கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
அவையஞ்சாமை (குறள் எண்: 722)
உலகந் தோன்றிய துடனே தோன்றிய
உயரிய மொழிநம் செந்தமிழ் - மண்
நலமுற முப்பால் அறத்திருக் குறளதை
அருளிய பரம்பொருள் நம்தமிழ்.
தொல்காப் பியத்தை துகிலாய் உடுத்திய
தெய்வம் தமிழெனும் திருமகள் - மறை
திருக்குறள் நெற்றித் திலகம் திருத்திய
அறவடி வாகியப் பெருமகள்.
ஐம்பெருங் காப்பிய அணிகலன் சூடிய
அருந்தமிழ் அமிழ்தப் பெருமழை - அவள்
ஐயிரு விரலணி பத்துப் பாட்டென
அழகுற அணிந்த ஆயிழை.
எட்டுத் தொகையிடை அட்டிகை கட்டிய
தமிழவள் புன்னகை குறுந்தொகை - திசை
எட்டும் வியந்திடும் காவிய காப்பிய
இலக்கியம் வழங்கிய பெருந்தகை.
சிலப்பதி காரச் சிலம்புகள் பூட்டிய
மலரடி மாமகள் பூந்தமிழ் - முழு
உலகத் தமிழர் உடல்கள் சேர்ந்து
சுமக்கும் ஓருயிர் தீந்தமிழ்.
விளக்கென உய்யும் திசைவழி காட்டும்
தமிழொரு கலங்கரைப் பேரொளி - தன்னை
அளக்க முனைவோர் புருவம் உடைக்கும்
அன்னைத் தமிழ்வான் பெருவெளி.
தோற்றம் காணும் முயற்சியில் எல்லாம்
தோற்றுப் போனது வரலாறு - மனித
ஆற்றல் தாண்டிய மாமொழி யேஎம்
தாய்மொழி ஆனது பெரும்பேறு.