வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
அவையஞ்சாமை (குறள் எண்: 726)
ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும், சிறு சொற்றொடர்களால் அமைக்கப்பெற்ற நன்நெறி நூலாகும். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள அறங்களை, சிறு பிள்ளைகளும் எளிதாய் நினைவில் வைத்துக் கொள்ளும்படி எளிமையான மிகச்சிறிய சொற்றொடர்களால் தெளிவாக அமைக்கப்பெற்றுள்ளது. ஆத்திச்சூடி 2 சீர்களாலும் கொன்றைவேந்தன் 4 சீர்களாலும் அமையப்பெற்றுள்ளது. இதில், அகர வரிசைப்படி எழுத்துகளை முதலில் உடையனவாக, மிக இளம்பருவத்திலேயே பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் அருங் கருத்துடனும் பெரும் நோக்கத்துடனும் ஆக்கப்பெற்றுள்ளது ஆத்திசூடியின் சிறப்பு.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பல பெண் புலவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஔவையார் எழுதியதாக கிடைத்த பாடல்களை, அவற்றின் காலம், பாடல்களின் சொல்லாடல் மற்றும் கருத்துகளைக் கொண்டு ஔவையார் என்ற பெயரில் 4 புலவர்கள் வாழ்ந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஔவையார். இவர் சங்க இலக்கியங்களில் மொத்தம் 59 பாடல்களை இயற்றியுள்ளார்; அவை, புறநானூறு (33 பாடல்கள்), குறுந்தொகை (15 பாடல்கல்), நற்றிணை (7 பாடல்கள்), அ்கநானூறு (4 பாடல்கள்). இவர் அதியாமானுடன் மிகுந்த நட்பு கொண்டவர். இவர் அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமானின் மகன் பொகுட்டெழினி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ ஆகிய மன்னர்களைப் பாடியுள்ளார்.
பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது ஔவையார் .
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் மூன்றாவது ஔவையார்.
தனிப்பாடல்களையும், முருகன் மீதான பக்திப் பாடல்களை யும் மிகுதியாகப் பாடியவர், இன்று நாம் பாட்டியாக வரைந்து போற்றி வணங்கும் ஒவ்வையார் இவரே.
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய
வேந்தன் - வேந்தனான சிவபெருமானுக்கு
செல்வன் - செல்வனான விநாயகக் கடவுளுடைய
அடியிணை - திருவடிகளை, பாதங்களை
என்றும் - எந்நாளும்
ஏத்தி - வாழ்த்தி
தொழுவோமியாமே (தொழுவோம் + யாமே): தொழுவோம் - வணங்குவோம்; யாமே – நாமே
கொன்றைப் பூமாலையைச் சூடிய வேந்தனான சிவபெருமானின் செல்வனாகிய விநாயகக் கடவுளின் திருவடிகளை நாம் என்றும் வாழ்த்தி வணங்குவோம்.
கொன்றை மலர்
அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்
அன்னையும் - தாயும்
பிதாவும் - தந்தையும்
முன் - (நமக்கு) முதன்முதலாக
அறி - அறியப்படும்
தெய்வம் - தெய்வங்கள்
தாயும் பிதாவும் நாம் முதன்முதலாக அறியப்படும் தெய்வங்கள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஆலயம் - கோயிலுக்குப் போய்
தொழுவது - (கடவுளை) வணங்குவது
சாலவும் - மிகவும்
நன்று - நல்லது
கோயிலுக்குப் போய் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
இல்லறம் - (மனைவியோடு கூடிச் செய்யும்) இல்லறம்
அல்லது - அல்லாததான துறவறமானது
நல் அறம் - நல்ல அறமாகும்
அன்று - இல்லை
மனைவியோடு கூடி வாழும் இல்லறமே நல்ல அறமாகும்; துறவறம் அல்ல.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
ஈயார் - ஈயதவர், ஈகை புரியாதவர்
தேட்டை - சேர்த்த செல்வம்
தீயார் - (கள்வர் முதலிய) தீயவர்
கொள்வர் - எடுத்துக் கொள்வர்
வறியவர்களுக்கு ஈயதவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை தீயவர்கள் எடுத்துக் கொள்வர்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
உண்டி - உணவு
சுருங்குதல் - குறைத்தல்
பெண்டிர்க்கு - பெண்களுக்கு
அழகு - அழகாகும், நன்று
உணவை குறைத்து அளவாக உண்பது பெண்களுக்கு நன்று.
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
ஊருடன் - ஊராருடன்
பகைக்கின் - பகைத்துக் கொண்டால்
வேருடன் - வம்சத்துடன், வழித்தோன்றல் இல்லாமல்
கெடும் - கெட்டுவிடும்
ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக்கொண்டால் அடியுடன் அழிந்துவிடுவான்; ஊருடன் கூடி வாழ்.
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
எண்ணும் - கணிதமும்
எழுத்தும் - மொழி இலக்கணமும்
கண் - இரண்டு கண்கள்
என - என்று சொல்லும்படி
தகும் - தக்கதாகும், பொருந்தும்
கணிதமும் மொழி இலக்கணமும் மனிதர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத் தகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து
ஏவா - ஏவாதவாறு நடந்துகொள்ளும்(ஏவுதற்குமுன் குறிப்பறிந்து செய்கிற)
மக்கள் - பிள்ளைகள்
மூவா மருந்து: மூவா - மூப்பு இல்லாமல் செய்யும், முதுமை அடையச்செய்யாத; மருந்து - மருந்தாகும்.
செய் என்று ஏவாதவாறு குறிப்பறிந்து செய்கிற பிள்ளைகள் அவர்களைப் பெற்றவர்களுக்கு முதுமை இல்லாமல் செய்யும் மருந்து போன்றவர்கள்.
ஐயம் புகினும் செய்வன செய்
ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும்
செய்வன - செய்யத்தக்கவைகளை
செய் - செய்
செய்யத் தக்க நல்லசெயல்களை பிச்சை எடுக்க நேர்ந்தாலும் செய்.
ஒருவனை பற்றி ஓரகத்து இரு
ஒருவனை - தகுந்த ஒருவனை
பற்றி - (துணையாகப்) பற்றிக்கொண்டு
ஓரகத்து (ஓர் + அகத்து) - ஓரிடத்தை மனையாகக் கொண்டு
இரு - வாழ்
தகுந்த ஒருவனை வாழ்க்கைத் துணையாகப் பற்றிக்கொண்டு புகுந்த இடத்தை மனையாகக் கொண்டு வாழ்.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
ஓதலின் - ஓதலினும், ஓதுவதை விடவும் (வேதம்)
நன்றே - நல்லது
வேதியர்க்கு - பிராமணருக்கு
ஒழுக்கம் - நல்லொழுக்கம்
வேதம் ஓதுவதைக் காட்டிலும் பிராமணருக்கு நன்மை தருவது நல்லொழுக்கப் பண்பாகும்.
ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
ஒளவியம் - பொறாமை
பேசுதல் - பேசுவது
ஆக்கத்திற்கு - செல்வத்திற்கு (ஆக்கம் - செல்வம், வளம்)
அழிவு - கேடு தருவதாகும்
பொறாமை வார்த்தைகள் பேசுவது ஒருவரின் செல்வத்திற்கு அழிவைத் தரும்.
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
அஃகமும் காசும் - தானியத்தையும் காசையும்
சிக்கெனத் தேடு - வீண்செலவு செய்யாமல் சேர்த்திடு (சிக்க - சுருக்கி)
தானியத்தையும் காசையும் சிக்கனத்தை கடைபிடித்துச் சேர்த்திடு.
கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
கற்பு எனப்படுவது - கற்பென்று சொல்லப்படுவது
சொல் - சொன்ன சொல்
திறம்பாமை - தவறாது நடத்தல்
கற்பு என்று சொல்லப்படுவது, சொன்ன சொல் மாறாது நடத்தல்.
சொன்ன சொல் மாறாமல் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதே கற்பு என்பது.
மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறுபட்டு நடவாமை என்றும் பொருள் சொல்லப்படுகிறது.
காவல்தானே பாவையர்க்கு அழகு
காவல்தானே - கற்பு நெறி காத்துக்கொள்வது தான்
பாவையர்க்கு - பெண்களுக்கு
அழகு - அழகு, உயர்வு
கற்பு நெறி காப்பதுதான் பெண்களுக்கு உயர்வானது.
கிட்டாதாயின் வெட்டென மற
கிட்டாதாயின் - கிடைக்காமல் போனால்
வெட்டென (வெட்டு + என) - உடனே (துண்டித்துக் கொண்டதாக)
மற - மறந்துவிடு
விரும்பிய பொருள் கிடைக்காமல் போனால் அப்பொருளை உடனே மறந்துவிடு.
கீழோர் ஆயினும் தாழ உரை
கீழோர் ஆயினும் - உனக்குக் கீழ்ப்பட்டவர் ஆனாலும்
தாழ - குரல் தாழ்த்தி
உரை - பேசு
உனக்குக் கீழ்ப்பட்டவர் ஆனாலும் அவரிடம் குரல் தாழ்த்தி இனிமையாகப் பேசு.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குற்றம் - குற்றம், தவறு, குறை
பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால்
சுற்றம் - சுற்றத்தார் (உறவு, நட்பு)
இல்லை - இல்லை
தவறு செய்யாத மனிதர் இல்லை. ஒவ்வொருவர் செய்த தவறுகளையும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் சுற்றத்தார் இல்லை.
கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
கூர் அம்பு ஆயினும் - கூர்மை பொருந்திய அம்பு இருந்தாலும்
வீரியம் - வலிமை, வீரம்
பேசேல் - பேசாதே
உன் கையில் கூரிய அம்பு இருந்தாலும் வீரம் பேசாதே.
உன்னிடம் ஆயுதம் இருந்தாலும் அமைதி வழியை ஆராயாமல் வீரம் பேசாதே.
கெடுவது செய்யின் விடுவது கருமம்
கெடுவது - கெடுதல், தீமை
செய்யின் - செய்தால்
விடுவது - (உறவை) விட்டு விடுவது
கருமம் - நற்செயல்
கெடுதல் செய்யும் உறவை விட்டு விலகுவதே நற்செயலாகும்.
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
கேட்டில் (கேடு + இல்) - கேடு நேரும் பொழுதில்
உறுதி - மனந்தளராமை
கூட்டும் - சேர்க்கும்
உடைமை - செல்வம், நலம்
கேடு நேரும் பொழுது மனம் தளராது இருத்தல், இழந்தவற்றை மீண்டும் சேர்க்கும்.
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
கைப்பொருள் தன்னின் - கையில் இருக்கும் செல்வங்களை விட
மெய்ப்பொருள் - நிலையான செல்வம்
கல்வி - கல்வியே
கையில் இருக்கும் செல்வங்களை விட நிலையான செல்வம் கல்வி தான்.
கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
கொற்றவன் - அரசன்
அறிதல் - அறிந்திருத்தல்
உற்ற இடத்து - தக்க இடத்தில்
உதவி - உதவி செய்யும்
அரசன் அறியும்படி இருத்தல் ஒருவனுக்குத் தகுந்த இடங்களில் உதவி செய்யும்.
அரசனுக்கு அறிமுகமானவராக இருத்தல் ஒருவனுக்குத் தகுந்த இடங்களில் உதவி செய்யும்.
கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
கோட்செவி - கோள் கேட்கும் குணமுடையவனது காது (கோள் - பிறர் மீது சொல்லும் பொறமை வார்தைகள்)
குறளை - கோள் சொற்கள் (குறளை - கோள்சொல்லுதல்)
காற்றுடன் நெருப்பு - காற்றுடன் சேர்ந்த நெருப்பு போன்றது
கோள் கேட்கும் குணமுடையவனது காதில் விழும் கோள் சொற்கள், காற்றுடன் சேர்ந்த நெருப்பு போன்று மூளும்.
கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
கௌவை - பழிச்சொற்கள்
சொல்லின் - சொன்னால்
எவ்வருக்கும் - எல்லாருக்கும் (எவருக்கும் என்பதன் விகாரம்)
பகை - பகையாவான்
பிறர் மீது பழிச்சொற்கள் சொல்லிக் கொண்டிருப்பவன் எல்லோருக்கும் பகையாவான்.
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
சந்ததிக்கு - வழித்தோன்றல்களுக்கு, தலைமுறைக்கு
அழகு - அழகு, கடமை
வந்தி - வஞ்சனை
செய்யாமை - செய்யாது இருத்தல்
தலைமுறைக்கு அழகு பெற்றோருக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் வஞ்சனை செய்யாமல் இருத்தல்.
வந்தி என்பதற்கு மலடு என்ற பொருள் கொண்டு, சந்ததிக்கு அழகு தலைமுறை இல்லாதவாறு மலடு செய்யாதிருத்தல் என்றும் பொருள் கூறப்படுகிறது.
சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
சான்றோர் - கல்வி, நற்பண்புகள் நிறைந்தவர்
என்கை - என்கையில், என்று சொல்லுகையில் (என்று பிறர் சொல்வது)
ஈன்றோட்கு - ஈன்றோளுக்கு, பெற்றவளுக்கு
அழகு - அழகாகும், மகிழ்ச்சி
தன் பிள்ளையை சான்றோர் என்று பிறர் சொல்லக் கேட்பது பெற்றவளுக்கு மகிழ்ச்சியாகும்.
சிவத்தை பேணின் தவத்திற்கு அழகு
சிவத்தை - சிவபெருமானை
பேணின் - வழிபட்டால் (பேணுதல் - வழிபடுதல், போற்றுதல்)
தவத்திற்கு - செய்யும் தவத்திற்கு
அழகு - அழகாகும், சிறப்பு
சிவபெருமானை போற்றி வழிபடுவது செய்யும் தவத்திற்கு சிறப்பு.
சீரை தேடின் ஏரை தேடு
சீரை (சீர் + ஐ ) - நல்வாழ்வை (சீர் - நல்வாழ்வு)
தேடின் - தேடினால்
ஏரை (ஏர் + ஐ) - உழுவு செய்ய ஏர் கருவியை
தேடு - தேர்ந்தெடு
நல்வாழ்வு பெற விரும்பினால் உழவுத் தொழிலைத் தேர்ந்தெடு.
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
சுற்றத்திற்கு - உறவினருக்கு
அழகு - நன்று
சூழ இருத்தல் - கூடி இருப்பது, ஒன்றுபட்டு இருத்தல்
உறவினர்களுக்கு அழகு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக ஒன்றுசேர்ந்து இருப்பதாகும்.
உறவினர்களுக்கு அழகு மகிழ்ச்சியின் பொழுது கொண்டாடுவதற்கும், துன்பத்தின் பொழுது தேற்றுவதற்கும் கூடி இருப்பதாகும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
சூதும் - சூழ்ச்சியும்
வாதும் - வீண் வாதமும்
வேதனை - வேதனை, துன்பம்
செய்யும் - தரும்
சூழ்ச்சி புரிவதும் வீண் வாதம் புரிவதும் ஒருவருக்கு துன்பத்தைத் தரும்.
சூது என்பதற்குச் சூதாட்டம் என்ற பொருளும் உண்டு. சூதாட்டமும் வீண்வாதமும் துன்பத்தைத் தரும் என்றும் பொருள் கூறப்படுகிறது.
செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
செய்தவம் - செய்யும் தவத்தை
மறந்தால் - மறந்தால், தவறினால்
கைதவம் - பொய், தவறான எண்ணங்கள்
ஆளும் - ஆளும், ஆட்கொள்ளும்
ஒருவன் ஆழ்ந்த சிந்தனையில் செய்யும் தவத்தை செய்யத் தவறினால், தவறான எண்ணங்கள் ஆட்கொள்ளும்.
சேமம் புகினும் யாமத்து உறங்கு
சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
சோம்பர் என்பவர் தேம்பி திரிவர்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
தீரா கோபம் போரா முடியும்
துடியா பெண்டிர் மடியில் நெருப்பு
தூற்றும் பெண்டிர் கூற்று எனத்தகும்
தெய்வம் சீறின் கைதவம் மாளும்
தேடாது அழிக்கின் பாடாமுடியும்
தையும் மாசியும் வை அகத்து உறங்கு
தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
தோழனோடும் ஏழைமை பேசேல்
நீர் அகம் பொருந்திய ஊரகத்து இரு
நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
நாடு எங்கும் வாழ கேடு ஒன்றும் இல்லை
நிற்க கற்றல் சொல் திறம்பாமை
நுண்ணிய கருமமும் எண்ணி துணி
நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
நெஞ்சை ஒளித்த ஒரு வஞ்சகம் இல்லை
நேரா நோன்பு சீர் ஆகாது
நைபவர் எனினும் நொய்ய உரையேல்
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
நோன்பு என்பது கொன்று தின்னாமையே
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
பீரம்பேணி பாரம் தாங்கும்
புலையுயம் கொலையும் களவும் தவிர்
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
பையச் சென்றால் வையம் தாங்கும்
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
போனகம் என்பது தான் உழந்து உண்டல்
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
மாரி அல்லது காரியம் இல்லை
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மேழிச் செல்வம் கோழை படாது
மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
மொழிவது மறுக்கின் கருமம் அழிவது
மோனம் என்பது ஞான வரம்பு
வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
விருந்து இலோர்க்கு பொருந்திய ஒழுக்கம்
வீரன் கேண்மை கூரம்பு ஆகும்
உரவோர் என்கை இரவாது இருத்தல்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை
வையம் தோறும் தெய்வம் தொழு
ஒத்த இடத்து நித்திரை கொள்
ஒத்த - ஏற்ற
இடத்து - இடத்தில்
நித்திரை - உறக்கம்
கொள் - செய், மேற்கொள்
உனது மனது ஒத்தவரது இடத்தில் (இல்லத்தில்) மட்டும் விருந்தினராகத் தங்கி உறங்கு.
"உடலுக்கு பொருந்தும்படியான இடத்தில் உறங்கு" என்றும் இப்பாடல் பொருள் கூறப்படுகிறது.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்
ஓதாதார்க்கு - படிக்காதவர்க்கு (நல்ல நூல்களை படிக்காதவர்களுக்கு)
இல்லை - இருக்காது
உணர்வொடும் - அறிவோடு (உணர்வு - அறிவு)
ஒழுக்கம் - ஒழுக்க நெறி
நல்ல நூல்களை படிக்காதவர்களுக்கு நல்ல அறிவும் ஒழுக்க நெறியும் இருக்காது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவு நன்று
இல்லற மல்லது நல்லற மன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்
ஏவா மக்கண் மூவா மருந்து
ஐயம் புகினுஞ் செய்வன செய்
ஒருவனைப் பற்றி யோரகத் திரு
ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்
ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு
அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு
கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை
காவ றானே பாவையர்க் கழகு
கிட்டா தாயின் வெட்டென மற
கீழோ ராயினுந் தாழ வுரை
குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை
கூரம் பாயினும் வீரியம் பேசேல்
கெடுவது செய்யின் விடுவது கருமம்
கேட்டி லுறுதி கூட்டு முடைமை
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
கொற்றவ னறித லுற்றிடத் துதவி
கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு
கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை
சந்ததிக் கழகு வந்திசெய் யாமை
சான்றோ ரென்கை யீன்றோட் கழகு
சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு
சீரைத் தேடி னேரைத் தேடு
சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்
சூதும் வாதும் வேதனை செய்யும்
செய்தவ மறந்தாற் கைதவ மாளும்
சேமம் புகினும் யாமத் துறங்கு
சையொத் திருந்தா லைய மிட்டுண்
சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர்
சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர்
தந்தைசொன் மிக்க மந்திர மில்லை
தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை
திரைகட லோடியுந் திரவியந் தேடு
தீராக் கோபம் போரா முடியும்
துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு
தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்
தெய்வஞ் சீறிற் கைதவ மாளும்
தேடா தழிக்கிற் பாடா முடியும்
தையும் மாசியும் வையகத் துறங்கு
தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது
தோழ னோடு மேழைமை பேசேல்
நீரகம் பொருந்திய வூரகத் திரு
பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்
பாலோ டாயினுங் கால மறிந்துண்
பிறன்மனை புகாமை யறமெனத் தகும்
பீரம் பேணி பாரந் தாங்கும்
புலையுங் கொலையும் களவுந் தவிர்
பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம்
பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும்
பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்
பையச் சென்றால் வையந் தாங்கும்
பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர்
போனக மென்பது தானுழந் துண்டல்
மருந்தே யாயினும் விருந்தோ டுண்
மாரி யல்லது காரிய மில்லை
மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
மீகாம னில்லா மரக்கல மோடாது
முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்
மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்
மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு
மேழிச் செல்வம் கோழை படாது
மைவிழி யார்தம் மனையகன் றொழுகு
மொழிவது மறுக்கி னழிவது கருமம்
மோன மென்பது ஞான வரம்பு
வளவ னாயினு மளவறிந் தழித்துண்
வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும்
விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம்
வீரன் கேண்மை கூரம் பாகும்
உரவோ ரென்கை யிரவா திருத்தல்
ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு
வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை
வேந்தன் சீறி னாந்துணை யில்லை
வையந் தோறுந் தெய்வந் தொழு
வொத்த விடத்து நித்திரை கொள்
வோதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம்