தமிழ் உலகம்

தினம் ஒரு குறள்

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.

பகைமாட்சி (குறள் எண்: 868)

பொருளுரை:
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
உறுப்பினர் பகுதி
 
 2
 
தமிழினம்
 
பிரிவு
இனம் 
 
தலைப்பு
தமிழினம்
 
கல்மண்  காற்றொலி  தோன்றுகை  தோன்றிய
அன்னைத் தமிழே வணக்கம் - நீ
அரும்பெரும் இனத்தின் தொடக்கம்.


ஆயிரம் முற்பலன் அமைந்தே அடைந்தோம்
அன்னைத் தமிழவள் தாய்மடி - இந்த
அலைகடல் உலகவள் காலடி.


தாய்ப்பால் சுவையொடு தாலாட் டிசையாய்த்
தமிழ்ப்பால் ஊட்டும் இனமிது - தமிழ்த்
தாண்டிய சுவைமிகு அமிழ்தெது?


உயிரும் மெய்யும் உயிர்மெய் ஆயிதம்
உயிரில் கலந்த உறவு - பல
பிறவிகள் கடந்த பிணைவு.


சிற்பம் ஓவியம் கோட்டைக் கோயில்கள்
உயரிய கலைகள் படைத்தோம் - மனித
ஆற்றல் எல்லைகள் உடைத்தோம்.


யாழ்பறை குழல்கிணை முரசெனப் பலவகை
நுண்ணிசைக் கருவிகள் வடித்தோம் - ஓசை
உள்தாண்டி ஒலிநுட்பம் படித்தோம்.


காதல் உறவை ஏக்கம் பிரிவை
அன்பை அகமென பகுத்தோம் - பல
ஆயிரம் பாக்கள் வகுத்தோம்.


பாடாண் பொதுவியல் கொடைபுகழ் மறத்தை
வாழ்வின் புறமென பிரித்தோம் - உயர்
வாழ்வினை பாடலில் குறித்தோம்.


கூர்முனை ஆய்தம் குருதியும் வீரமும்
போர்முனை எங்கும் பதித்தொம் - காக்கும்
மறத்தையும் அறமென மதித்தோம்.


கூரிரு கொம்புடன் சீறிடும் காளையை
மார்போடு சேர்த்தள்ளி விளையாடுவோம் - இன
மானத்திற் கெங்கேயும் களமாடுவோம்.


அகமும் புறமும் அறவழி நடந்து
மானுடம் மாண்புறக் குறள்கொடுத்தோம் - அரச
அதிகாரம் அறந்தவற சிலம்புடைத்தோம்.


காற்றலையில் தமிழதிர்வின் ஒலிமூச்சில் உயிர்வாழும்
உலகிருக்கும் வரையெங்கும் தமிழொலிக்கும் - எங்கள்
மரபணுக்கள் உள்ளாய்ந்தால் தமிழிருக்கும்.


உமிழ்நீரைத் தேனாக்கும் மொழியான தமிழாலே
உலகோரை உறவென்று அணைப்போம் - தங்கத்
தமிழைநம் உயிர்தாண்டி நினைப்போம்.


வெறுங்காற்று மூச்சானால் வெடித்துவிடும் இதயமென
தமிழ்கலந்து சுவாசிக்கும் இனமே - மொழி
இழந்தால்நாம் உயிர்வாழும் பிணமே!


உரக்கச் சொல்வேன் தமிழுக் காயெனை
இறக்கச் சொன்னால் இறப்பேன் - மீண்டும்
மறுபடி தமிழ்மடி பிறப்பேன்.
பெருமிதம்