவையார் என்ற பெயரில் 4 புலவர்கள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் சங்க இலக்கியங்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார்; அவை, புறநானூறு (33 பாடல்கள்), குறுந்தொகை (15 பாடல்கல்), நற்றிணை (7 பாடல்கள்), அ்கநானூறு (4 பாடல்கள்). இவர் அதியாமானுடன் மிகுந்த நட்பு கொண்டவர். இவர் அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமானின் மகன் பொகுட்டெழினி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ ஆகிய மன்னர்களைப் பாடியுள்ளார்.

பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது ஔவையார் .

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் மூன்றாவது ஔவையார்.

தனிப்பாடல்களையும், முருகன் மீதான பக்திப் பாடல்களை யும் மிகுதியாகப் பாடியவர், இன்று நாம் பாட்டியாக வரைந்து போற்றி வணங்கும் ஒவ்வையார் இவரே.

வாக்குண்டாம்  நல்ல  மனமுண்டாம்  மாமலராள்
நோக்குண்டாம்  மேனி  நுடங்காது  -  பூக்கொண்டு
துப்பார்  திருமேனித்  தும்பிக்கை  யான்பாதம்
தப்பாமற்  சார்வார்  தமக்கு.

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பதவுரை:

வாக்கு உண்டாம் - சொல்வளம் உண்டாகும்

நல்ல மனம் உண்டாம் - நல்ல சிந்தனை உண்டாகும்

மாமலராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் திருமகளின்

நோக்கு உண்டாம் - அருட்பார்வை உண்டாகும்

மேனி - உடம்பு

நுடங்காது - (பிணிகளால்) வாட்டமுறாது

பூக்கொண்டு - மலர் கொண்டு

துப்பார் (துப்பு + ஆர்) - பவளம் போன்ற சிவந்த (துப்பு - சிவப்பு; ஆர் - நிறைந்த)

திருமேனி - திருமேனியையும்

தும்பிக்கையான் - துதிக்கையை உடைய விநாயகக் கடவுளின்

பாதம் - திருவடிகளை

தப்பாமல் - நாள்தோறும் தவறாமல்

சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு

 

பொருளுரை:

          பவளம் போன்ற திருமேனியையும் துதிக்கையை உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை நாள்தோறும் தவறாமல் அடைந்து பூசை செய்வோருக்கு சொல்வளம் உண்டாகும், நல்ல சிந்தனை உண்டாகும், பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் திருமகளின் அருட்பார்வை உண்டாகும்உடம்பு பிணிகளால் என்றும் வாட்டமுறாது.

 

 கருத்து: விநாயகக் கடவுளை வழிபடுவோர்க்கு எல்லா நலன்களும் உண்டாகும். 

குறிப்பு:

                                                        விநாயகர்